Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

வாய்ப்பைக் கொடுங்கள்... வருங்கால சந்ததிக்கு!

##~##

தோழி, தன் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்திருந்தாள். அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக சாக்லேட், பலூன், வளையல், ஹேர்பேண்ட், பொம்மை  என்று விதவிதமாக வாங்கி வைத்திருந்ததை என்னிடம் காட்டியவள், விருந்தினர்களின் வருகைக்         காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால், வந்து சேர்ந்த யாருமே தங்களின் குழந்தைகளை அழைத்துவரவில்லை. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிர்ந்த தோழி, 'எங்கே குழந்தைகள்..?’ என்று ஒவ்வொருவரிடமும் கேட்க, 'டியூஷன்’, 'டிராயிங் கிளாஸ்’, 'செஸ் கிளாஸ்’ என்று விதவிதமாகக் கிடைத்தன பதில்கள். ஏமாற்றமடைந்த தோழி, தான் ஆசையாக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களை பெற்றோர்களிடமே கொடுத்தனுப்பி, பிள்ளைகளிடம் சேர்ப்பிக்கச் சொன்னாள். தோழியின் முகத்தில் இருந்த வருத்தத்தைப் பார்த்த நான், சொந்தங்களும் நட்புகளும் கூடும் எல்லா விழாக்களுக்கும் குழந்தைகளை நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அந்த நிமிடம் முதல் முடிவெடுத்தேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

'இன்றைய சந்ததிக்கு படிப்பைத் தாண்டி உறவுகள், பாரம்பரியம், கலாசாரம், கூடி மகிழ்தல் எல்லாம் தெரியவே இல்லை' என்கிற வருத்தக் குரல்களை அவ்வப்போது, ஆங்காங்கே கேட்க முடிகிறது. ஆனால், வாய்ப்புகளை நாமே தடுத்துவிட்டு, வருத்தப்படுவதில் என்ன பிரயோஜனம் என்பதை அந்தத் தருணம்தான் நான் உணர்ந்து கொண்டேன்!

- ஜானகி ரங்கநாதன், சென்னை-4

ஆசிரியை சொல்லித் தந்த 'ஆஹா’ பண்பாடு!

சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது, அரசுப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் என் அருகே அமர்ந்திருந்தனர். அவர்கள் பிஸ்கட் சாப்பிடும்போதும், நீர் அருந்தும்போதும் தவறாமல் எனக்கும் அன்புடன் தந்தார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடவில்லை. அதோடு, முன் ஸீட்டில் அழுதுகொண்டிருந்த சிறு குழந்தைக்கு பிஸ்கட் தந்து, விளையாடி, சிரிக்க வைத்தனர். கலகலவென்று பல கேள்விகள் கேட்டு, பதிலையும் கவனமாக உள்வாங்கிக் கொண்டனர்.

இடையில் ஒரு முதிய தம்பதி பேருந்தில் ஏற, சடாரென்று அந்தப் பள்ளிக் குழந்தைகள் எழுந்து, அவர்களை அங்கு அமர வைத்தனர். என் காலை தெரியாமல் மிதித்ததற்காக 'ஸாரி' சொன்னதோடு, அடிக்கடி 'நன்றி' எனவும் கூறி என்னை ஆச்சர்யப்படுத்தினர்.

அனுபவங்கள் பேசுகின்றன !

இம்மாதிரி நல்ல பழக்கங்களை பின்னால் அமர்ந்திருக்கும் தங்கள் டீச்சர்தான் சொல்லித் தந்தார் எனவும் அந்தக் குழந்தைகள் கூற... பேருந்தில் இருந்த பலரும் அந்த ஆசிரியையைப் பாராட்டினோம்.

அடிப்படைப் பண்புகளை வளர்க்கும் இம்மாதிரி ஆசிரியர்களும், அதனை சமர்த்தாக பின்பற்றும் மாணவர் களும் பாராட்டுக்குரியவர்களே!

- சுபா, சேலம்

மருந்து மாத்திரை... உஷார், உஷார்!

'இப்படியெல்லாம் நடக்குமா என்ன?!’ என்று வியக்க வைக்கும்படி சில விஷயங்கள் நடக்குமே, அதில் ஒன்றுதான் இந்தச் சம்பவமும். 22 வயதாகும் என் தம்பி மகளுக்கு, அவள் அம்மா, ஒரு ரூபாய் நாணயத்தின் அளவு உள்ள மாத்திரையையும் தண்ணீரையும் தந்துவிட்டு கிச்சனுக்குள் போக, டி.வி. பார்த்தபடி அவள் மாத்திரையை விழுங்க, சட்டென தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டது. அந்த மாத்திரையை, 'நான்கு துண்டுகளாக்கிதான் முழுங்கணும், உடைச்சுப் போட்டுக்கோம்மா’ எனச் சொன்னதை காதில் வாங்காமல் அவள் வாயில் போட, அது உணவுக் குழலுக்கும் மூச்சுக் குழலுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டது.

எவ்வளவு பிரயத்தனப்பட்டும் தொண்டையில் அடைத்துக் கொண்ட மாத்திரை உள்ளேயும் போகவில்லை, வெளியேயும் வரவில்லை. இரவு 11 மணிக்கு, அவர்களின் அபார்ட்மென்ட்டிலுள்ள ஒரு டாக்டரிடம் போக, 'கிரிட்டிக்கல் பொசிஷன்' என்று கூறி, தன் காரிலேயே பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அந்த டாக்டர். அங்குள்ள டாக்டர்கள் உடனடியாக இரண்டு ஊசி போட்டு, ''வாந்தி வரக்கூடாது, முகம் நீலமாகக் கூடாது. தூங்கட்டும். மூச்சுவிட சிரமப்பட்டால் உடனே கூப்பிடுங்கள்'' என கூறிச் சென்றனர்.

அனுபவங்கள் பேசுகின்றன !

'மூச்சுவிட்டா நெஞ்செல்லாம் வலிக்குது, பேச முடியலைம்மா’ என்று சைகை மூலம் சொல்லும் மகளைப் பார்த்து பெற்றோர் பதறி நின்றனர். வேண்டாத தெய்வமில்லை, பிரார்த்தனையில்லை, இரவு முழுக்க இமைக்காமல் மூவரும் தவிக்க... விடியற்காலை 4 மணிக்குதான் மாத்திரை மெதுவாக கரைந்து, சுவாசிக்க இடம்விட்டது.

மருந்து, மாத்திரை விஷயத்தில் உஷார். அதிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது வேண்டும் இரட்டை உஷார்... உஷார்!

- ராதா நரசிம்மன், பெங்களூரு