வாசகர் கடிதம் மூலமான அறிமுகத்தால் கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனுக்கு ஒரு நோட்டுப் புத்தகம் முழுக்க நான் எழுதிய கவிதை களை அனுப்பிவைத்தேன். சில மாதங்களில் 'மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்' என்ற தலைப்பில் மணிமேகலைப் பிரசுரம் எனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. அப்போது எனக்கு வயது 16. அம்மா அந்தப் புத்தகத்தின் பிரதிகளைப் பார்த்து நெகிழ்ந்து அழுதாள். அவளுடைய மாபெரும் துக்கம் அந்தக் கணத்தில் கரைந்ததை உணர்ந்தேன்.
அந்தப் புத்தகம் ஒரு திறவுகோல். அதை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். அந்தப் புத்தகத்தின் வழியே என்னைத் தேடி வந்த நண்பர்களை இறுகப் பற்றிக்கொண்டேன். அதன் வழியே வேறு பல நண்பர்களை அடைந்தேன். ஒவ்வொரு புதிய மனிதனைச் சந்திக்கும்போதும் என்னைக் கொஞ்சம் மாற்ற அவனை அனுமதித்தேன்.
என் அம்மா இறந்துபோனபோது மீண்டும் நான் இருண்ட பாதாள உலகத்துக்குத் திரும்பினேன். மரணத்தின் தனிமையைப் பார்ப்பது விநோதமாக இருந்தது. அங்கே ஒன்றுமே இருக்கவில்லை. நான் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'இருள் என்பது மிகக் குறைந்த ஒளி' என்ற பாரதியின் வாக்கியம்தான் அப்போது துணையாக வந்தது. மீண்டும் ஆவேசமாக எழுதினேன். 'என் படுக்கைஅறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பு வெளிவந்தது. 'ஜே.ஜே சில குறிப்புகள்' படித்துவிட்டு, சுந்தர ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். நவீன இலக்கியத்தின் மீதான ஆழமான பரிச்சயத்தை அவரது நட்பு உருவாக்கியது. 'காலச்சுவடு' இதழை மீண்டும் தொடங்கியபோது அவரது விருப்பத்தின் பேரில் அதன் ஆசிரியர் குழுவில் இணைந்தேன். அதே காலகட்டத்தில் கோவை ஞானி எனக்கு வழிகாட்டிய இன்னோர் ஆசானாக இருந்தார்.
இன்று நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் சுஜாதாவில் இருந்து தொடங்கியதுதான். 'கால்களின் ஆல்பம்' கவிதையை அவர் ஒரு கருத்தரங்கில் படித்தபோது அதற்குப் பார்வையாளர்களிடம் கிடைத்தவரவேற்பு பற்றி அப்போது பத்திரிகைகளில் எழுதினார். ஓர் இளம் எழுத்தாளனின் மனதுக்கு அது எத்தகைய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை.
2000-த்தின் ஆரம்ப வருடங்கள் மிகவும் கடினமானவை. அப்போது தான் 'நீராலானது' எழுதினேன். வேலையை விட்டுவிட்டேன். ஒரு நம்ப முடியாத காதலில் இருந்து, நம்ப முடியாத வகையில் வெளியேறினேன். என்னால் எழுத முடியவில்லை. அப்போது சுஜாதாவைப் போய்ப் பார்த்தேன். 'உனக்குத் தேவை மாத்திரைகள் அல்ல; செயல்பாடுகள்' என்றார். தன்னுடைய சில நூல்களை பதிப்பிக்கச் சொன்னார். மீண்டும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு!
இதுதான் விளிம்பு என்று நினைத்த நாளில் இதற்கு அப்பாலும் ஒரு நீண்ட பாதை இருக்கிறது என்று எனக்கு மீண்டும் உணர்த்திய தருணம். 2003-ல் புத்தகக் கண்காட்சியில் ஆறே புத்தகங்களுடன் உயிர்மை கடை அமைத்து, இரண்டு லட்ச ரூபாய்க்குப் புத்தகம் விற்றேன். அன்று இது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அப்புறம் எனக்கு ஒரு போதும் மாத்திரைகள் தேவைப்படவில்லை!
அதே ஆண்டில் ஒரு பத்திரிகை யைத் தொடங்குவதற்கான எந்தக் கட்டமைப்பும் பொருளாதார வசதியும் இல்லாமல் 'உயிர்மை'யைத் தொடங்கி னேன். சாரு நிவேதிதா, எஸ்.ராம கிருஷ்ணன், ஞானக்கூத்தன், ஜெய மோகன், தியடோர் பாஸ்கரன், ட்ராஸ்கி மருது உள்ளிட்ட நண்பர்கள்தான் எனது ஒரே பலம். இன்று உயிர்மை தமிழின் முன்னணி இலக்கிய இதழ்.
நான் எனது வெற்றிகள், வீழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் கற்றுக்கொண் டது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் யாரும், எப்போதும் முழுமையாகக் கைவிடப்பட்டவர்கள் அல்ல; எந்த இருளிலும் விடிவதற்குச் சற்று நேரமே இருக்கிறது என்பதை நான் அறிந்து வந்திருக்கிறேன். கொஞ்சம் மன வலிமையும் கொஞ்சம்காத்திருக்கவும் முடிந்தால், நாம் விடுபடவேமுடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்!
நகுலனின் இந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்களா?
எந்த நேரத்தில்
எந்தக் கதவு திறக்குமென்று
யார்தான் சொல்ல முடியும்?
|