Published:Updated:

நான் மதன் கார்க்கி ஆனது எப்படி?

நான் மதன் கார்க்கி ஆனது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
நான் மதன் கார்க்கி ஆனது எப்படி?
 ##~##
ணிப் பொறியியலில் துணைப் பேராசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் புதினமும் நவீனமும் கலந்த இன்றைய தமிழ் இளைஞன். கணினி இயந்திரங்களுக்கு தமிழ் ஆணைகள் வடிவமைப்பவர், 'எந்திரன்’ படத்திலும் பணிபுரிவார். பாடல் எழுதுவார்!

'' 'இது ஒரு பொன் மாலைப் பொழுது’ பாடலை என் அப்பா வைரமுத்து எழுதிய அந்த தினத்தில்தான் நான் பிறந்தேன். ஐந்து வயது முதலே பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். இருப்பினும் எனக்கு அப்போது தமிழ் மீது ஈடுபாடு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், பாடல்களின் மீது பெரும் காதல் இருந்தது. பாடல்கள் எழுத வேண்டும் என்ற நினைப்போ, அதற்கான முனைப்போ எனது கல்லூரிப் பருவம் முடியும் வரை என்னிடம் இல்லை. பி.இ., கணிப் பொறியியல் முடித்த பிறகு, ஆஸ்திரேலியா சென்று இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரியும், டாக்டர் பட்டமும் பெற்றேன்.

இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர். கணிப் பொறியியலை முன்வைத்து, தமிழில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். அந்தச் சமயத்தில்தொடர் பணிச் சூழலுக்கு இடையில், என் மனம் ஒரு சின்ன இளைப்பாறலுக்கு ஏங்கியது. 'எந்திரன்’ படத்துக்கான முனைப்பில் டைரக்டர் ஷங்கர் இருக்கும்போது, எழுத்தாளர் சுஜாதா இறந்துவிட்டார். அந்தப் பட உருவாக்கத்தில் சுஜாதா இடத்தைச் சிறிதளவேனும் நிரப்ப முடியும் என்று தோன்றியது எனக்கு. அந்த ஆசையை அப்பாவிடம் தெரிவித்தேன். அப்பா நான் திரைத் துறைக்கு வருவதை விரும்பவில்லை.

நான் அப்பா பெயரைப் பயன்படுத்தாமல், ஷங்கர் அவர்களை அணுகினேன். என்னிடம் பேசிவிட்டு, அந்த ஸ்க்ரிப்ட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ, திருத்தங்கள் வர முடியுமோ அதைச் செய்ய அனுமதித்தார். பிறகு, நான் வைரமுத்துவின் பையன் எனத் தெரிய வந்த பிறகு, அதை அவரால் ரசிக்க முடிந்தது. ஒரு மெஷினுக்கு காதல் மனநிலை வருமா என எழுதித் தரச் சொல்லிக் கேட்டதற்கு, நான் எழுதிய பாடல்தான்... 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ’! இப்போது தமிழ் '3 இடியட்ஸ்’ படத்துக்கும் பாடல் எழுதுகிறேன்.

நான் மதன் கார்க்கி ஆனது எப்படி?

இடையில் 'அகராதி’ என்ற இணையத்தமிழ் அகராதியைப் பெரும்பாடுபட்டு உருவாக்கி இருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக உண்டான அகராதி இது. ஏராளமான கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு வார்த்தை பயன்பாட்டுக்கு வரும்போது எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைமுறைப்படுத்தி இருக்கிறோம். ஒரே வார்த்தை... திருக்குறளிலும் திரைப் பாடலிலும் எப்படி எல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்ற விவரணைகள் நிரம்பிய அகராதியில், சுமார் மூன்று லட்சம் வார்த்தைகள் இடம் பெற்று உள்ளன. 75,000 கலைச் சொற்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் அதில் கலைச் சொற்கள் சேர்க்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த 'அகராதி’தான் தமிழுக்கான உன்னதத் தேடல் முயற்சிக்கான வடிகாலாக இருக்கும் என நம்புகிறேன்.

இதற்கும் அடுத்தபடியாக, பாடல் பொறியியல் (lyric engineering) என்ற வடிவத்தில் அதிக ஈடுபாடுகொண்டு ஆராய்ச்சியில் இருக்கிறேன். ஒரு கட்டடம் கட்டுவதுபோல, ஒரு மென்பொருள் உருவாவதுபோலவே ஒரு பாடலும் உருவாகிறது. அது மேலோட்டமாக உணர்ச்சிகளின் வெளிப்பாடாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் அறிவியலும் கணிதவியலும் உண்டு. ஆம், பாடல் பொறியியல் என்பது அறிவியல், கணிதவியலை அடிப்படையாகக்கொண்டு தொழில்நுட்பம் மூலம் பாடல் உருவாக் கும் ஒரு முயற்சி. கணினியின் துணைகொண்டு பழைய பாடல்களை ஆராய்தல், புதிய பாடல்களை உருவாக்கும் முறைகளை வழங்குதல், பாடல் தயாரிக்கத் தேவையான கருவிகளைக் கண்டறிதல், உருவாக்குதல், பாடலை மதிப்பிடுதல் போன்ற பல கூறுகளைக்கொண்டதே பாடல் பொறியியல் ஆகும். 'தானானா’ போன்ற வார்ப்புக்களில் தமிழில் உள்ள எத்தனை சொற்கள் அடங்கும் என்பதைக் கால் நொடியில் கண்டு பட்டியலிடும் கருவிகளை உருவாக்கி உள்ளோம். ஒரே சொல்லுக்குப் பல வார்த்தைகள் இருக்கும்பட்சத்தில், இசைக்குப் பொருந்தும் வார்த்தைகளையும், பயன்பாட்டில் இருக்கும் அல்லது இல்லாத வார்த்தைகளையும் தேவைக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கவும் முடியும். இவை அல்லாது பாடல் ஆசிரியர்களின் நுட்பங் களை ஆராய்ந்து, அவர்களின் ஆக்கல் திறனைப் படிமமாக்கல் (modelling) என்பது மற்றொரு திட்டப் பணி. இதன் மூலம் ஒரு புதிய பாடலை... கண்ணதாசன் அவர்களின் நடையிலோ, பட்டுக் கோட்டை, வாலி, வைரமுத்து போன்றோர் நடை யிலோ மாற்றிப் பார்க்க முடியும்.

இதோடு, என் மனைவி நந்தினி கார்க்கியின் துணைகொண்டு, 'மெல்லினம்’ என்ற அமைப்பை உருவாக்கி, குழந்தைகளுக்கான கதை உலகத்தை உருவாக்கி இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை நான் பத்தாவது படித்து முடிப்பேனா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது. எனது ஆசிரியர்கள் பத்தாவது முடித்த கையோடு நீ அரசியலுக்கோ, சினிமாவுக்கோ போய்விடுவாய் என்று சொன்னார்கள். நேர்மையாகச் சொன்னால், நான் அப்படி ஆகிவிடுவேனோ என்று பயந்த காலங்கள் இருந்தன. இனியும் இப்படி இருப்பது நியாயம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இந்த விழிப்பு.

எல்லாவற்றையும் புதுசாகக் கற்றுக்கொண்டால் போதாது. நிச்சயம் அதில் நமது பங்களிப்பு இருந்தாக வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் புதுமையைக் கொண்டுவராமல் மாற்றங்கள் இல்லை. நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும் என நம்பினால், முயற்சிகள் மேற்கொண்டால், வெற்றிக்கு நம்மைத் தவிர வேறு போக்கிடம் இல்லை!

படம்:கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு