##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
150
பாடமும்... பயனும்!
காலாண்டு விடுமுறையில் இரு குழந்தைகளுடன் ரயிலில் அம்மா வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம். எதிர் இருக்கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் ஒரு குடும்பம் பயணித்தது. அந்தக் குழந்தையுடன் என் குழந்தைகள் நட்பாகி விளையாட ஆரம்பித்தார்கள். சற்று நேரம் சென்றதும், திருச்சி ஜங்ஷனில் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்தார் என்னவர். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்தக் குழந்தை கத்தி அழ ஆரம்பித்தது. ஒரு காதை மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டு விடாமல் அலறியதை கவனித்த நான், காது வலியால்தான்

குழந்தை அழுகிறது என்று உணர்ந்து, பாரசிட்டமால் சிரப், விக்ஸ் இரண்டையும் கொடுத்தேன். பிறகுதான் அழுகை ஓய்ந்தது. குழந்தைகளை வெகுதூரம் டிரெயினில் அழைத்துச் செல்லும்போது கைவசம் பாண்ட் எய்டு, ஜுர மருந்து, வயிற்றுப் போக்குக்கான மருந்து போன்றவற்றை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் என்னை நான் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்!
குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாக... என்னவரின் ஐஸ்கிரீமால் வந்த அழுகை என் முதலுதவியால் நீங்கியது. இனி மற்ற குழந்தைகளுக்கு அவர்களின் உடல்நிலை அறியாமல் இதுபோல எந்தப் பண்டமும் வாங்கித் தரக் கூடாது என்ற பாடத்தையும் கற்றோம்!
- சுமதி பிரேம்ஆனந்த், கோபிச்செட்டிபாளையம்
விளம்பர விபரீதம்!

தொலைக்காட்சியில் தோன்றும் டாய்லெட் க்ளீனருக்கான விளம்பரம்... டாய்லெட்டில் அந்த க்ளீனரை அப்ளை செய்து சுத்தம் செய்த பின், அதில் கையை வைத்து தேய்த்துக் காட்டி, சுத்தமாக இருப்பதாக உறுதி அளிப்பார்கள். பார்க்கும்போதே நமக்கு அருவருப்பாக இருக்கும். சமீபத்தில் எங்கள் டாய்லெட்டை நான் கிளீன் செய்து முடித்த பின், என் அக்கா மகன் அதில் கையைவிடப் போக, பதறித் தடுத்த நான் அவனைக் கண்டித்தேன். ''டி.வி-யில அப்படித்தான் தேய்க்கணும்னு சொன்னாங்க...'' என்றான் விவரம் தெரியாத அந்த வாண்டு. அந்த விளம்பரத்தின் விபரீதம் புரிந்தது.
சம்பந்தப்பட்ட விளம்பரதாரர் கவனிப்பாரா..?!
- செ.அனிதா பாரதி, திண்டிவனம்
சூப்பரான மேட்டர்!
என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, குழந்தைகளுடன் குறுக்கெழுத்துப் போட்டி

எழுதிக் கொண்டிருந்தாள். ''என்னடி இது சின்னப் பிள்ளையாட்டம்..?!'' என்றேன் கேலியாக. அதற்கு அவள் சொன்ன பதில், அருமை. ''நாம எப்பவும் டி.வி-யே கதினு கிடந்து, பிள்ளைங்களைக் கவனிக்காம விட்டுடக் கூடாது. நல்லது, கெட்டதுனு கலந்து வர்ற டி.வி-யை விட புத்தகங்களை குழந்தைகளுக்குப் பழக்கலாம். குறிப்பா, இப்படி குறுக்கெழுத்துப் போட்டியை அவங்களோட சேர்ந்து எழுதும்போது, அவங்க பொது அறிவு வளர்றதோட புத்தகம் மீதான அவங்க ஆர்வமும் கூடும். பதில்களை எல்லாம் பென்சில்ல எழுதிட்டு, மறுபடியும் அழிச்சுட்டு அவங்களை எழுதச் சொல்லுவேன். இதனால அவங்க ஞாபக சக்தியும் வளரும்!'' என்று சூப்பரான மேட்டர் சொன்னாள்!
நாமும் செய்யலாமே!
- எம்.ஏ.நிவேதா, திருச்சி
தாலிக்கயிறு உஷார்!

தோழியுடன் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தேன். திடீரென என் அருகில் நின்ற பெண்மணி, ''ஐயோ, என் தாலி அறுந்துடுச்சே...'' என்று அலறினார். சில நொடிகளில் அழவும் தொடங்கிவிட்டார். நானும் தோழியும், ''கொஞ்சம் பதற்றப்படாம இருங்க... நாங்க எடுத்துத் தர்றோம்...'' என்று அவரை எங்கள் ஸீட்டில் அமரவைத்துவிட்டு, கீழே குனிந்து தேடினோம். தாலி, காசு, குண்டு, குழாய் என அனைத்தையும் பொறுக்கி எடுத்து, அந்த அம்மாவிடம் கொடுத்து சரிபார்க்கச் சொன்னோம். ''எல்லாம் சரியா இருக்கும்மா... ரொம்ப நன்றி!'' என்றபோது அவர் கண்களில் நிம்மதியும் நீரும். ''ரொம்ப நாளாவே தாலிக்கயிறு மாத்தணும்னு நினைச்சேன், இன்னிக்கு இப்படி ஆயிடுச்சே'' என்று வருத்தமும் பட்டார்.
கயிற்றில் தாலி கோத்திருக்கும் பெண்களே, அது இற்றுப்போகும் அளவுக்கு விடாமல் அவ்வப்போது பார்த்து புதிது மாற்றிக் கொள்வீர்கள்தானே... இந்த அனுபவத்தை படித்த பிறகு!
- தி.சங்கீதா கணேசன், திருச்சி