Published:Updated:

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

பிரீமியம் ஸ்டோரி
உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்
##~##
ல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா வைப்போல இளைஞர்கள் நிறைந்த தேசம்தான் வெகு வேகமாக முன்னேறும் என்று கணிக்கிறார்களே சமூகவியலாளர்கள்... அது ஏன்? பல்கிப் பெருகியிருக்கும் இளைஞர் படையினர் மாதச் சம்பள உத்தியோகத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த நிறுவன மேம்பாட்டுக்குச் சளைக்காமல் உழைப்பர் என்பதாலா? இல்லை... நிச்சயமாக இல்லை. மாதச் சம்பளக்காரர்கள், ஒரு தேசத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த தேசத்தின் தேவை என்பது, தொழில் முனைவோர்களின் தேவைதான். தொழில் முனைவோர்கள் என்பவர்கள் யார்? கிட்டத் தட்ட 100 சதவிகிதம் இளைஞர்கள்! ஆக, வல்லரசு அந்தஸ்துக்குத் தேவை, அணு ஆயுதங்களும் பிரித்வி ஏவுகணைகளும் அல்ல; தங்கள் அந்தஸ்தோடு, தங்களைச் சார்ந்து இருக்கும் சமூகத்தின் அந்தஸ்தையும் உயர்த்தும் வல்லமைகொண்ட இளைஞர்கள்தான்!

ஓ.கே. தொழில் முனைவோரின் அவசியம், முக்கியத்துவம் குறித்து ஒரு பரந்த பார்வை கிடைத்திருக்கிறதா? இப்போது தொழில் முனைவர் ஆவதற்கான வழிமுறைகள், வழிகாட்டல்கள் குறித்து அலசுவோம். ''சமுதாய வளர்ச்சி என்றால் என்ன? எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நிலைதானே! அதற்குத் தகுந்த வழி... சுயதொழில்தான்!'' என்று தொடங்குகிறார் சிவஞானம். மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய சென்னைக் கிளையின் இயக்குநர்.

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

''இப்போதைய நிலையில், கிராமங்களில் இருந்து மக்கள் வேலைக்காகப் புலம் பெயராமல் இருந்தால், அதுவே வளர்ச்சிக்கான குறியீடுதான். விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றி, அதனை விற்பனைக்கு வைப்பது, கிராமத்தில் இருக்கும் முதன்மையான சிறுதொழில். 'நான் அவ்வளவா படிக்கலையே... அனுபவம் இல்லையே... பணம் இல்லையே...’ என்று குறைகளை முன் வைக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு, இந்தத் தொழில்தான் தொழில் முனைதலுக்கான நல்ல தேர்வு.

கிராமங்களில் இருந்து மக்கள் புலம் பெயர்வதை முதலில் நிறுத்த வேண்டும். எப்படி? கிராமங்களில் பொருளாதார நிகழ்வுகளை அதிகமாக்க வேண்டும். பொருளாதார நிகழ்வு களை அதிகரிக்க விவசாயம்தான் அடிப்படை. ஆனால், அங்கு விவசாயம் சரியில்லை. ஏன்? காரணம், விவசாயத்தில் நாம் இன்னும் புதிய முறைகளைச் செயல்படுத்தவில்லை. அப்படிச் செயல்படுத் தினால் விவசாயம் செழித்து, விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி, அதைச் சந்தையில் புகுத்தி, பொருளாதார நிகழ்வுகளான கொடுக்கல், வாங்கலை அதிகரிக்கச் செய்யலாம். அதன் பிறகு, நகரங்களுக்கு இணையான வேலைவாய்ப்புகள் கிராமங்களிலும் உருவாகும். ஆக, வேலைவாய்ப்புகளுக்கு அடிப்படையாக இருப்பதே இந்த சுயதொழில்தான். இதைத்தான், 'Make a job or Take a job’ என்பார்கள்.

நீங்கள் என்ன தொழில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், உங்கள் தொழில் தரமானதாக இருக்க வேண்டும். விலை கட்டுப்படியானதாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் உங்களின் சேவையை நுகர்வோர்களுக்குக் கடத்த வேண்டும். இது தொழில் முனைவோர்களுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற புதிதாகத் தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசு நிறைய பயிற்சிகளை (பார்க்க பெட்டிச் செய்தி) வழங்குகிறது. சென்னை, கோவை, தூத்துக்குடி, திரு நெல்வேலி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் எங்களின் கிளைகள் இருக்கின்றன. அங்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் கலந்துகொண்டு பயன் பெறலாம்!'' என்கிறார் சிவஞானம்.

