Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

150

'நேம்லெஸ்  200'!

எங்கள் வீட்டு திருமண நிகழ்வின்போது, மொய் எழுதும் வேலையில், கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் என் அக்கா மகனை அமர்த்தினோம். மிக அழகான கையெழுத்துடன் மொய் எழுத ஆரம்பித்தவன், திருமணம் முடிந்ததும் நோட்டை விசேஷ வீட்டினரிடம் ஒப்படைத்தான். இரண்டு, மூன்று நாட்கள் சென்ற பின் நிதானமாக நோட்டை புரட்டிப் பார்த்தால்... ராமநாதன் - 200, சொக்கலிங்கம் - 500 என்று தொடர்ந்து பெயர்கள் வந்துகொண்டிருக்கையில்... இடை இடையே 'நேம்லெஸ் (Nameless)  200’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புரியாமல் அவனிடமே போன் செய்து கேட்க, ''ஆமாம் சித்தி. கூட்ட நெரிசல்ல சிலரோட பெயர் தெளிவா கேட்கல... அவங்க எல்லாம் எந்த வகை உறவுனு எனக்கு அடையாளமும் தெரியல. அதனால அவங்களை

அனுபவங்கள் பேசுகின்றன!

எல்லாம் 'நேம்லெஸ்'னு எழுதிட்டேன்'' என்றான் சாதாரணமாக.

சொந்தபந்தங்களை தெரிந்த பெரியவர்களிடம் மட்டுமே மொய் எழுதும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது!

- ஆர்.சந்திரிகா, குன்னூர்

முத்தான முன்(தேர்வு) யோசனை!

தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, ஹால் முழுவதும் 'சார்ட்ஸ்' நிரம்பியிருந்ததைக் கவனித்தேன். ஏ,பி,சி,டி; அ,ஆ,இ,ஈ; எண்கள், விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்கள், தலைவர்கள் என்று அனைத்துமே எஜுகேஷனல் சார்ட்ஸ். தோழியின் இரண்டு வயதுக் குழந்தை, ஒவ்வொரு சார்ட்டையும் எனக்கு அழகாக விளக்கிக் காட்டியது.

''பள்ளி செல்வதற்கு முன்பே குழந்தை எப்படி இத்தனையும் கற்றுக்கொண்டது..?'' என்று தோழியிடம் கேட்டேன், ஆச்சர்யத்துடன். அவள், ''இந்த வயதில் குழந்தையை ஒரே இடத்தில் உட்கார வைத்து புத்தகத்தின் மூலம் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க முடியாது. விளையாட்டுப் போக்கில் அவள் கற்றுக்கொள்ளட்டும் என்று, இப்படி சார்ட்டுகளை வாங்கி ஹாலில் ஒட்டினேன்.

அனுபவங்கள் பேசுகின்றன!

அவற்றைப் பார்த்து, 'இது என்ன? அது என்ன?’ என்று ஆர்வமாகக் கேட்டுக் கற்றுக்கொண்டாள் குழந்தை. கூடவே, படங்களை இந்த மாதிரி வீட்டில் ஒட்டி வைப்பதால், நாளை பள்ளியிலும் இதேபோன்ற சூழ்நிலையில் குழந்தை நுழையும்போது, பயம் விலகும், வீட்டில் இருக்கும் மனநிலையிலேயே இருக்கும்'' என்றாள் அழகாக. நல்ல யோசனை!

- முனீஸ்மாலா உத்தண்டராமன், சிவகாசி

உறவு சொல்ல ஒருவன்!

திருமணத்துக்கு வந்திருந்த ஓர் உறவினர், பள்ளி செல்லும் தன் மகனையும் அழைத்து வந்திருந்தார். ''இன்று ஞாயிற்றுக்கிழமை... பையனை வீட்டில் விட்டு வந்திருந்தால் ஒரு நாளாவது ஓய்வெடுத்திருப்பானே...'' என்றேன். அவர் கொடுத்த விளக்கம், அருமை. ''இன்றைய குழந்தைகள் உறவுகள், உறவினர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள். முக்கியக் காரணம், அவர்களுக்கு அதன் உன்னதத்தைக் கற்றுக் கொடுக்காத பெற்றோர்களே. எனவே, நான் எப்போதும் வீட்டுக்கு வரும் உறவினர்களை என் பையனுக்கு அந்த உறவு வகை சொல்லி அறிமுகப்படுத்துவதுடன், விடுமுறை நாட்களில் நடக்கும் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கும் தவறாது அழைத்துச் சென்று, உறவுகளையும் உணர்வுகளையும் வளர்க்கிறேன்!'' என்றார்.

நம் குழந்தைகளுக்கும் பழக்கலாமே இந்த நற்பண்பை!

- ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை

கங்கையில் தொலையுங்கள்!

சென்ற மாதம் காசி யாத்திரைக்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எங்கள் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம், காசிக்கு சென்று வந்தால் ஏதாவது மூன்று உணவுப் பொருட்களை விட்டுவிடும் சம்பிரதாயம் பற்றி பேசிக்கொண்டு வந்தனர். அப்போது ஒருவர், ''காய்கள், பழங்கள் விடுவதால் என்ன பயன்? புறம் பேசுவது, பொறாமைப்படுவது, நேரம் தவறுவது, சோம்பேறித்தனம் போன்ற குணங்களுக்கு கங்கையில் முழுக்கு போடுங்கள். வாழ்க்கை அழகாகும்!'' என்றார் அமைதியாக.

அவர் சொன்னதுபோல மன அழுக்குகளுக்கு முழுக்கு போட்டால், அதைவிடப் புண்ணியம் வேறேது?!

- இன்பவல்லி, கிருஷ்ணகிரி

அனுபவங்கள் பேசுகின்றன!

இலவசம்... இளக்காரம்!

ரயிலில் செல்ல முன்பதிவு செய்வதற்காக காத்திருந்தபோது, அங்கே தரையில் வீசப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்களைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். முன்பதிவு கிடைக்காமல் வீசப்பட்டிருந்தவற்றைவிட, அரையும் குறையுமாக எழுதியும், எதுவும் எழுதாமலும் வீசப்பட்டிருந்தவையே அதிகமாக தென்பட்டன. பேருந்து முன்பதிவு போல, ரயில் முன்பதிவு விண்ணப்படிவங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. எத்தனை படிவங்கள் வேண்டுமானாலும் இலவசமாகவே தருகின்றனர். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள விஷயம். ஆனால், இப்படி இலவசமாக கிடைப்பதால்தான், பலரும் அவற்றை வீணடிக்கின்றனர் என்பது புரிந்தபோது மனதில் வேதனை எட்டிப் பார்த்தது.

அடுத்த சில தினங்களில் வங்கி ஒன்றில் நான் கண்ட வாசகம், அது போன்ற செயல்களை நாகரிகமாகக் குட்டுவதுபோல் இருந்தது... 'சலானை வீணாக்காதீர்கள். நீங்கள் இலவசமாகப் பெற்றாலும், நாங்கள் அதற்கு செலவு செய்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள்!’

இலவசப் படிவங்களை வீணாக்காதீர்கள்... இனியாவது!

- எஸ்.காந்திராஜ், ஒழலூர்