Published:Updated:

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?
ந.வினோத்குமார்,படங்கள்:து.மாரியப்பன்
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

பூங்கொத்தில் முள்!' - ராகிங் கொடுமையை இப்படி வர்ணிக்கலாமா? கல்லூரியின் முதல் தினம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பசுமைக் கல்வெட்டுதான். ஆனால், ராகிங்கில் சிக்கிக் கொள்ளும் சிலருக்கு மட்டும் அந்த நாள் ஒரு கறுப்புத் தினமாவது பெரும் சோகம். நாவரசு, சரிகா ஷா என ராகிங் கொடுமை உயிரையே பறித்த சம்பவங்களையும் இந்த மாநிலம் பார்த்திருக்கிறது. கெடுபிடி விதிகள், கடும் தண்டனைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஜூனியர்-சீனியர் உறவு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் என அடுக்கினாலும், அடங்காத காளையாகத் திமிறிக்கொண்டு இருக்கும் விபரீதம் இது. ஜூனியர் - சீனியர் மாணவர்களிடையே ஓர் அறிமுகம் ஏற்பட, நட்பு உணர்வைப் பரிணமிக்கச்செய்ய, 'பிரேக்கிங் தி ஐஸ்' என்பார்களே... அப்படி ஜாலியான சீண்டல்களாகத்தான் ஆரம்பிக்கும். ஆனால், அந்த முயற்சிகள் சகிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறும்போதுதான் ராகிங் கொடுமையாகிறது.

தவிர்க்க முடியாத சூழலை உருவாக்கி, அதில் பிறரைச் சிக்கவைப்பதுதான் ராகிங் என்கிறது அகராதி. கல்லூரி வாசல்கள் திறக்கும் சமயம், கனவுகளும் கற்பனைகளுமாக அதனுள் அடியெடுத்துவைக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த ராகிங் சிக்கலை எதிர்கொள்வது எப்படி, தவிர்ப்பது எப்படி... கொஞ்சம் விவாதிக்கலாம் வாருங்கள்!

'ஃப்ரெண்ட்லி ராகிங்' என்று உண்டு. சீனியர்கள் தங்களின் ஜூனியர் களை மேடையில் ஏற்றி உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆடல், பாடல் என அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரச் செய்வார்கள். இதனால், கல்லூரிச் சூழல்பற்றிய தயக்கம், பயம் மறையும். ஜூனியர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து, கல்லூரிக் கலைக் குழுவிலோ, விளையாட்டு அணிகளிலோ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவும், சீனியர்களுக்கு அது வசதியாக இருக்கும். இதுவரை ஓ.கே. ஆனால், பாடத் தெரியாத ஒருவரையோ, ஆடத் தெரியாத ஒருவரையோ கட்டாயப்படுத்தி அந்தச் செயல்களைச் செய்ய வற்புறுத்தும்போதுதான் அது ராகிங் ஆக மாறுகிறது. 'மோட்டிவேஷன்' என்பதற்கும் 'ராகிங்' என்பதற்கும் நூலிழை வித்தியாசம்தான்.

பொதுவாக, ராகிங் என்பதை உடல்ரீதியாகத் துன்புறுத்துவது, உளவியல்ரீதியாகத் துன்புறுத்துவது, தகாத வார்த்தைகள் மூலமாகத் துன்புறுத்துவது, பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது என நான்கு வகைகளில் அடக்கலாம். தரையில் நீச்சல் அடிக்கச் சொல்வது, ரயில் சக்கரத்துக்குப் பஞ்சர் பார்க்கச் சொல்வது, இல்லாத பைக்கை ஓட்டச் சொல்வது போன்ற நம்மை முட்டாளாக்கச் செய்யும் நடத்தைகள் உளவியல்ரீதியான துன்பம் கொடுக்கும். அதேபோலத்தான் தகாத வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் சித்ரவதைப்படுத்துவதும்.

மைதானத்தில் நிர்வாணமாக ஓடச் சொல்வது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடச் செய்வதுபோன்றவை பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள். புகை பிடிக்கச் சொல்வது, மது அருந்தச் சொல்வது, போதைப் பொருட்களை உட்கொள்ளச் செய்வது, வன்முறையில் ஈடுபடுத்துவது, ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதுபோன்றவை உடல்ரீதியான துன்புறுத்தல்கள்.

