Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள் : கேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள் : கேகர்

Published:Updated:

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!

##~##

என் தோழியின் சமையலறையில் ஒரு வெள்ளை பேப்பரைக் கட்டித் தொங்க விட்டிருந்தாள். விசாரித்தேன். ''மாதத்துக்கு வேண்டிய மளிகை சாமான்களை வாங்கி னாலும், சில நேரங்களில் சில பொருட்கள் தீர்ந்துவிடுகிறது. கடைக்குப் போகும்போதும் வாங்க நினைத்த பொருள், சமயத்தில் மறந்து விடுகிறது. அதையெல்லாம் நினைவில் வரும்போதே, இந்த பேப்பரில் குறித்து வைத்துவிடுவேன். பின் கடைக்குச் செல்லும் போது, பேப்பரை எடுத்துக்கொண்டு போய் வாங்கி வந்துவிடுவேன். மீண்டும் சமைய லறையில் ஒரு புது பேப்பரைக் கட்டித் தொங்கவிட்டு விடுவேன்!'' என்றாள் பெருமை யுடன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

சமையலறையில் பேனாவும், பேப்பரும் இருந்தால் வசதிதான்!

- இந்து செல்வம், நெற்குன்றம்

'செல்'லைச் சொல்லாதே!

சமீபத்தில் நானும் என் தோழியும், அவளது புதுமனை புகுவிழா விசேஷத்துக்காக பூஜைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றோம். லிஸ்ட்டில் இருந்த பல பொருட்கள் இல்லாததால், ''மதியம் சரக்கு வந்ததும், உங்க வீட்டுல டோர் டெலிவரி பண்ணிடறோம். அட்ரஸ், போன் நம்பர் சொல்லுங்க...'' என்றார் கடைக்காரர். முக வரியை சொன்ன தோழி, சுற்றிலும் கவனித்து சட்டென முகம் மாறி, ''உங்க செல் நம்பர் சொல்லுங்க... மிஸ்டு கால் கொடுக்கறேன்'' என்று சொல்லி, அவ்வாறே செய்தாள்.

அனுபவங்கள் பேசுகின்றன !

கடையில் இருந்து வெளியேறியதும், ''கடையில நின்னுட்டிருந்த ஆண் வாடிக்கையாளர்கள் எல்லாரும் நான் முகவரி சொல்லும்போது கவனிச்சுட்டே இருந்தாங்க. அதனாலதான் செல் நம்பரை சொல்லல. கடைக்காரரும் புரிஞ்சுக் கிட்டார். பொது இடத்துல நம்ம முகவரி, செல் நம்பர் இதையெல்லாம் சத்தம் போட்டு பிறருக்குத் தெரியும்படி சொன்னா, வேண்டாத பிரச்னைகள்தான் வரும்!'' என்றாள் உஷாராக!

- ஜி.கே.எஸ்.பரிமளாமூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

உபயோகிப்பாளர்கள் கவனிக்கவும்!

குளிப்பதற்காக பாத்ரூமில் வாட்டர் ஹீட்டரை வாளி தண்ணீரில் போட்டாள் என் மகள். சில நிமிடங்களில் பவர்கட் ஆகிவிட, இருந்த நீரில் குளித்துவிட்டு, சாப்பிட்டு, கிளம்பிவிட்டாள். வீட்டில் வேலையில் மூழ்கியிருந்த நான், பாத்ரூமில் 'பட்’டென ஒரு சத்தம் கேட்க, ஓடிச் சென்று பார்த்தேன். ஹீட்டர் ஜோலி முடித்துக் கொண்டிருந்தது.

அனுபவங்கள் பேசுகின்றன !

பவர்கட் ஆனதும் பின்னையும் எடுக்காமல், ஸ்விட்சையும் ஆஃப் செய்யாமல், ஹீட்டரை மட்டும் தரையில் எடுத்துப் போட்டுச் சென்றிருக்கிறாள். பவர் வந்ததும் அதை யாரும் கவனிக்காமல்விட, 'பட்’டாகி விட்டது. பவர்கட் படுத்தியெடுக்கும் இந்தக் காலத்தில் லைட், ஃபேன் போன்ற வற்றை நாம் உடனே ஆஃப் செய்ய முடிந்தாலும், அயர்ன் பாக்ஸ், ஹீட்டர் போன்றவற்றை கவனித்து ஆஃப் செய்ய மறந்துவிடுகிறோம். ஆனால், அதற்கு நான் கொடுக்கும் விலையும், விளைவுகளும் அதிகம்!

வெளியில் கிளம்பும்போது ஒரு தடவை எல்லா ஸ்விட்ச்களையும் சரிபார்ப்பது, காலத்தின் கட்டாயம்!

- ஏ.லதா, பாளையங்கோட்டை

பென்சில் பிரச்னைக்கு தீர்வு!

எல்.கே.ஜி படிக்கும் என் மகன், பென்சில், எரேஸர் முதலியவற்றை அடிக்கடி பள்ளியிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவான். கேட்டால், ''எங்க வெச்சேன்னு தெரியலம்மா'', ''ராஜேஷ் எடுத்துட்டாம்மா'' என்று தினம் ஒரு காரணம் சொல்வான். ஒருநாள் ஐந்து பென்சில், ஐந்து எரேஸர் வாங்கிக் கொண்டு அவன் பள்ளிக்குச் சென்ற நான், கிளாஸ் டீச்சரைப் பார்த்தேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

''மிஸ்... இவன் அடிக்கடி பென்சில், எரேஸரை தொலைச்சுடறான். இந்த பாக்ஸ்ல இவன் பெயர் எழுதியிருக்கு. இதுல அஞ்சு பென்சில், எரேஸர் இருக்கு. சில நோட் புக்ஸை நீங்களே வாங்கி வெச்சுக்கற மாதிரி, இதையும் கிளாஸ்லயே வெச்சுக்கங்க. கிளாஸ் வொர்க் பண்ணும்போது அவனுக்கு யூஸ் பண்ணக் கொடுத்து, வீட்டுக்குக் கிளம்பும்போது மறுபடியும் வாங்கிக்கோங்க'' என்றேன். உடனே மிஸ், ''தினமும் எனக்கும் இதோ பிரச்னைதாங்க. சில பேரன்ட்ஸ் வந்து சண்டையே போடுறாங்க. உங்க யோசனை நல்லா இருக்கு... இனி நீங்க சொல்ற விஷயத்தை கடைப்பிடிக்கிறோம்'' என்று சந்தோஷமாக அந்த பென்சில், எரேஸர் பாக்ஸை வாங்கிக் கொண்டார்!

மற்ற பள்ளிகளிலும் இதைக் கடைப்பிடிக்கலாமே!

- எஸ்.மகேஸ்வரி, கொரட்டூர்