திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்
ந.வினோத் குமார், இரா.கோகுல் ரமணன்,
படங்கள் : தி.விஜய், ஜெ.தான்யரஜூ
 
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்
நீங்கள் சகலகலா வல்லவரா?
ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

ரு ஃப்ளாஷ்பேக்... 'பாய்ஸ்' பட வேலைகள் துவங்கியபோது, அதில் நடிக்க தமிழகம் முழுக்க இளைஞர்களை விண்ணப்பிக்கக் கேட்டனர். லட்சங்களில் குவிந்த விண்ணப்பங்களில் தேர்வானார்கள் சித்தார்த், நகுல், பரத், மணிகண்டன், தமன் ஆகியோர். சினிமா சொந்தங்கள், சிபாரிசுகள் என்று பலப்பல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் தேர்வு பெற்றதற்கு மிக முக்கியமான காரணம்.. தனித் திறமை!

பரத், மணிகண்டன், நகுலுக்கு நடனம், தமனுக்கு இசை, சித்தார்த்துக்கு நடிப்பு, பாடும் திறன் என ஒவ்வொரு விதமான தனித் திறன். 'பாய்ஸ்' பட விளம்பரம் பார்த்து, அவர்கள் தங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை. சிறு வயது முதலே தனது மனதுக்குப் பிடித்த ஒரு செயலில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனம் செலுத்தி வளர்த்த திறமை அது. பொழுதுபோக்காக நேரம் செலவழித்த விஷயம் இன்று அவர்களது வாழ்நாள் அடையாளமாக, அங்கீகாரமாக மாறிவிட்டது. ஓ.கே! உங்களின் தனித்திறமை என்ன?

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

கைரேகைகள் பிரத்யேகமாக அமைந்திருப்பதுபோல, நடனம், பாட்டு, ஓவியம், கிடார், வீணை, புல்லாங்குழல், மிமிக்ரி, கவிதை-கதை எழுதும் திறமை, நடிப்பு எனக் கலை சார்ந்த ஏதேனும் ஒரு தனித் திறமை ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும். இயல்பாகக் கைவரும் அந்தத் திறமை என்ன என்பதை மிக இளம் வயதிலேயே கண்டுபிடித்து நாம் மெருகூட்டுகிறோமா? இன்று திறமையாளர்களுக்கு திக்கெட்டும் சிவப்புக் கம்பள வரவேற்புகள்.

பாரதியார் அன்றே சொன்னதுதான்.

'காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு தரும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு
என்று நீ வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..!'

அதை வெள்ளைக்காரன் 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி' என்று சொன்னதும் நாம் என்னவோ ஏதோ என்று பின்பற்றத் தொடங்கினோம். 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' என்பதை 'தனித்திறன் நடவடிக்கைகள்' என்று அழகுத் தமிழில் விளிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத வேறு சில நடவடிக்கைகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதுதான் இது. இன்று உலகின் அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஏன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட இந்த 'தனித்திறன் நடவடிக்கை'களுக்காக உரிய மதிப்பும், மரியாதையும் தருகின்றன.

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

எப்போதும் எல்லோராலும் தேடப்படும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் வித்தியாசப்படுங்கள். அதற்குப் பல தளங்களில் உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். 'Involvement makes you important' என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஒரு விஷயத்தைப்பற்றி ஆர்வம் இல்லாதபோதுதான் நமக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ஆர்வத்துடன் செயல்பட்டால் எந்த விஷயத்திலும் நம்மால் 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட முடியும்.

மதுரையைச் சேர்ந்த நிசார் அப்படிக் கவனம் திருடியவர்தான். ஏழ்மை மட்டுமே ஒரே சொத்தாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்த நிசாருக்கு சென்ற இடத்தில் கிடைத்ததெல்லாம் அவமானங்களும், சங்கடங்களும்தான். ''எனக்கு டான்ஸ்னா அவ்வளவு ஆசை. ஆனா, அதை வேடிக்கை பார்க்கக்கூட நேரம் இருந்ததில்லை. ஸ்கூல் முடிஞ்சதும் அப்பாவோட வாழைப்பழ வண்டியைப் பார்த்துக்க ஓடணும். ராத்திரி ரெண்டு மணி வரை வியாபாரத்தைப் பார்த்துட்டு மறுநாள் ஸ்கூலுக்கு ஓடணும். அப்பல்லாம் ஸ்கூல் கல்ச்சுரல்சுக்கு பசங்க பிராக்டீஸ் பண்ணும்போது நான் அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தாலே என்னை விரட்டுவாங்க. கூனிக் குறுகிப்போயிடுவேன். ஆனா, அதுக்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லணும்னு மட்டும் நினைச்சேன். ப்ளஸ் டூ-வில் அடிச்சுப் பிடிச்சு 1023 மார்க் வாங்கினதும் முதல் வேலையா நான் அட்மிஷனுக்கு போய் நின்னது டான்ஸ் ஸ்கூல்லதான். அங்கே எனக்கு டிஸ்கோ, பாப், ராக் ஸ்டைல் டான்ஸ் ஆட வருமான்னு ரொம்ப யோசிச்சாங்க. நொந்துட்டேன். ராத்திரி வாழைப்பழக் கடை வியாபாரத்தைக் கவனிச்சுட்டே பிளாட்ஃபார்ம்ல மைக்கேல் ஜாக்ஸனோட 'திரில்லர் ஆல்பம்' ஸ்டெப்ஸ் போட்டுப் பழகிட்டே இருந்தேன். மறுநாள் டான்ஸ் ஸ்கூல்ல அந்த ஸ்டெப்ஸைப் போட்டுக் காட்டவும், டான்ஸ் மாஸ்டர், 'நல்லா ஆடுறடா நீ... எதிர்பார்க்கவே இல்லை'ன்னு பாராட்டுனாங்க. வாழ்க்கையில் முதல் பாராட்டு வார்த்தைகள். அதுக்கப்புறம் நான் ஓய்வே எடுக்கலை. இப்போ அந்த டான்ஸ் ஸ்கூல்ல நானும் ஒரு டான்ஸ் மாஸ்டர். சல்ஸா, ஹிப்ஹாப் பயிற்சிகள் என் ஸ்பெஷல். நல்ல வருமானம் கிடைச்சாலும் சின்ன வயசுல இருந்து நான் ஏங்கித் தவிச்ச அங்கீகாரம் ரொம்ப முக்கியம்ங்க. அதுதான் என்னை இப்போ ஒவ்வொரு நாளும் இயக்கிட்டு இருக்கு!'' என்று பெருமிதம் பேசுகிறார் நிசார்.