இப்போதெல்லாம், கல்லூரி வளாகத்தில் கமுக்கமாக இருந்துவிட்டு, விடுதி அறைகளில் ருத்ரதாண்டவம் ஆடும் போக்கு அதிகரித்து இருக்கிறது. கல்லூரியில்கூட அஞ்சாத முதல் ஆண்டு மாணவர்கள், மிகவும் பயந்து நடுங்குவது 'ஹாஸ்டல் ராகிங்'குக்குத்தான். ஒவ்வொருவருக்கும் மதிப்பான, மரியாதையான வாழ்க்கை வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. ராகிங் என்பது இந்த உரிமையை நசுக்குகிற வேலை. சீனியர்கள் தன் தம்பி அல்லது தங்கை தன் முன் ஜூனியராக நின்றால், அதேவிதமான ட்ரீட்மென்ட் கொடுப்பார்களா என்று ஒரு நொடி சிந்தித்தாலே போதும்.

ராகிங் என்பது ஒரு சைக்கலாஜிகல் கேம். கிட்டத்தட்ட செஸ் விளையாட்டுபோல. உங்கள் முதல் நடவடிக்கைதான் எதிராளியின் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்கும் என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி. "ராகிங் என்பது கல்லூரிகளில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும், எல்லாக் கலாசாரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஓர் இடத்தில் நீண்ட காலமாக இருக்கும் கூட்டத்தில் புதிதாக யாரேனும் வந்தால், அவர்களைத் தங்களின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் கீழ் கொண்டு வருதல் என்பது மனித இயல்பாக இருக்கிறது.

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

உங்களின் 'பவர்' எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிப்பதற்காகத் தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவார்கள். பயந்த சுபாவம் உடையவர் களாகவோ, அல்லது எதிர்ப்பைக் காட்டுபவர்களாகவோ இருந்தால், மேலும் மேலும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவற்றை 'ஜஸ்ட் லைக் தட்' மனோநிலையில் எடுத்துக்கொண்டு, சீரியஸாக எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருந்தால்... ஒன்று, உங்களை உதாசீனப்படுத்திவிடுவார்கள் அல்லது நட்பு பாராட்டுவார்கள். நாளடைவில் நல்ல புரிதல் ஏற்பட்டு நண்பர்களாகவும் மாறி விடுவார்கள்.

கல்லூரிக்கு முதல் ஆண்டு செல்லும் மாணவர்கள் ராகிங் என்றதும் மிரள வேண்டாம். வரம்பு மீறி சீனியர்கள் எதைச் செய்யச் சொன்னாலும், அதைக் கண்டுகொள்ளாதீர்கள். முதல் நாள் தொடங்கியே நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். கூட்டத்தில் இருந்து தனியே விலகிப் போகாமல், சீனியர்களிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வெளியே முரட்டுத்தனமாகக் காட்சியளித்தாலும், பல சீனியர்கள் ஜூனியர்களுக்கு உதவி செய்யத் தயாராகவே இருப்பார்கள்.

நீங்கள் அவர்களுக்கு மரியா தைக்குரிய சீனியர் அந்தஸ்து தர வேண்டும் என்பதற்காகவோ, அல்லது உங்களைத் தங்கள் கேங்கில் இணைத்துக்கொள்வதற்காகவோதான் முதல் சில நாட்களில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். அது அளவுக்கு மீறாத வகையில் இருந்தால், நீங்களும் அதை அனுபவித்து மகிழலாம்... தப்பில்லை!

சீனியர்கள் ஒரே ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ளுங் கள். ஜூனியர்களை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தாதீர்கள். உங்கள் நண்பர்களோடு எப்படிப் பழகுவீர்களோ, அதேபோல்அவர் களோடும் பழகுங்கள். நான் சந்தித்த பல மாணவர்களில் தங்களின் சீனியர்களை ரோல் மாடலாகச் சொன்னவர்கள் பலர். நீங்களும் அப்படி ஒரு ஹீரோவாக இருங்கள்!" என்று ஆலோசனை வழங்குகிறார் ஷாலினி.