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development) இயக்குநர் முனைவர் கே.பார்த்த சாரதி.

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில், சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதை மேலாண்மை செய்வதில் தான் திணறி, நடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே, திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள். 'முதலீடு வேண்டுமோ? தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.

தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!

இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!

புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!

 

 தொழில் முனைவோர் மேம்பாட்டுப்   பயிற்சித் திட்டங்கள்

 வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

திட்ட அறிக்கை

 தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை    தயாரித்தல்

 சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை    தயாரித்தல்

 நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு    தொழில்களுக்கான பதிவுகள்

மத்திய அரசு மற்றும் மாநில   அரசுகளின் சலுகைகள் குறித்த     தகவல்கள்

 திறன் மேம்பாட்டுப் பயிற்சி

 

உங்களுக்காக இவை...

நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு  www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!

அரசு கடனுதவித் திட்டங்கள்

மத்திய அரசு

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!

 

''நான் நகல் அல்ல... ஓர் அசல் உதாரணம்!''

உங்களில் யார் அடுத்த அம்பானி? தகவல்கள்... தகுதிகள்... திறன்கள்

'ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்!’ என்ற பழமொழியை மாற்றி, தன்னைக் கொல்கிற வார்த்தைகளை மாற்றி வென்றிருக்கிறார், கோவை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவரான விபின் சந்தர். தமிழ் வழியில் கல்வி கற்றவர். அதனாலேயே கல்லூரியில் சேர்ந்தபோது, பல கேலிகளுக்கு ஆளானவர். அந்த கேலிகளுக்குப் பதில் சொல்ல, மற்றவர்களிடம் இருந்து நாம் வேறுபட வேண்டும் என்கிற எண்ணத்தை செயல் வடிவமாக்கிய இவர், தற்போது, கல்லூரி மாணவர் ப்ளஸ் இளந் தொழில் அதிபர். சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட புராஜெக்ட்களை முடித்துத் தருகிறார் இவர்.  

''எனக்கு ஆரம்பத்தில் இருந்தே கம்ப்யூட்டர் மேல ஆர்வம் அதிகம். இணையதளத்தில் வெப்சைட் டெவலப்பிங்/டிசைனிங்/ ஹோஸ்டிங் செய்துட்டு இருக்கேன். கணினியில் Hypertext pre processor எனப்படும் PHP மொழி எனக்கு அத்துப்படி. அதில் பல புராஜெக்ட் பண்ணித் தந்தேன். படிப்புக்குப் படிப்பும் ஆச்சு, தொழிலுக்குத் தொழிலும் ஆச்சு.

அந்த உழைப்பில் கிடைச்ச பணத்தை வெச்சு நல்ல திறனான கம்ப்யூட்டர் வாங்குறது, சின்னச் சின்ன வேலைகளை வெளியே கொடுத்து முடிச்சு வாங்குறது, புதுப் புது சாஃப்ட்வேர்களை அப்டேட் பண்றதுன்னு தீவிரமா இயங்கத் தொடங்கினேன். எல்லா நேரத்திலும் என் அப்பா, அம்மா எனக்குத் துணை நின்னது பெரிய பலம். தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி, எதையும் சமாளிக்கும் திறமைதான்.தவிர, நல்ல விஷயங்கள் எங்க இருந்தாலும் அதைக் கத்துக்கிறதும் அவசியம்!'' என்பவரிடம் 'உங்கள் பிஸினஸ் ரோல் மாடல் யார்?’ என்று கேட்டால், ''யாருடைய நகலாகவும் நான் இருக்க விரும்பலை. எனக்கு நானே ரோல் மாடல்!'' என்கிறார் தன்னம்பிக்கை ததும்பும் குரலில்!

 ந.வினோத்குமார், க.ராஜுவ் காந்தி, ம.பிருந்தா
படங்கள்: ஜெ.தான்யராஜு, ரஞ்சித், ஸ்ரீதர், சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு