'வசீகரா, கலாபக் காதலா, நீருக்குள் மூழ்கிடும் தாமரை, பெண்ணே உன் மேல் பிழை' என வளமான தமிழ் வார்த்தைகள், மயிலிறகாக வருடும் வசீகரக் கற்பனைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாமரை. ''குழந்தைகள் வளர வளர, அவர்கள் ஏதாவது ஒன்றின் மீது ஆர்வமாக இருப்பார்கள். சிலர் கட்டடத் துண்டுகளைச் சரியாக அடுக்குவார்கள். சிலர் சுவர்களில் கிறுக்கிக்கொண்டே இருப்பார்கள். சிலர் ஒப்பனை செய்வார்கள். சிலர் சொப்பு வைத்துச் சமையல் செய்வார்கள். சிலர் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இவை ஒவ்வொன்றும் படைப்புத்திறனின் ஆரம்பக் கட்டம். கிறுக்கினால்... ஓவியம். சொப்பு என்றால்... சமையல் என்பது மாதிரி, குழந்தைகள் எந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். பெற்றோர்கள் அந்தத் துறையில் குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
பள்ளிப் படிப்பு முடிந்ததுமே இளைஞர்கள் தங்களுக்கு என்ன வரும், தங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில், வாழ்க்கையில் சாதித்தவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்தவர்கள்தான். பெற்றோர்களுக்குப் புரியவைத்து, தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்க வேண்டும். வெறுமனே தங்களுக்குப் பிடித்த துறையில் நுழைந்தாலே, வெற்றி பெற்றுவிட முடியாது. எந்தத் துறையில் இருக்கிறீர்களோ, அதைப்பற்றிய பல விஷயங்களை, நுணுக்கங்களைத் தேடிப் பிடித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் துறையில் உலக அளவில் புகழ்பெற்றவர்களின் படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் இடம் தெரியும். உலகத்தரம் புலப்படும். மற்றவர்களிடம் நாம் எப்படி வித்தியாசப்படுவது என்று தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களின் வழியைப் பின்பற்றினால் பத்தோடு பதினொன்றாகக் காணாமல் போய்விடுவீர்கள். இதைப்போலவே நீங்கள் அந்தத் துறையில் ஏற்படும் மாற்றங்களை விரல் நுனியில் வைத்திருங்கள். அப்போது உலகத்தோடு ஓட முடியும். இல்லையென்றால் பின் தங்கிவிடுவீர்கள்!'' என்று அனுபவம் உணரவைக்கும் சில விஷயங்களோடு முடிக்கிறார் தாமரை.
'சண்டேன்னா ரெண்டு' என்ற குறும்பு விளம்பரம்தான் முதல் அடையாளம். தற்போது 'தமிழ்ப் படம்' என்பது சி.எஸ்.அமுதனின் பெருமித அடையாளம். படம் அளவுக்குப் படத்தின் புரமோஷன்களிலும் ஈர்ப்பு கூட்டியவர். ''வழக் கத்தில் இருந்து கொஞ்சம் மாறு பட்டுச் சிந்திக்கணும். அவ்வளவுதான். பார்வையாளர்களோ,வாசகர் களோ, அவங்களைக் கொஞ்சம் டீஸ் பண்ணணும். இந்த ஆன்ட்டி ஃபார்முலா, பெரும்பாலான சமயங் களில் சக்சஸ் ஆகும். 'இந்தத் தேதியில் இருந்து ஒவ்வொரு ஞாயிறும் இரண்டு நாளிதழ்கள் வெளிவருகின்றன. மறக்காமல் கேட்டு வாங்குங்கள்'னு விளம்பரப் படுத்தினால், அதில் சுவாரஸ்யம் இல்லை. சண்டேன்னா சட்டுனு ஒரு ஜாலி மூட் மனசுக்குள் ஓடும். அதனால், அந்த ஐடியாவைக் கொஞ்சம் டீஸிங்கா அமைச்சோம். இதேபோல், ஒரு துணிக் கடைக்கு, ''கன்னாபின்னானு விலையைக் குறைச்சு விக்கிறாங்க. இப்படியே போனா, கடையை மூட வேண்டியதுதான்'னு கடையில் வேலை பார்க்கும் ஆட்கள் ஸ்டிரைக் பண்றாங்க'ன்னு ஒரு விளம்பரம் பண்ணினோம். அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அடிச்சுப் பிடிச்சு ஓடிப் போய் மக்கள் துணி வாங்கப்போறது இல்லைதான். ஆனா, துணி வாங்கலாம்னு யோசிக்கிறப்ப நிச்சயம் அந்த விளம்பரம் மனசில் மின்னி மறையும். ஏன்னா, வழக்கத்துல இருந்து அது வித்தியாசம்!'' என்கிறார் அமுதன்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே ஐடியாவில் அசரடித்தவர் பிரகாஷ் வர்மா. வோடஃபோன் நிறுவன ஜூஜூ விளம்பரங்களின் இயக்குநர். கிரிக்கெட் பிடிக்காதவர்கள்கூட ஜூஜூ ரசிகர்களாக இருப்பார்கள்.
''அனிமேஷன் என்றால் வியப்பும் விசித்திரமும். எல்லோ ருக்கும் அதில் ஆர்வம் இருக்கும். ஒருநாள் கார் டிரைவ் பண்ணிட்டு இருந்தேன். அப்போ ரோட்டோரத்திலே சின்ன பசங்க முட்டைக்குள் ஓட்டை போட்டு, காந்தத்தை அதில் போட்டு, பொம்மைகள் சண்டை போட்டுக்கொள்வது மாதிரி விளையாடிட்டு இருந்தாங்க. அங்கேதான் எனக்கு ஜூஜூ ஐடியா ஸ்பார்க் ஆனது. அந்த முட்டைகளுக்குக் கை, கால் கொடுத்து ஒரு கார்ட்டூன் அனிமேஷன் பண்ணிப் பார்த்து, ஆறு மாசங்களுக்குப் பிறகுதான் இப்போ பார்க்கிற 'ஜூஜூ' வடிவம் வந்தது. மாத்தி யோசித்தாலே மற்றவர்களைச் சுண்டி இழுக்கும் கிரியேட்டிவ் வித்தை நம் கைவசம்!'' என ஜூஜூ புன்னகை புரிகிறார் பிரகாஷ் வர்மா.
'காக்க காக்க' தொடங்கி, 'விண்ணைத் தாண்டி வருவாயா' வரை, தமிழ் சினிமாவின் கலர்ஃபுல் ரகளைக்குச் சொந்தக்காரர் கலை இயக்குநர் ராஜீவன். ''ஏதாவது ஓர் அடிப்படைக்கலையை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். அது தச்சுக் கலையாகக்கூட இருக்கலாம். குறைந்தபட்சம் உங்கள் மனதில் இருக்கும் விஷயத்தை |