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

ராகிங் நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனைகள் அளிக்கப்படும் என்று சென்னைப் புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடம் கேட்டேன். "தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997, 'தேவை இல்லாமல் சத்தம் ஏற்படுத்தித் தொந்தரவு செய்வது, உடல் மற்றும் உளவியல்ரீதியாகக் காயங்களை ஏற்படுத்துவது, பயம் மற்றும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவது, செய்யக் கூடாத செயல்களைச் செய்யச் சொல்வது ஆகியவை ராகிங் எனப்படும்' என்று சொல்கிறது. இவைபோன்ற செயல்களைச் செய்தால் பிரிவு 4-ன்படி கிரிமினல் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது. இந்தக் குற்றங் களில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு, தமிழகத்தின் வேறு எந்தக் கல்லூரியிலும் சேரத் தடையும் விதிக்கப்படுகிறது. பிரிவு 6-ன்படி ராகிங்கால் பாதிக்கப் பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், குற்றம் செய்த மாணவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். புகார் அளித்த பின்பும் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அந்தத் தகவல் காவல் துறைக்கு வந்தால், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது பிரிவு 4-ன்படி தண்டனை வழங் கப்படும். அதனால், சும்மா ஜாலிக்காகச் செய்கிறேன் என்று, உங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக்கொள்ளாதீர் கள். முதல் ஆண்டு மாணவர்களை உங்களின் தம்பி, தங்கையைப்போல அன்புடன் நடத்துங்கள். அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருங்கள்!" என்று அறிவுரையுடன் முடிக்கிறார் ஜாங்கிட்.

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?

"பெண்களை ராகிங் செய்யும்போது, அது வன்கொடுமையாகச் சட்டத்தால் பார்க்கப்படுகிறது. உடல்ரீதியாக அல்லது பாலியல்ரீதியாக மட்டும் அல்லாமல் தகாத வார்த்தைகளைக்கொண்டு பெண்களை ராகிங் செய்தால்கூட அது தண்டனைக்குரிய குற்றம். ஈவ் டீசிங் அல்லது பெண்கள் மீதான வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் உள்ளனவோ, அவை எல்லாமே பெண் களை ராகிங் செய்தால் பொருந்தும். ஆகவே, ராகிங் என்பதைத் தவிர்த்து நல்ல நட்புடன் பழகுங்கள்!" என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

ராகிங் செய்தால் மட்டுமல்ல... அதற்குச் சாட்சியாக இருந்து அதைப்பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்தால்கூட அதுவும் குற்றம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

ராகிங் நடத்தைகள் எல்லாம் கல்லூரி சேர்ந்து முதல் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும். சில கல்லூரிகளில் வருடம் முழுக்கத் தொடரும். ஜூனியர் மாணவர் களும் பாதிக்கப்பட்டு ராகிங் செய்த சீனியர்களும் பாதிக்கப்பட்டு வாழ்க்கை யைத் தொலைத்தவர்கள் ஏராளம்.

அன்புடனும், புரிதல்களுடனும், நல்ல தோழமையுடனும் உங்கள் ஜூனியர்களிடத்தில் பழகுங்கள்.

ஃப்ரீயா விடுங்க பாஸ்!

கல்லூரிகளுக்கு ஒரு 'செக் லிஸ்ட்'!

'ஆன்டி-ராகிங்' (Anti-Ragging) இயக்கங்கள் எல்லாக் கல்லூரிகளிலும் செயல்பட வேண்டும். அவற்றில் மாணவர் களையும் பேராசிரியர்களையும் பிரதிநிதிகளாக நியமிக்க வேண்டும்.

'எனது மகன்/மகள் ராகிங் நடத்தைகளில் ஈடுபட மாட்டார். அப்படி ஈடுபடும்பட்சத்தில் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்' என்று பெற்றோர்களிடம் இருந்து கையப்பமிட்ட உறுதிமொழியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

'நான் எந்தவிதமான ராகிங் நடத்தைகளிலும் ஈடுபட மாட்டேன். அப்படி ஈடுபடும்பட்சத்தில் என் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்' என்று மாணவர்களிடம் இருந்தும் கையப்பமிட்ட உறுதிமொழியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கல்லூரி வளாகத்துக்குள் ராகிங் தடுப்பு தொடர்பான நோட்டீஸ்கள், எச்சரிக்கை போர்டுகள் போன்றவை வைக்கப்பட வேண்டும்.

