"இன்று நேற்று அல்ல... இளைஞர்கள்பற்றிய கவலை எப்போதும் எல்லோருக்கும் இருக்கிறது. இப்போதைய கவலை இளைஞர்களிடத்தில் வாசிப்புப் பழக்கம் இல்லை என்பதுதான். எந்த ஒரு செடியும் அந்தரத்தில் வளர்ந்துவிடுவது இல்லை. அது நடப்பட்ட மண், ஊற்றப்பட்ட நீர், போடப்பட்ட உரம், அதற்கான தட்பவெப்பம் என அனைத்து சங்கதிகளையும் உள்ளடக்கியது அதன் வளர்ச்சி. அப்படி இளைஞர்கள் வாசிக்காமல் இருப்பதற்கான காரணம், அவர்களின் பின்புலம். எந்தச் சூழ்நிலையில் இருந்து அவர்கள் வருகிறார்கள் என்பது முக்கியம்" என உவமையுடன் மனதைப் பண்படுத்தும் சிந்தனையைக் கிளறுகிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்
ச.தமிழ்ச்செல்வன்.
"குடும்பத்தில் யாருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது. அப்படி இருக்க, ஓர் இளைஞனிடத்தில் வாசிப்பை எப்படி எதிர்பார்க்க முடியும். வீட்டில் அனை வரும் டி.வி. பார்ப்பதற்கு இடம் இருக்கிறது. அனைவரும் அமர்ந்து சாப்பிட நேரம் இருக்கிறது. ஆனால், அனைவரும் சேர்ந்து புத்தகம் வாசிக்கவோ, வாசித்ததைப்பற்றி பகிர்ந்துகொள்ளவோ நேரம் ஒதுக்குவது இல்லை.
இன்றைய இளைஞர்கள் அவர்களது துறை சார்ந்த, அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். சமூக அக்கறை சார்ந்த வாசிப்பு என்பது இல்லை.
எதைப் படிக்கிறீர்களோ இல்லையோ, தமிழர் பண்பாடுபற்றி எந்தப் புத்தகம் கிடைத்தாலும் வாசிக்கத் தவறாதீர்கள். தொ.பரமசிவம் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்', ஜார்ஜ் புலிட்சர் எழுதி ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்த்த 'மார்க்சிய மெய்ஞானம்', ஆங்கிலத்தில் ஜேரட் டைமன்ட் என்பவர் மனித குல வரலாற்றைப்பற்றி 'தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி தேர்ட் சிம்பன்ஸி',
கு.அழகிரிசாமியின் கதைகள் ஆகிய நூல்களைத் தவறாமல் வாசிக்க வேண்டும். தவிர, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய 'இந்தியன் பிளானிங் இன் கிரைசிஸ்' என்கிற புத்தகம், பொருளாதாரம்பற்றி நிறையத் தகவல்களைக் கற்றுத்தரும்.
தமிழகத்தின் பல இடங்களில் புத்தகக் கண்காட்சி அதிகம் நடந்தாலும், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம்போன்ற நூல்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. வாசிப்பின் மூலம் இந்த மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவது அவசியம்" என்கிறார் தமிழ்ச்செல்வன்.
"20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம், தேசியம், பொதுவுடைமை என அரசியல் கட்சிகளின் தாக்கங்கள் இல்லாமல் இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தத் தாக்கம் இன்று குறைந்த அளவுதான் இருக்கிறது. அதனால் வாசிப்பு என்பதும் குறைந்து இருக்கிறது" என வாசிப்பை அரசியல் பின்னணியுடன் விளக்குகிறார் நீலகண்டன். பல அரிய புத்தகங்களை 'கருப்புப் பிரதிகளா'க வெளியிட்டு வருபவர். "சிறு பத்திரிகைகளின் வளர்ச்சி சமீப காலமாக நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து இருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளைப் படிப் பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், சிறு பத்திரிகைகளைப் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை.
முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் மன்றங்கள், படிப்பகங்கள் ஆகியவை இருந்தன. அங்கு வரும் கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கி, அதன் அடுத்த கட்டமாக நூலகங்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது. அதாவது, அடிப்படையில் இயக்க வாசிப்பை மேற்கொண்டு, அதன் வழியே இலக்கியம், அறிவியல், வரலாறு என வெவ்வேறு தளங்களில் வாசிப்பை விரிவாக்கிக்கொண்டார்கள். அதற்கான சூழ்நிலை இன்று இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா எழுதிய 'சுயமரியாதை சமதர்மம்', அம்பேத்கர் எழுதிய 'சூத்திரர்கள் யார்?', ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'வால்காவில் இருந்து கங்கை வரை' ஆகிய நூல்களை வாசிப்பது, சமூகத்தின் மேல் விழுந்து இருக்கும் உங்கள் பார்வையைத் திருத்தும். அரசியல் வரலாற்றில் இருந்து விடுபட்ட சமூகமாக வளர்த்து எடுக்கப்பட்டு இருக்கிற நிலையில், வாசிப்பு மட்டுமே உங்களைச் சிந்திக்கவைக்கும்... சீர்ப்படுத்தும்" என்று தன் கருத்தை முன்வைக்கிறார் நீலகண்டன்.
"ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிப் போகும் தூரம், பயணம், நேரம், செலவுபோன்ற அசௌகரியங்கள் எல்லாவற்றையும் இணையம் குறைக்கிறது என்பதால், இன்றைய இளைஞர்களிடையே இணைய வாசிப்புக்கு ஆதரவு பெருகுகிறது" என்று தொடங்குகிறார் வலைப்பூ எழுத்தாளர் ஜியோரம் சுந்தர்.
"ஆனாலும், தகவல்களுக்காக, மின்னஞ்சல் செய்வதற்காக, சினிமா பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக எனப் பல விஷயங்களுக்காக இணையம் பயன்படுத்துபவர்களைவிட, வாசிப்புக்காக இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் குறைவுதான். தினசரிகள், இதழ்கள், சிறுபத்திரிகைகள் என பலவற்றையும் இணையத்தின் மூலமாகவே வாசிக்கலாம். தவிர, எழுத்தாளர்கள் பலர் தங்களுக்காகத் தனியே ஒரு தளத்தை ஏற்படுத்தி, அதில் தங்கள் நூல்களை வைத்திருக்கிறார்கள். அப்படி யும் வாசிக்கலாம். இணைய வாசிப்பின் இன்னொரு முகமாக, தனிநபர் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவற்றையும் வாசிக்கலாம்.
நகரத்தில் இருப்பவர்களுக்கு இணையம் கிடைக்கிறது என்பதால், இணைய வாசிப்பு ஓரளவு வளர்ச்சி கண்டு இருக்கிறது. மற்றபடி, கிராமத்தில் இருப்பவர்களுக்கு இணைய வாசிப்பு கடினம்தான். மேலும், 'இம்மீடியசி' என ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, ஓர் எழுத் தாளர் தன் வலைப்பூவில் தன் படைப்பை வெளியிட்டால், அதை உடனுக்குடன் 'சுடச்சுட' வாசித்துவிடலாம். ஏதேனும் ஒரு துறைபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஆவணங்களை நீங்கள் எவ்வளவு தூரம் சென்று தேட முடியும்? அதுவே இணையத்தில் சில நொடிகளில் அலசிவிட முடியும். இது இணைய வாசிப்பில் கிடைக்கிற இன்னொரு வசதி. புத்தகம், இணையம் எதுவாக இருந்தாலும் என்ன, வாசிப்பு நிச்சயம் உங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிடும்" என்கிறார் ஜியோரம் சுந்தர்.
'உங்களுக்குள் உறைந்து இருக்கும் மனிதத்தை புத்தக வாசிப்பு மட்டுமே உருகவைக்கும்' என்கிறான் ஃபிரான்ஸ் காஃப்கா. புத்தகங்கள் உங்கள் நண்பர்களாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்களின் வழிகாட்டியாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் சிந்தனையைக் கிளறிவிட அனுமதியுங்கள். வாசிப்பு அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போல... ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொன்றுக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி அனுபவங்களை சுவாசியுங்கள். இந்த உலகத்தை நேசியுங்கள்!
|