Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150

 வாசகிகள் பக்கம்

ரத்தம் சொட்டும் குழந்தை... இரக்கம் இல்லாத பள்ளி!

ப்ரீ-கே.ஜி படித்துக் கொண்டிருந்த என் மகன், பள்ளியில் பிள்ளைகளுடன் விளையாடும்போது கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு, சட்டை நனையும் அளவுக்கு ரத்தம் கொட்டியிருக்கிறது. வெறும் பஞ்சு மட்டும் வைத்து அழுத்தியபடி, பள்ளியில் இருந்து ஆயா மற்றும் உதவியாளர் இருவரும் டூ-வீலரில் அவனை அழைத்து வந்துள்ளனர். நான் வேலைக்குச் சென்றிருந்ததால்... என் தம்பியும், அம்மாவும் பையனை டாக்டரிடம் அழைத்துச் செல்ல, நான்கு தையல் போடும் அளவுக்குக் காயம். மறுநாள் பள்ளியின் பிரின்ஸிபாலிடம், ''எங்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு, குழந்தையை நீங்களே டாக்டரிடம் அழைத்துச் சென்று ஃபர்ஸ்ட் எய்ட் செய்திருக்கலாமே... நாங்களும் ஆஸ்பத்திரிக்கு வந்திருப்போமே. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்திருக்கிறது. அவ்வளவு நேரமும் ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது...'' என்று முறையிட்டேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

ஆனால், அவரோ... ''குழந்தைக்கு ஏதாவது என்றால், பள்ளி நிர்வாகம் பொறுப்பாகாது. அதனால்தான் அடிபட்ட குழந்தைகளை பெற்றோரிடம் அப்படியே (!) ஒப்படைத்து விடுவோம்'' என்றார் சர்வசாதாரணமாக. இப்போது என் பையனை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன்.

கல்வி வியாபாரமாகிவிட்ட சூழலில், யாரை நோக..?!

- ஆர்.மைதிலி, சென்னை

கண்றாவி ஜோடிகளே... திருந்துங்கள்!

சமீபத்தில் பேருந்தில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேன். அப்போது என் எதிர் ஸீட்டில் அமர்ந்திருந்த காதல் ஜோடி, பொது இடம் என்பதைக்கூட மறந்து, கால் மேல் கால் போடுவதும், கை மேல் கை போட்டு கை விரல்களைப் பிசைவதும், நெருங்கி அமர்ந்து ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்துகொள்வதும், ஆபாச வார்த்தைகளால் பேசிச் சிரிப்பதுமாக... பஸ் பயணிகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தனர். காதலர்கள் என்ற உறவையே கொச்சைப் படுத்துவதுபோல் நடந்துகொண்டார்கள். ஆனாலும் அதைப் பற்றிய எந்த கூச்சமோ, தயக்கமோ, 'தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால்..?’ என்ற பயமோ அவர்களுக்குத் துளியும் இல்லை. இங்கிதம் என்பதையே மறந்து, ஏதோ அவர்கள் இருவர் மட்டுமே அந்தப் பேருந்தில் இருப்பதுபோல் நடந்து கொண்டார்கள்.

அனுபவங்கள் பேசுகின்றன !

இதுபோன்ற கண்றாவி ஜோடிகளே... இனியாவது திருந்துவீர்களா?!

- ஜெ.ஜெயராணி, மதுரை

உடையில் மட்டும் போதுமா?

அனுபவங்கள் பேசுகின்றன !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் குடும்பத்துடன் ரயிலுக்காகக் காத்திருந்தோம். அருகில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த நவநாகரிகப் பெண்கள் மூவர், தத்தம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுவன் ''மம்மி... நான் மூச்சா போயிட்டேன்'' என்றான். உடனே அவன் அம்மா அவன் டிரவுசரைக் அவிழ்த்து, உள்ளே அணிந்திருந்த ஈர டயப்பரை கழற்றி கீழே போட்டார். புது டயப்பர் ஒன்றை எடுத்து அணிவித்து, பின் டிரவுசரையும் மாட்டிவிட்டார். பயன்படுத்திய டயப்பரைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்கிற பிரக்ஞை அந்தப் பெண்ணுக்கு சிறிதுகூட இல்லை. கூட இருந்த மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. பலரும் நடக்கும் நடைபாதையில் அது அப்படியே கிடந்தது. அரை மணி நேரம் கழித்து ரயில் வர, எந்தக் குற்ற உணர்வுமின்றி அவர்கள் ஏறிச் சென்றனர்.

நாகரிகம் உடையில் மட்டும்தானா... நடவடிக்கையில் வேண்டாமா?

- ஆர்.விஜயா ரவி ஈரோடு

கேமராவே... கொஞ்சம் ஒதுங்கு!

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பெரிய மண்டபம், ஆடம்பரமான விழா. மணமேடையைச் சுற்றி நான்கு வீடியோ கேமராமேன்கள், பல போட்டோகிராஃபர்கள் என்று ஏக கூட்டம்.

சினிமா செட்போல பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் என்ன சம்பிரதாயங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன என்று பார்வையாளர்களுக்குத் தெரியாத அளவுக்கு வீடியோ, போட்டோ ஆட்கள் மறைத்து நின்றனர் (மொபைல் கேமராவில் படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பி நிற்கும் பட்டாளம் தனி).

அனுபவங்கள் பேசுகின்றன !

ஏன் இத்தனை கேமராமேன்கள் என்று விசாரித்தால்... ''பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என்று தனித்தனியாக வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்களை ஏற்பாடு செய்துள்ளனர்.அவர்களுக்கு உதவியாளர்கள் என்று நான்கைந்து பேரும் கூடவே மேடையேறிருக்கிறார்கள். அதுதான் இந்த ஆர்ப்பாட்டம்’' என்றனர்.

இந்த சங்கடத்தைத் தவிர்க்க, திருமணங்களில் இருவீட்டாரும் கலந்து பேசி, வீடியோ, போட்டோவை ஒரே நபரிடமே ஒப்படைத்து, பிரின்ட் போடும்போது தனித்தனியாக கேட்டு வாங்கிக் கொள்ளலாமே! மொபைல் போன் பார்ட்டிகளையும் கட்டுப்படுத்தலாமே!

- எஸ்.சுபா மணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்