Published:Updated:

1, 2, 3... 22... கிராஃப்ட்டில் அசத்தும் சுதா!

ஸ்டெப்ஸ்

1, 2, 3... 22... கிராஃப்ட்டில் அசத்தும் சுதா!

ஸ்டெப்ஸ்

Published:Updated:
##~##

பெயின்ட்டிங், ஜுவல்லரி மேக்கிங், மெஹந்தி, சாம்பிராணி, மெழுகுவத்தி, ஃபேன்ஸி தலையணை, பென் கீ ஹோல்டர், வாஸ்து மியூரல், கிரீட்டிங் கார்டு, பேப்பர் பேக், ஃபிளவர் மேக்கிங்... அப்பப்பா, சொல்வதற்கே மூச்சு வாங்குகிறது. ஆனால், மேலே சொன்னது உட்பட, கிட்டத்தட்ட இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட கிராஃப்ட் தொழில்களை செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்... சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார்!

''பிறந்தது கும்பகோணம். சென்னையில் மணவாழ்க்கை ஆரம்பமானது. கணவர் செல்வகுமார், பையன் பிரதீப் என அழகான வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. 'இரண்டாம்கட்ட நகரமொன்றில் பிறந்து, சென்னை எனும் மாநகரில் இத்தனை அழுத்தமாக எப்படி கால் ஊன்றினாய்?’ என்று பலரும் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். அனைத்துக்கும் காரணம்... என் கிராப்ஃட் ஆர்வம். இது சிறுவயதிலிருந்தே என்னுடன் வந்ததல்ல. கல்லூரியில் பொழுதுபோக்காக கிராஃப்ட் வகுப்புக்கு சென்றதுதான் ஆரம்பப்புள்ளி. பின்னர் அதில் ஆர்வம் ஏற்பட்டு, என் கற்பனைத் திறனுடன் கைகோத்து படிப்படியாக முன்னேறினேன்.

1, 2, 3... 22... கிராஃப்ட்டில் அசத்தும் சுதா!

கை வேலைப்பாடுகளில் எல்லா வகைகளையும் கற்றுத் தெளிந்த பின், கிராஃப்ட் ஏரியாவில் எனக்கென ஓர் அங்கீகாரம் உண்டானது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்கள் என கிராஃப்ட் வொர்க்ஷாப் நடத்தினேன். என்னுடைய 'எஸ்.எஸ். ஆர்ட் அண்ட் கிராஃப்ட் இன்ஸ்டிட்யூட்' மூலம் வீட்டிலிருந்தபடியே பெரியவர் முதல் சிறியவர் வரைக்கும் வகுப்புகள் நடத்துகிறேன்.

நிறைய தோல்விகளைத் தந்த பிறகுதான், வெற்றியை சந்திக்கும் வாய்ப்பை நம்முடைய வாழ்க்கை உருவாக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக நானும் உணர்ந்தேன். முதன் முதலாக தி.நகரில் நான் நடத்திய கிராஃப்ட் ஷாப், நஷ்டத்தை சந்தித்தது. உடைந்து போனபோது, 'தொடர்ந்து முயற்சி செய்’ என்று என்னை முடுக்கியது என் குடும்பம்தான். பிறகு, வள்ளுவர் கோட்டத்தில் தோழியுடன் இணைந்து ஸ்டால் போட்டேன். எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து... பள்ளி, கல்லூரிகளில் ஸ்டால்கள் போட்டேன்.

தனியார் தொலைகாட்சிகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் என கட்டுரைகளும், நேர்காணல்களுமாக நான் பலராலும் கவனிக்க வைக்கப்பட்டேன். இடையில் 'ஆர்ஜே’, 'விஜே’ என ரேடியோ மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் பணியாற்றினேன். தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகி, கிராஃப்ட் தொழிலில் முழுமூச்சாக இறங்கினேன்.

சமையல் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது, சமையலிலும் எனக்கென ஓர் இடம் கிடைக்கச் செய்தது. அதில் என்னைவிட என் அம்மாவுக்கு அதிக சந்தோஷம். காரணம்... திருமணம் வரை சுடுதண்ணீர் மட்டுமே வைக்கத் தெரிந்த இன்றைய தலைமுறைப் பெண்களில் ஒருத்தியாகத்தான் நானும் இருந்தேன். ஓர் ஆர்வத்தில் சமையல் கற்றுக்கொண்டதுடன், அதில் நிபுணர் என்று நான் உருவானதில் சந்தோஷம் என் தாய்க்கு.  அனைத்திலுமே ஆரம்பத்தில் நான் கத்துக்குட்டிதான். ஆர்வம், உழைப்பு, முயற்சி... இவைதான் நிலையான இடத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்துள்ளன. எனவே, இந்தக் கணம் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் ஆரம்பப் புள்ளியில் இருக்கலாம். புள்ளிகளைத் தொடர்ந்து, துரத்திச் சென்றால்... காத்திருக்கிறது வெற்றி!''

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்