நிர்வாகம், முதல்வர் மற்றும் ஊழியர்கள், முதல் ஆண்டு மாணவர்களுடன் பெர்சனலான கலந்துரையாடல்கள் மூலம் அவர்களின் பயங்களைப் போக்க வேண்டும்.

கேன்டீன், டாய்லெட், ஜிம் என எங்கு ராகிங் அதிகமாக நடக்க வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த இடங்களை 'ராகிங் ப்ரோன் சோன்' என்று அடையாளப்படுத்தி, அங்கு மிகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

விடுதிகளை மிகவும் கண்காணிக்க வேண்டும்.

ராகிங் நடத்தைகளால் பாதிக்கப்பட்ட மாணவர் அதைப் பற்றிய தகவல்களை முதலில் கல்லூரியின் முதல்வர் கவனத் துக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆலோசனை வழங்க வேண்டும்.

ராகிங்பற்றிய புகார்களைத் தெரிவிக்க, 1800-180-5522 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது helpline@antiragging.net என்ற இணைய முகவரிக்குத் தகவல் அனுப்பலாம்!ஜூனியர்களுக்குச் சில தந்திரங்கள்...

ஓவர் ஸ்மார்ட் ஆகவோ, தெனாவட்டாகவோ, ரொம்பவும் எகிறவோ செய்யாதீர்கள். அது எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றும்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மற்றவரை அடக்கி ஆளத்தான் ஆசைப்படுகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும்கூட, சீனியர்கள் முன் அமைதியாக, அடக்கமானவரைப்போன்று தோற்றமளியுங்கள்.

எக் காரணத்தைக்கொண்டும் அடிதடியில் இறங்க வேண்டாம்.

நீங்கள் அனுபவிக்கும் ராகிங்கை சீனியர்களும் அனுபவித்திருப்பார்கள். அதனால், எதையும் 'ஸ்போர்ட்டிவ்' ஆக எடுத்துக்கொள்வது சீனியர்களில் நல்ல நண்பர்களைப் பெற்றுத் தரும்.

சீனியர்களுக்கு சில சிம்பிள் டிப்ஸ்...

நகரத்து மாணவர்களுக்கு ராகிங்பற்றித் தெரியும். ஆனால், கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் அதைப்பற்றி எதுவும் தெரியாமல் வருவார்கள். ஏற்கெனவே புது இடம், அந்நிய சூழல் தந்த மிரட்சி காரணமாக மிரண்டுபோயிருக்கும் அவர்களின் தன்னம்பிக்கையை ராகிங் என்ற பெயரில் குலைக்காதீர்கள்.

குடும்பத்தைப் பிரிந்து விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை ராகிங் செய்யும்போது, ஜூனியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். இது அவர்களை உளவியல்ரீதியாகத் தாக்கி 'ஹோம் சிக்' ஏற்படுத்தும். ஆகவே ப்ளீஸ்... அதைத் தவிர்க்கவும்.

வெல்கம் பார்ட்டி, ஃப்ரெஷர்ஸ் பார்ட்டி ஆகியவற்றை நடத்தி ஜூனியர்களின் திறமையை அறிந்து கொள்வது உங்களுக்கு நற்பெயரையும், அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் கூட்டும்.

நீங்கள் சொல்லி ஒரு விஷயத்தை ஜூனியர்கள் செய்யவில்லை என்றால், அவர்களைக் கட்டாயப்படுத்துவது நல்லது அல்ல.

தன்னுடைய சுயமரியாதையை யாரும் விட்டுத் தர மாட்டார்கள். அது பாதிக்கப்படும்பட்சத்தில், விளைவுகள் மோசமாக அமையும். ஆகவே, அவர்களின் தன்மானத்தைச் சீண்டும் எந்த நடத்தையிலும் இறங்க வேண்டாம்!

அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?
அத்துமீறும் ராகிங்... எதிர்கொள்வது எப்படி?