Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள் : சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள் : சேகர்

Published:Updated:

 ஒரே கிஃப்ட்ல ரெண்டு மாங்கா!

##~##

எங்கள் வீட்டின் திருமண வைபவத்துக்கு, நெருங்கிய நண்பர் ஒருவர் அலங்கரிக்கப்பட்ட பெரிய கிஃப்ட் பார்சல் ஒன்றைக் கொடுத்தார். மறுநாள் வீட்டில் ஒவ்வொரு பரிசுப் பொருளாக பிரித்துக் கொண்டிருந்தபோது, நண்பரின் பரிசு என்னவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் கையில் எடுத்தால், எடையே இல்லாமல் தக்கைபோல் இருந்தது. பிரித்தால், பாக்ஸுக்குள் பாக்ஸ், பாக்ஸுக்குள் பாக்ஸ் என்று போய்க்கொண்டே இருந்தது. இறுதியாக, இரண்டாயிரம் ரூபாய் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இதை கவரிலேயே கொடுத் திருக்கலாமே... எதுக்காக இத்தாம் பெரிய பார்சல்' என்று குழம்பிய எங்கள் வாண்டுகள், அந்த நண்பரையே அலைபேசியில் அழைத்து  கேட்கவும் செய்தனர்.

அவரோ... ''திருமணத்துக்குப் பிந்தைய செலவுகளுக்கு உபயோகமா இருக்கும் என்பதால, பணமா கொடுக்கணும்னு எனக்கு ஆசை. மேடையில எல்லாரும் பார்க்குற மாதிரி கிஃப்ட் கொடுக்கணும்னு உங்க ஆன்ட்டிக்கு ஆசை. அதான் ரெண்டையும் ஒண்ணா நிறைவேத்திட்டோம்!'' என்றார் சிரித்தபடி.

அனுபவங்கள் பேசுகின்றன !

பரிசைவிட, கணவன் - மனைவி இருவரின் விருப்பத்தையும் ஒன்றாக்கிய அவர்களின் புரிதலும் புத்திசாலித்தனமும் பிடித்திருந்தது எங்களுக்கு!

- ஏ.கஷ்மீர், திருச்சி

சிறுநீரை அடக்கினால்... ஆபத்து!

 என் தோழி, தன் மகளை, ''அவ ரொம்ப கூச்ச சுபாவம்'' என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். ஆனால், அதைக் களைவதற்கான வழிகளை மட்டும் மேற்கொள்ளவே இல்லை. பதின்பருவத்தில் இருக்கும் அந்தப் பெண்ணோ பள்ளி, உறவினர்கள் வீடு என்று எங்கு சென்றாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்கக்கூட கூச்சப்பட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்த பிறகுதான் முடிப்பாள். இதையும்கூட பெருமைபோலவே பேசுவாள் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் மகளுக்கு வயிற்றுவலி படுத்தியெடுக்கவே, ஸ்கேன் செய்து பார்த்தபோது, கிட்னியில் கல் என்றும், லேசர் சிகிச்சை செய்ய 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் சொன்ன டாக்டர், இயற்கைக் கழிவை, அந்தந்த நேரத்தில் அகற்றாமல் வெகு நேரத்துக்கு அடக்கிய அவளுடைய பழக்கத்தையும் அறிந்து, கடுமையாகச் சாடினார்.

இன்றைய போட்டி உலகில் கூச்ச சுபாவம் என்பது மைனஸ் பாயின்ட். கூடவே, சீரான இடைவெளியில் சிறுநீர் உள்ளிட்ட விஷயங்களை செய்து முடிப்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையும் நாம் உணரவேண்டும்!

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

இப்படியும்கூட ஏமாற்றப்படலாம்!

