Published:Updated:

முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !

நம்பிக்கையூட்டிய நகைப் பயிற்சி !க.முகமது அபுதாஹீர்,படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.சிவக்குமார்

முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !

நம்பிக்கையூட்டிய நகைப் பயிற்சி !க.முகமது அபுதாஹீர்,படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.சிவக்குமார்

Published:Updated:
 ##~##

''ரொம்ப நன்றிங்க!''  - ஜனவரி 20 ஞாயிறு அன்று மதுரை, மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு, புன்னவன நாடார் அரங்கில் 'அவள் விகடன்' மற்றும் திருச்சி, ஏஎம் ஃபேன்ஸி இணைந்து நடத்திய 'நீங்களும் தொழிலதிபர்தான்’ பயிற்சி முகாமில் கலந்துகொண்ட பெண்கள், நிகழ்ச்சியின் இறுதியில் உள்ளத்தில் இருந்து சொன்ன வார்த்தைகள் இவை!

மாணவிகள், இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்பவர்கள், வயதான பெண்கள் என்று பல தரப்புப் பெண்களும், சென்னை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து முகாமில் பங்கேற்றது... நமக்கே ஆச்சர்யம். பயிற்சி முகாமுக்கான அனுமதிக் கட்டணமாக ரூபாய் 100 பெறப்பட்டு, கலந்துகொண்ட அனைவருக்கும் ரூபாய் 160 மதிப்பிலான நகை செய்யும் 'கிட்'டாக வழங்கியபோது, நம் வாசகிகளுக்கு ஆனந்தம்!

முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !
முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !

பயிற்சி பெற வந்திருந்த 386 பெண்களுக்கும், ஏஎம் ஃபேன்ஸியிலிருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள், செய்முறை வகுப்பை பொறுமையுடன் பொறுப்பேற்று நடத்தினர். குந்தன் நகைகளுக்கான செய்முறை, அரங்கம் முழுக்க குழுமியிருந்த அனைத்துப் பெண்களுக்கும் தெளிவாகத் தெரியும் வகையில் ஆங்காங்கே டி.வி. ஸ்கிரீன் வழியாகவும் காண்பிக்கபட்டது. பயிற்சியின்போதே ஃபேன்ஸி நகைகளுக்கான மெட்டீரியல்கள் வாங்கும் இடம், மார்க்கெட்டிங் விவரங்கள் என வாசகிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ராமலெட்சுமி... ''100 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, பல ஆயிரங்கள் லாபம் அள்ள வைக்கும் இந்தத் தொழிலை, இன்னிக்கு 'அவள்’ மூலமா கத்துக்கிட்டேன். அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததுக்கேற்ற பலன் கிடைச்சிருச்சு. ரொம்ப நம்பிக்கையோட வீடு திரும்புறேன்'' என்றார் உற்சாகமாக. இவரையே பிரதிபலித்தனர் பல தோழிகளும்!  

சில ஆண்டுகளுக்கு முன் 'அவள் விகடன்’ சார்பில் சென்னை, தீவுத்திடலில் நடத்தப்பட்ட மகளிர் திருவிழா பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, பயன்பெற்றவர் சென்னையைச் சேர்ந்த புஷ்பராணி. தற்போது, ஜுவல் மேக்கிங் தொழிலை சிறிய அளவில் செய்து வரும் இவரும் மதுரைக்கு வந்திருந்தார். ''குந்தன் நகைகளை சந்தைப் படுத்துதலில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவே இங்கு வந்தேன். என் தொழிலை மெருகேற்றுவதற்கான பயனுள்ள பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன'' என்றார் சந்தோஷமாக.

முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !
முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !

''மற்ற பொருட்கள்போல் அல்லாமல், இதனை சந்தைப்படுத்துவது மிக எளிது. நீங்கள் செய்த நகைகளை முதலில் உங்கள் குழந்தைகளும், நீங்களுமே அணிந்துகொள்ளுங்கள். அதைக் கேட்டு விசாரிப்பவர்களையே வாடிக்கையாளர் ஆக்குங்கள். ஆரம்ப காலத்தில் உறவினர்கள், தோழிகள், குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியைகளுக்கு அன்பளிப்பாக செய்துகொடுக்கலாம். இதுவே உங்கள் தொழிலுக்கு நல்ல விளம்பரமாக அமையும். பிறகு, ஃபேன்ஸி ஸ்டோர்களில் ஆர்டர் வாங்கும் அளவுக்கு வளரலாம்!'' என்று நம்பிக்கையூட்டினார் பயிற்சியை மேற்கொண்ட ஏஎம் ஃபேன்ஸி உரிமையாளர் அப்துல் அமீது.

அவரின் வார்த்தைகளை மனதில் அசைபோட்டபடி விடைபெற்றனர், நம் எதிர்கால தொழிலதிபர்கள்!

 அங்கேயே ஆரம்பமான பேங்க் லோன்!

முதலீடு 100 ரூபாய்...லாபம் ஆயிரங்களில் !

மதுரை மாவட்டம், குமரம் என்கிற ஊரிலிருந்து இந்தப் பயிற்சிக்காக வந்திருந்த உமா, பயிற்சி முடித்து மேடையேறி மைக் பிடித்தார். அப்போது, ''நான் எங்க பகுதியில ஸ்டேட் பேங்க் மேனேஜரா இருக்கேன். எங்க பேங்க்ல லோன் கேட்டு மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் நிறைய பேர் வருவாங்க. அவங்களுக்கு, குந்தன் நகைகள் செய்ற தொழில் சரியானதா இருக்குமானு தெரிஞ்சுக்கதான் இந்த வொர்க்ஷாப்ல கலந்துகிட்டேன். ரொம்ப திருப்தியா இருந்துச்சு. நீங்க அடுத்ததா நடத்தப் போற பயிற்சி முகாம்ல... நிச்சயமா அந்த சுயஉதவிக் குழுப் பெண்களை கலந்துக்கச் செய்வேன்'’ என்று அக்கறையுடன் சொன்னார்.

உமா மேடையைவிட்டு இறங்கியதும், ''நானும் இந்தப் பயிற்சிக்கு வந்திருக்கேன். என் பேரு சிவகாமி. 'சோடா ஹப்'புக்கான எஸன்ஸ் தயாரிக்கற தொழில் செய்ய முடிவு பண்ணியிருக்கேன். இதுக்கு 50 ஆயிரம் ரூபாய் லோன் வேணும். நீங்க தரமுடியுமா?'' என்று அங்கேயே கேட்டார்.

''அதுக்கென்ன, கொடுத்துட்டா போச்சு'' என்று ஆன் த ஸ்பாட் உத்தரவாதத்தை தந்த உமா, ''உரிய டாக்குமென்ஸோட வந்தீங்கனா.... பரிசீலனை பண்ணி லோன் கொடுக்கறேன்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

தற்போது, ''மேடம் கேட்டபடியே எல்லா டாக்குமென்ட்ஸையும் கொடுத்துட்டேன். கிட்டத்தட்ட லோன் கிடைச்ச மாதிரிதான். இன்னும் ஒரு சில பில்களைக் கொடுக்க வேண்டியிருக்கு. அதைக் கொடுத்துட்டா... லோன் கிடைச்சுடும்'' என்று சந்தோஷமாக நம்மிடம் தகவலை பகிர்ந்திருக்கிறார் சிவகாமி.

வாழ்த்துக்கள் !