Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

150 

பீரோவுக்குள் அணில்!

அவசரமாக வெளியே கிளம்பிய என் உறவுக்கார பெண்மணி, பீரோவை மூடாமல் சென்றுவிட்டார். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தவர், பீரோ திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தவர், பின்னர் அவசரத்தில் மூடாமல் சென்றதை உணர்ந்து நொந்தபடி, பீரோவை நன்றாகப் பூட்டிவிட்டு, அன்று இரவு வெளியூருக்குக் கிளம்பிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து திரும்பியபோது, பீரோவில் இருந்து துர்நாற்றம் அடித்திருக்கிறது. திறந்து பார்த்தால், துணிகளும் குதறப்பட்டு இருந்திருக்கின்றன. உள்ளே ஓர் அணில் செத்து, அழுகிய நிலையில் கிடந்திருக்கிறது. பீரோ

அனுபவங்கள் பேசுகின்றன!

மூடாமல் இருந்தபோது, ஜன்னல் வழியே வந்த அணில் பீரோவுக்குள் நுழைந்திருக்க, அது தெரியாமல் தோழி பூட்டிச் சென்றதன் வினை இது! பீரோவை சுத்தம் செய்ய அவர் பட்டபாடு ஒருபுறம் இருக்க, விலையுயர்ந்த ஆடைகள் வீணானதில் மன உளைச்சல் வேறு.

- ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை

சிகிச்சையோடு கனிவும் தேவை!

கதவிடுக்கில் மாட்டி நசுங்கிய என் விரலுக்கு சிகிச்சை செய்ய அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நீண்ட வரிசையில் எனக்குப் பின் நின்றிருந்த பெரியவருக்கு காலில் போட்டிருந்த கட்டைப் பிரித்து மாற்ற வேண்டும். அவர் பேரன் வயதில் உள்ள வார்டு பாய், ஏக வசனத்தில் 'வா... போ’ என்று அழைத்தது மனதை நெருடியது. மேலும்

அனுபவங்கள் பேசுகின்றன!

அத்தனை பேர் முன்னிலையிலும், ''இப்படியெல்லாம் அடிபட்டு வந்திருக்கியே... உனக்கெல்லாம் அறிவே இல்லையா?'' என்று பேச, பெரியவர் கூனிக் குறுகிவிட்டார். சிகிச்சையுடன் கனிவும் கலந்து தர வேண்டிய மருத்துவமனையில், அரசு ஊழியர்கள் இப்படி அலட்சியமாக, அராஜகமாக செயல்படுவது நியாயமா..?

வறுமையில் வாடும் மக்கள் வக்கற்றுதானே இங்கு வருகிறார்கள் என்ற எண்ணத்தில், பெரும்பாலான அரசு மருத்துவமனை ஊழியர்களின் அணுகுமுறையும் இப்படித்தான் இருக்கிறது. என்று மாறும் அவர்கள் மனம்?!

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

'நெட்'டை தள்ளுங்கள்... நேரில் செல்லுங்கள்!

அன்று தோழிகள் பலரும் எதிர்பாராதவிதமாக சந்தித்தோம். அப்போது, ''இன்டர்நெட் மூலமாக வரன் பார்த்து, இருவரும் இன்டர்நெட்டில் 'சேட்டிங்' செய்யும் அளவுக்கு வருகிறார்கள். கடைசியில் பார்த்தால்... இந்த வரன் வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறாள் என் மகள். இப்படியே நான்கைந்து முறை மறுத்துவிட்டாள்'’ என்று தன் மகளுக்கான வரன் தேடும்படலம் பற்றி வருத்தப்பட்டு சொன்னாள் ஒரு தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன!

தன் இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்த அனுபவத்தோடு பேசிய மற்றொரு தோழி, ''நம் பாரம்பரிய சடங்கான பெண் பார்க்கும் வைபவத்தின் முக்கிய நோக்கம், பெண்ணும், பிள்ளையும், பெற்றோர் முன்னிலையில் ஒருவரையருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். நேர் சந்திப்பில், அங்க அசைவுகள் மூலம் (Body Language) ஒருவரை ஒருவர் ஆழமாக கவர முடியும். பெண்ணுக்குப் பிள்ளையையும், பிள்ளைக்கு பெண்ணையும் பிடித்துவிட்டால், மற்ற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

நேரில் சந்திக்காமலேயே 'சேட்’ செய்யும் இளம் தலைமுறையினர், ஒருவரையருவர் சரியாகப் பார்க்காததுடன், 'சேட்டி’ங்கில் பயன்படுத்தப்படும் பக்குவமற்ற வார்த்தைகளால் 'இது சரிவராது’ என்றே முடிவெடுப்பார்கள். எனவே, 'நெட்'டில் பெண் பார்க்கும் படலத்துக்கு தடா போடு!'’ என்று விளக்கினாள்.

இந்த அனுபவசாலியின் அறிவுரையைப் பின்பற்றிய தோழியின் மகளுக்கு இப்போது திருமணமும் முடிந்துவிட்டது!

- ஆர்.லதா, சென்னை-17

நர்ஸரி பள்ளிகள், இதை பின்பற்றலாமே!

சமீபத்தில் உறவினர் திருமணத்துக்காக ஹைதராபாத் சென்ற நான், அங்கு வசிக்கும் தோழி ஒருத்தியைப் பார்க்கச் சென்றேன். அப்போது, தன் மூன்று வயதுக் குழந்தையை நர்ஸரியில் சேர்க்கக் கிளம்பிக் கொண்டிருந்தாள். ''நீயும் வாயேன்!'' என்றாள். கடந்த வாரம் என் பையனை நர்சரியில் சேர்த்த தினத்தில் அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அவன் படுத்திய பாட்டை அவளிடம் கூறி, 'மீண்டும் அந்த அனுபவமா..?’ என்று தயங்கினேன். ''வந்துதான் பாரேன்!'' என்றாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

அங்கு காத்திருந்தது ஆச்சர்யம் எனக்கு. அட்மிஷன் போட்ட கையோடு, அவள் பையன் எந்த மிரட்சியும், அழுகையும் இன்றி எங்களுக்கு சந்தோஷமாக 'பை’ சொல்லிவிட்டு  உள்ளே சென்றான். அங்கு அவன் வயதில் இருந்த மற்ற குழந்தைகளுடனும் சகஜமாகப் பழகி, முதல் நாளே சமர்த்தாக செட்டில் ஆகிவிட்டான்.

நான் தோழியை ஆச்சர்யத்துடன் பார்க்க.. ''பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே... தினமும் மாலையில் இந்தப் பள்ளிக்கூடம் முன்பாக உள்ள பூங்காவில் அவன் வகுப்பு ஆசிரியை யும், அட்மிஷன் பெறவிருக்கும் மற்ற குழந்தைகளும் அறிமுகமாகி, விளையாடுவார்கள். பள்ளிக்கூடத்துக்குள்ளும் சென்று ஒருமுறை சுற்றி வருவார்கள். இப்படி செய்து, பள்ளிக்கூடம் பற்றிய மிரட்சியை குழந்தைகளின் மனதிலிருந்து முன்கூட்டியே அகற்றிவிட்டார்கள் இதன் நிர்வாகத்தினர்!'' என்றாள்.

மற்ற நர்ஸரி பள்ளிகளும் இதைப் பின்பற்றலாமே?!

- சிந்தியா சச்சிதானந்தன், திருச்சி