ரெகுலர்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150
வாசகிகள் பக்கம்

துன்பம் நேர்கையில்..!

##~##

என் நெருங்கிய தோழி, உடல் நிலை சரியில்லாமல் இருக்க... அவளைப் பார்த்து வரவேண்டும் என்று பலமுறை முயற்சித்தாலும்... வீட்டு வேலைகள் தடுத்துக் கொண்டே இருந்தன. கூடவே, என் சோம்பேறித்தனமும்! இடையில் 10 நாட்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், 'திரும்ப வந்ததும் தோழியைப் பார்த்து நலம் விசாரித்துவிடலாம்' என்று கிளம்பிவிட்டேன். அதன் பிறகும், ஒரு மாதம் உருண்டோடிய நிலையில், ஒரு வழியாக ஒரு நாளை கண்டுபிடித்து, அவளைப் பார்க்கச் சென்றேன். 'நீ நலம் விசாரிக்க வருவாய் என்று பல நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்...' என்று வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்தவள், 'சந்தோஷ தருணங்களைவிட, துன்பமான நேரங்களில்தான் நெருக்கமானவர்களை மனது அதிகமாகத் தேடும்' என்றபோது, குற்ற உணர்வில் என் மனது குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது!

அனுபவங்கள் பேசுகின்றன!

நேசத்துக்குரியவர்களின் துன்பமயமான தருணங்களில் தவறாது நேரில் சென்று அன்பையும், நம்பிக்கையையும் பரிமாற வேண்டும் என்று அன்றிலிருந்தே முடிவெடுத்துவிட்டேன்!

- இந்திரா சந்திரன், திருச்சி

பர்த்டே பார்ட்டி பரிதவிப்பு!

உறவினர் ஒருவர், குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு மிகவும் வற்புறுத்தி அழைத்தார். நானும் கணவரும் அலுவலகத்தில் இருந்து நேராக அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அப்போது மணி மாலை ஐந்து. வேலை முடித்த களைப்புடன் சென்றிருந்த எங்களுக்கு... 'ஒரு காபி சாப்பிட்டால் தேவல' என்றிருந்தது. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. ஃப்ளாட் குழந்தைகள் அனைவரும் வந்து சேர... ஏழு மணிக்கு கேக் வெட்டினாள் குழந்தை. ஆளுக்கு ஒரு துண்டு கேக், குட்டி சமோசாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் வந்தது. 'காபி கொடுக்கவில்லை, நேரடியாக டின்னர் போல' என்று எண்ணியிருந்த எனக்கும் கணவருக்கும் அதிர்ச்சி... 'அப்படி எதுவும் ஏற்பாடாகவில்லை' என்பதுதான்!

அனுபவங்கள் பேசுகின்றன!

இருவருக்குமே பசி படுத்தி எடுத்தது. கணவர், நீரழிவு நோயாளி வேறு. விடைபெற்று வெளியே வந்தால்... புறநகர்ப் பகுதியான அங்கு உணவு விடுதிகள் எதுவுமே தென்படவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு கடையில் டீ குடித்து, பிஸ்கட் சாப்பிட்டு பசியை ஆற்றி, பேருந்து பிடித்து நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள் இரவு 10 மணி ஆகிவிட்டது.

ஸ்நாக்ஸ், டின்னர் என எதுவாக இருந்தாலும், விருந்து தருபவர்களின் விருப்பம்தான். ஆனால், அதற்கான நேரம், காலம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? ஐந்து மணிக்கு கேக் வெட்டி காபி, கேக் கொடுக்கலாம். ஏழு மணிக்கும் அதையே கொடுத்தால்..? பல மைல் தூரம் உள்ளவர்களுக்கெல்லாம் அழைப்பு வைத்து, இப்படி பரிதவிக்கவிடலாமா... கொஞ்சம் சிந்தியுங்கள்!

- சீனு சந்திரா, மயிலாப்பூர்

டாக்டரே சொன்னாலும்..!

அனுபவங்கள் பேசுகின்றன!

பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு காய்ச்சல் இருந்ததால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். 'இப்போ மலேரியா அதிகம் வருது. அதுக்கு மாத்திரை தர்றேன்...’ என்று கூறி, 400 ரூபாய் ஃபீஸ் வாங்கிக் கொண்டார். மேலும், அவரின் ஃபார்மஸியில் இருந்து மாத்திரைகளையும் தந்தார். காய்ச்சல் குணமானால் போதும் என்று மாத்திரைகளை மகளுக்குக் கொடுத்தேன். ஆனால், அவளுக்கு ஏதோ ஒவ்வாமையாகி, முதுகெல்லாம் அரிக்கிறது என்று இரவெல்லாம் தூங்க முடியாமல் அவதிப்பட்டாள். வேறொரு டாக்டரிடம் சென்றபோது, பிளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். ரிசல்ட்டில் மலேரியா நெகட்டிவ் என்று வந்தது. ''சாதாரண காய்ச்சலுக்கு மலேரியாவுக்கான பவரான மாத்திரைகள் சாப்பிட்டதோட விளைவுதான் இது. இனிமேல் டாக்டரே சொன்னாலும், பிளட் டெஸ்ட் செய்து ரிசல்ட் பார்க்காம, பவர்ஃபுல் மாத்திரைகளை சாப்பிடாதீங்க...'' என்று அறிவுரை தந்தார் இந்த டாக்டர்.

அந்த 'டாக்டரை’ என்ன சொல்லி நோக..?!

- ஜெ.வனிதா, சென்னை

காய்ச்சல் என்றாலும் போட்டி முக்கியம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மகன் படிக்கும் பள்ளியில், மாறுவேடப் போட்டி நடைபெற்றது. குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு வேடத்தில் கலக்கிக் கொண்டிருந்தனர். மயில் வேடமிட்டிருந்த குழந்தை, தன் அம்மாவின் மடியில் சோர்வாகப் படுத்திருந்தது. விசாரித்தபோது, ''லேசா காய்ச்சல்'' என்றார் அதன் அம்மா. 'காய்ச்சல் நேரத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வைக்காமல், இப்படி வேடமிட்டு சிரமம் எல்லாம் தேவையா?' என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால், அந்த அம்மாவோ... மகளின் காதில் டயலாக் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். மேடைக்குச் சென்றபோது, ''மறக்காம, ஒழுங்கா பண்ணிட்டு வரணும்'' என்று கண்டிப்பான குரலில் சொல்லி அனுப்பினார். அந்தக் குழந்தையும் அழகாகச் செய்து, மூன்றாவது பரிசை வென்றது. காய்ச்சலிலும் மேடை ஏறி பரிசு வாங்கி வந்த அக்குழந்தையை கொஞ்ச வேண்டும் போல் இருந்தது எனக்கு. அவள் அம்மாவோ, ''எவ்வளவு செலவு செஞ்சு டிரெஸ் ஏற்பாடு செய்து, எத்தனை நாளா டயலாக் சொல்லிக் கொடுத்தேன்... ம், மூணாவது பிரைஸ்தான் கிடைச்சுருக்கு?'' என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் புலம்பியபடியே நகர்ந்தார்!

ம்... என்னத்த சொல்ல!

- ச.செல்வியா, கீழக்காசக்குடி