என் தோழி குடிதண்ணீருக்காக வீட்டில் பிளான்ட் போட்டிருக்கிறாள். ஒரு மதிய நேரத்தில் அவள் வீட்டுக்கு இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். ''புத்தாண்டை முன்னிட்டு எங்க நிறுவனத்துல இருந்து ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுக்கச் சொல்லி அனுப்பி  இருக்காங்க... எல்லா பிராண்ட் பிளான்ட்டுக்கும் சர்வீஸ் பண்றோம்!'' என்று கூறியிருக்கிறார்கள். பிளான்ட் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, வேறு ஏதேதோ வேலைகளைச் செய்துகொண்டிருந் திருக்கிறாள்.

அனுபவங்கள் பேசுகின்றன !

அரை மணி நேரத்தில், ''கம்ப்ளீட்டா சர்வீஸ் செய்தாச்சு மேடம்!'' என்று கிளம்பிச் செல்ல, தோழியும் நன்றி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறாள். பிறகுதான் அவளுக்குத் தெரிந்திருக் கிறது... தான் அசந்த நேரம் செல்போன், கைப்பை, எமர்ஜென்சி டார்ச் லைட் என்று இன்னும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவர்கள் சுருட்டிச் சென்றது.

உஷார்... இப்படியும்கூட நீங்கள் ஏமாற்றப்படலாம்!

- ஜெ.இந்து ஜெகன், திண்டுக்கல்

கொள்கை சரி... இங்கிதம்?

சமீபத்தில் ஒரு விசேஷ நாளன்று நெருங்கிய உறவினர் வீட்டுக்கு ஸ்வீட் கொடுக்கச் சென்றேன். அவர்களின் காலில்  விழுந்து நமஸ்கரிக்க... வாயார, மனதார வாழ்த்தி ஆசீர்வதித்து, குங்குமம் வைத்துவிட்டனர். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!

அனுபவங்கள் பேசுகின்றன !

அப்போது, அவர்களின் பக்கத்து வீட்டு மாமி அங்கு வர, வயதில் மூத்தவர் என்பதால் அவர் காலிலும் ஆர்வத்துடன் விழுந்தேன். அவரோ, ''இந்த மாதிரி கால்ல விழறதெல்லாம் சுத்தமா பிடிக்காது. சக மனுஷங்க கால்ல விழறது முட்டாள்தனம். என்ன படிச்சிருக்கியோ நீ?'' என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த விஷயம் எனக்கு அவமானத்தை ஏற்படுத்தினாலும்... 'காலில் விழக்கூடாது என்கிற கொள்கையில் அவர் உறுதியாக இருக்கிறார்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டேன் அதேசமயம், 'நான்கு பேருக்கு மத்தியில் இப்படி பிறரைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்கிற இங்கிதத்தையும் அவர் தெரிந்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே' என்றும் தோன்றியது!

- வே.சந்தியா, சூளைமேடு

பிடித்ததும்... பிடிக்காததும்!

அனுபவங்கள் பேசுகின்றன !

மதியவேளையில், குடும்பத்தினர் அனைவரும் வட்டமாக சாப்பிட அமர்ந்தோம். அந்த நேரம் பார்த்து ''கொஞ்சம் மோர் இருந்தா கொடுங்க...'' என்றபடி வந்து நின்றார்  பக்கத்து வீட்டுப் பெண். நான் மோர் எடுத்துக்கொண்டிருந்த சமயம், ''இன்னிக்கு என்ன சமையல்? ஓ... முள்ளங்கி சாம்பாரா? எங்க வீட்டுல யாருக்குமே பிடிக்காது. எப்படித்தான் இதை சாப்பிடுறீங்களோ..?!'' என்றெல்லாம் கதைத்தபடியே, மோரை வாங்கிக்கொண்டு கிளம்பினார். ஆனால், எங்களுக்கோ சாப்பிடும் மூடே போய்விட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்... பிடிக்காமல் போகும். இதையெல்லாம்... இடம், பொருள், ஏவல் என்று கவனித்துச் செய்வதுதான் நாலு பேருக்கு நல்லது. நமக்குள்ளேயே வைத்துக்கொள் வது அதைவிட  நல்லது!

-கே.மஞ்சு, நாகப்பட்டினம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism