எனக்கான உதவிகளையே என்னால் செஞ்சுக்க முடியாத சாதாரண நிலையில் இருந்து வந்தவன் நான். இப்போ லட்சக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யும் பொறுப்பு என் கையில் இருக்கு. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது என் உரிமை, கடமை. கேட்க சினிமா வசனம்போல இருந்தாலும், நான் அப்படித்தான் நினைக்கிறேன், அப்படித்தான் செயல்படுறேன்" - தீர்க்கமாகப் பேசுகிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணி யன். அறையில் அமர்ந்து ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகார சக்தியாக மட்டும் இல்லா மல், நேரடியாகக் களத்தில் இறங்கி, மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துபவர்.
"வாணியம்பாடி பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம் எங்களோடது. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே அம்மா இறந்துட்டாங்க.
அப்பாவுக்கு ஏரி, குளங்களில் மீன் பிடிக்கிற வேலை. வருமானம் இல்லாமல் பல நாட்கள் சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருக்கும். அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் ஊர்ல
படிச்சேன். அதுக்குப் பிறகு சென்னையில் இருந்த அக்கா வீட்டில் கொண்டுவந்து விட்டார் அப்பா. சென்னைக்கு வந்தது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம். ஆறாம் வகுப்பில் இருந்து சைதாப்பேட்டை பள்ளிக்கூடம் ஒன்றில் படிச்சேன். அப்பா மீன் பிடிக்கிற பணத்தில் எனக்கும் கொஞ்சம் செலவுக்கு அனுப்பி
வைப்பார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம்... அரசியல் ஆர்வம் மறுபக்கம். தி.மு.க-வில் உறுப்பினராகி, சைதாப்பேட்டையில் கலைஞர் நற்பணி மன்றம் ஆரம்பிச்சேன். நான்தான் தலைவர். தி.மு.க-வின் டாப் பேச்சாளர்கள் எல்லோரையும் அழைச்சுட்டு வந்து கூட்டம் போடுவேன். கையில காசே இருக்காது. ஆனா, அங்கே இங்கே வாங்கி கூட்டம் மட்டும் நடந்துடும்.
வருமானத்துக்காக பாலு கார்மென்ட்ஸ்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பேக்கிங் சூப்பர்வைசரா சேர்ந்தேன். சம்பளம் வந்தா, உடனே அதைவெச்சு ஒரு கட்சிக் கூட்டம். அந்த வயதில் அது பெரிய உற்சாகமா இருந்தது. அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்த காஞ்சனா மேல் காதல். சாதி மறுப்புத் திருமணமாவும், சுய மரியாதைத் திருமணமாவும் எங்க கல்யாணம் நடந்துச்சு.
1980-ல் தி.மு.க. இளைஞர் அணி ஆரம்பிக்கப்பட்டபோது, நான் சைதை தொகுதிச் செயலாளரா நியமிக்கப்பட்டேன். கட்சிப் பொறுப்பு எல்லாம் கௌரவம்தான். ஆனா, வருமானத்துக்கு வழி இல்லை. ஏதேதோ தொழில்கள் பண்ணினேன். 'மா.சு.மணியன் மிதிவண்டி நிலையம்' அப்படின்னு வாடகை சைக்கிள் கடை போட்டேன். கடையைத் திறந்துவெச்சுட்டு கட்சிக் கூட்டம்னு அலைஞ்சா, அப்புறம் எங்கே இருந்து கடை நடக்கும்? நஷ்டம், சைக்கிள் கடை பஞ்சர் ஆயிடுச்சு. அசராம 'காவேரி சோடா ஃபேக்டரி' ஆரம்பிச்சேன். அதையும் கொஞ்ச நாள்லயே மூடியாச்சு. பிறகு, 'காமதேனு பால் நிலையம்'. வழக்கம்போல ஒரு வருஷம்கூடத் தாங்கலை. 'சைதாப்பேட்டைதான் சரியா வரலை. ஏரியாவை மாத்துவோம்'னு கிண்டியில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து 'வெல்கம் ஹோட்டல்' ஆரம்பிச்சேன். அது சுமாராப் போச்சு. இப்படி, மாத்தி மாத்திப் பல தொழில்கள் செஞ்சாலும், வசதிவாய்ப்பு ஒண்ணும் வரலை. வர்ற வருமானம் குடும்பத்தைக் காப்பாத்தவும், கட்சிச் செலவுகளுக்குமே சரியா இருந்துச்சு.
சொந்த வாழ்க்கையில் தொடர் தோல்விகள் வந்தாலும், அரசியல் வாழ்க்கையில் என் உழைப்பினால் படிப்படியாக முன்னேறினேன். சைதைத் தொகுதிச் செயலாளர், தென் சென்னை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், இப்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர். 2006-ல் மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தபோது, என்னை மேயராக்கி அழகு பார்த்தார் தளபதி. ஆனால், 'இது முறைகேடான வெற்றி' என நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பு எதுவும் வராத நிலையிலும், நாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தோம். மறுபடியும் நடந்த தேர்தலிலும் தி.மு.க-தான் பெரும்பான்மை. 'ஒருவரே இரண்டாவது முறை மேயராக முடியாது' என்று முந்தைய ஆட்சியில் தளபதியை மனதில்வைத்து அ.தி.மு.க. சட்டம் இயற்றி இருந்தது. ஆனால், என் இரண்டு மாத மேயர் பணிகளைப் பார்த்து, எனக்காக ஒரு சட்டத் திருத்தமே செய்து, என்னை மறுபடியும் மேயர் ஆக்கியது தி.மு.க. அரசு. என் அரசியல் வாழ்க்கையில் தலைவரும் தளபதியும் எனக்கு அளித்த மிகப் பெரிய வாய்ப்பு அது.
சென்னை மாநகராட்சி மயானங்களில் 183 மயானத் தொழிலாளர்கள் இருந்தனர். அரசுச் சம்பளம் ஏதும் இல்லாத நிலையில், எரிப்பதற்குப் பிணம் வந்தால்தான் அவர்களுக்கு வருமானம். முதலில் அவர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி மாத ஊதியம் கொடுத்தோம். 'மயான உதவியாளர்' என்ற பெயரில் பணி ஆணையும் வழங்கினோம். இன்று சென்னைக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தால் குறைந்தது எட்டாயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு நடுத்தரக் குடும்பம் இந்த திடீர்ச் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. மங்களக் காரியம் இல்லை என்பதாலோ என்னவோ, யாரும் கவனம் செலுத்தாமல் இருந்த இதைக் கவனத்தில்கொண்டோம். இன்று சென்னைக்குள் எந்த மரணம் என்றாலும் ஃப்ரீஸர் பாக்ஸ், வாகனம் அனைத்தும் இலவசம். புதைக்க 400 ரூபாய், எரிக்க 600 ரூபாய் என்ற கட்டணத்தையும் நீக்கிவிட்டோம்.
|