Published:Updated:

''நான் ஷாமினி குமரேசன் ஆனது எப்படி?''

சார்லஸ்படங்கள் : பொன்.காசிராஜன்

##~##
''நா
ன் ரொம்ப அமைதியான பொண்ணு. யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன். சிரிக்க மாட்டேன். அதனால், நான் என்ன எமோஷன்ல இருக்கேன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. 'ஏன் இப்படி டல்லா இருக்க? ஜாலியா இரு!’ன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. ஆனா, போட்டிகளில் எதிராளியைக் குழப்பி, நான் சாம்பியன் பட்டம் தட்ட, எந்த எக்ஸ்பிரஷனும் வெளிக்காட்டாத என் முகமும் ஒரு காரணம்!'' - மென் குரலில் பேசத் துவங்குகிறார் ஷாமினி குமரேசன். 23 வயதான ஷாமினி, தற்போது இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் ப்ளேயர். காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி, தேசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து வரும் தமிழக எக்ஸ்பிரஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''நான் ஷாமினி குமரேசன் ஆனது எப்படி?''

''டேபிள் டென்னிஸ்ல ஸ்டாமினாவும், கவனமும் ரொம்ப முக்கியம். முழுக் கவனமும் போர்டில் அந்த சின்னப் பந்தின் மீதுதான் இருக்கணும். அதே நேரம் நம்ம முகத்துல டென்ஷன் காமிச்சுட்டா, அப்படியே நம்மளை அட்டாக் பண்ணி காலி பண்ணிடுவாங்க. அதனால், விளையாடும்போது எப்பவும் டென்ஷன் ஆகவே கூடாது. நான் விளையாடும் போது என் முகத்துல எந்த ரியாக்ஷனுமே இருக்காது. எதிர்த்து விளையாடுறவங்க, நான் டென்ஷனா இருக்கேனா... டிஃபென்ஸா ஆடுறேனான்னு குழம்பிட்டு இருக்கும்போதே பாயின்ட்களை அள்ளிடுவேன்!'' என்று வெற்றி ரகசியம் சொல்கிறார் ஷாமினி.

''என் அப்பா, ஸ்கூல் டீச்சர். கல்பாக்கத்தில்தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம். கல்பாக்கம் அணுமின் நிலைய சென்ட்ரல் பள்ளியில் படித்தேன். கோடை விடுமுறையில் சம்மர் கோச்சிங் கேம்ப்பில்தான் டேபிள் டென்னிஸ் எனக்கு அறிமுகம். சும்மா ஜாலியாக விளை யாடிய போட்டிகளில் வெற்றி கிடைக்க,தொழில் முறை டேபிள் டென்னிஸ் ப்ளேயர் ஆகலாம்னு தைரியம் வந்தது. ஆனேன்! ஆனா, புரொஃபஷனல் போட்டிகள் அவ்வளவு சுலபம் இல்லை. ஆரம்பத்தி லேயே ஏகப்பட்ட தோல்விகள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் ப்ளேயர்கள் பவுலோமி கதக், மவுமா தாஸ். அவங்க கிட்டத்தட்ட 10 வருடங் களாக டாப் லெவல் ப்ளேயர்கள். போன வருஷம் பவுலோமி கதக்கிடம் ஃபைனல்ஸில் தோத்துட்டேன். அந்தத் தோல்வி என்னை உலுக்கிடுச்சு. எப்பவும் நான் ரிஸ்க் எடுக்காமல் சேஃப் கேம் ஆடுவேன். ஆனா, அந்தத் தோல்விக்குப் பிறகுதான் ரிஸ்க் எடுத்து விளையாடுவதன் அவசியம் புரிந்தது. கேம் பிளான் மாத்தினேன். கடைசி பாயின்ட் வரை விட்டுக்கொடுக் காமல் அட்டாக் பண்ணி விளையாடத் துவங்கினேன். இந்த வருஷம் நேஷனல் டாப் ப்ளேயர்களான பவுலோமி, மம்தா பிரபு ரெண்டு பேரையும் தோற்கடிச்சு, நேஷனல் சாம்பியன் பட்டம், நம்பர் 1 ரேங்க் தேடி வந்தது.  

சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸில் சீனா ப்ளேயர்கள் ரொம்ப ஸ்டிராங். அவங்களோட விளையாடும்போதுதான் நம்ம ஒரிஜினல் பலம், பலவீனம் தெரியும். ஆரம்பத்தில் சீன ப்ளேயர்களுடன் விளையாடும்போது, சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் தோல்விதான் மிஞ்சியது. அவங்க வேகத்துக்கு என்னால் தாக்குப்பிடிக்கவே முடியலை. பயிற்சி நேரத்தை அதிகரித்தேன். தினமும் 10 மணி நேரம் பயிற்சி. புயல் ப்ளேயர்களைச் சமாளிக்கும் சவால் வேகம் கைக்கு வந்தது. சர்வதேச ப்ளேயர்களையும் ஜெயிக்க ஆரம்பிச்சேன். நான் எப்பவும் அடுத்தவர்களை ஆடவிட்டுட்டு, அவங்க எனர்ஜி லெவல் குறையும்போது, என் ஆட்டத்தை ஆரம்பிப்பேன். விளையாட்டில் இது ரொம்பவும் முக்கியம். எதிர்த்து விளையாடுபவர்கள் எப்படி விளையாடுகிறார்கள், அவங்க ஸ்டைல் என்ன, எப்போ தடுமாறுவாங்க என்பதைக் கணிக்கக் கத்துக்கணும். அந்த சூட்சுமம் கத்துக்கிட்டா, நாமதான் வின்னர்.

பெண்கள் வெளி இடங்களுக்கு அதிகம் பயணிக்க வேண்டியிருக்கும்னுதான் பலர் தங்கள் பெண் குழந்தை களை விளையாட அனுமதிப்பது இல்லை. ஆனா, அந்தத் தயக்கம் உதறி, என்னை நம்பர் 1 ப்ளேயர் அந்தஸ்து எட்டவைத்ததற்கு என் அப்பாவுக்கு தேங்க்ஸ். புரொஃபஷனலா விளையாடத் துவங்கிய பிறகு, அடிக்கடி நான் கல்பாக்கத்தில் இருந்து சென்னை வந்துபோக கஷ்டமா இருக்கும்னு மயிலாப்பூரில் வீடு பார்த்து எங்களைத் தங்கவெச்சார் அப்பா. வார இறுதியில் மட்டும் எங்களை வந்து பார்த்துட்டுப் போவார். விளையாட்டில் திறமை காட்டும் பெண்களை பெற்றோர் உற்சாகப்படுத்தணும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் லைஃபில் செட்டில் ஆக முடியாது என்பதில் உண்மை இல்லை. எம்.பி.ஏ., படிச்சு முடிச்ச எனக்கு, ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆர்வமும் திறமையும் உள்ள பெண்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெண்கள் தங்கப் பதக்கங் களைக் குவிப்பார்கள்!'' எனும் ஷாமினியின் ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை வைட்டமின்!