இன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பி னையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக் கப்படும். ஜூன் 25 தொடங்கி, சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடக்கும் கவுன்சிலிங். ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பவர்கள்தான் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் முன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளின் 1,82,000 இடங்கள் அரசால் நிரப்பப்படும். மீதம் உள்ள 74,000 இடங்களை மேனேஜ்மென்ட் கோட்டா அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக்கொள்வார்கள். அரசால் நிரப்பப் படும் அந்த 1,82,000 இடங்களுக்குத்தான் இந்த கவுன்சிலிங் நடக்கவிருக்கிறது!
கட் ஆஃப் மதிப்பெண்கள்!
ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். ப்ளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!
'ரேண்டம் நம்பர்' என்றால் என்ன?
சரிசமமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் 'ரேண்டம் நம்பர்' (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
|