சுமார் 49 வருடங்களாக மாணவர்களுக்கு இலவசமாகக் கூடைப்பந்தாட்டப் பயிற்சி அளித்து வரும் சிரில் தனித்திறன் மேம்பாடு என்பது இளமைப் பருவத்தில் தவிர்க்க முடியாத அம்சம் என்கிறார். ''பலப் பல காரணங்களை அடுக்கினாலும் பொதுவாகக் கோடை விடுமுறை நாட்களில்தான் பெற்றோர்களும் மாணவர்களும் இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர்பற்றி சிந்திக்கிறார்கள். ஒரு மாதம், இரண்டு மாத அவகாசங்களில் எந்த ஒரு கலையையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நடவடிக்கை. பொதுவாக எந்த ஒரு வித்தையைக் கற்றுக்கொண்டாலும் அது அடிப்படையில் சுய ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை ஆகிய தகுதிகளை வளர்க்கும். அது போக வெறுமனே மெம்பர்ஷிப் தகுதி உள்ளவராக இல்லாமல், லீடர்ஷிப் தகுதிகள் நிரம்பியவராக ஒருவரை மாற்றும். கூடைப்பந்து, சிலம்பம், கால்பந்து, நீச்சல்போன்ற உடல் சார்ந்த பயிற்சிகள் மூலம் உடல் ஆரோக்கியம் எனும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்துக்கு அதிபதி ஆவார்கள். இலகுவான உடல் அமைப்புகொண்டவர்கள், நடனம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். குரல்வளம், கவிதை, ஓவியம் போன்ற மென்திறன்கள்கொண்டவர்கள் அதற்கேற்ற துறையில் கவனம் செலுத்தலாம். அதே சமயம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... வழக்கமான பழக்க வழக்கங்களில் இருந்து மாறுதல், சின்ன இளைப்பாறல் போன்ற காரணங்கள்தான் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வதின் நோக்கம். ஒவ்வொருவரும் அதில் உச்சம் தொட்டுச் சாதனையாளர் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த விஷயத்தில் பிள்ளைகளைவிட பெற்றோர்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பயணமே தவிர; பந்தயம் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று முடிக்கிறார் சிரில்.

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

கிருபாகரனின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. வீட்டு உறுப்பினர்களாலேயே கண்டுகொள்ளப்படாத அவரது திறமைதான் இன்று அவரது வளமான வருங்காலத்துக்கு அச்சாரம் இட்டிருக்கிறது. ''எங்க வீட்ல எல்லாருமே நல்லாவே ஓவியம் வரைவாங்க. அதனால, நான் வரைஞ்சப்ப யாரும் பெருசா ஆர்வம் காட்டலை. 'சரி... ஓவியம் வரைவது ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம்தான்போல'ன்னு நினைச்சுட்டேன். ஆனாலும், உள்ளுக்குள் அந்த ஆர்வம் முட்டி மோதிட்டே இருந்தது. ஹோட்டல் மேனஜ்மென்ட் படிக்கும்போது காய்கறி, பழங்களில் ஆர்ட்வொர்க் பண்ணிட்டு இருப்பேன். ஏனோ, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சம்பந்தமான வேலை பார்க்கப் பிடிக்கலை. மதுரை அமெரிக்கன் காலேஜ்ல விஸ்காம் படிப்பில் சேர்ந்தேன். என் கலை ஆர்வத்துக்கு அந்தப் படிப்பு தீனி போட்டுச்சு. நிறைய ஓவியங்கள் வரையத் துவங்கினேன். பல ஆர்ட் ஃபெஸ்டிவெல்களில் என் ஓவியங்களுக்கு இடம் கிடைச்சது. அது போக ஃபேஸ் பெயின்ட்டிங், டாட்டூஸ் வரைவது, ஒருத்தர் முகத்தை அஞ்சு நிமிஷத்துல போர்ட்ரைட் மாதிரி வரைஞ்சு கொடுக்கிறதுன்னு அத்தனை பரிமாணங்களிலும் ஓவியம் வரைஞ்சேன். எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு கையில் காசு புரண்டது. அதையும் ஓவியத்தில்தான் முதலீடு செஞ்சேன். இந்தத் தொடர்புகள் மூலம் கிடைச்ச பழக்கங்கள் குறும்படங்கள் இயக்கும் வாய்ப்பைத் தந்தது. குறும்பட இயக்குநர் அமுதனோடு சேர்ந்து நாங்க தயாரித்த 'வேர்கள்' மலையாளப் படத்தை ஆஸ்திரேலியாவில் ஸ்க்ரீன் பண்ணினாங்க. டிஸ்கவரி சேனலின் தென்பிராந்தியப் பணிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை முடிச்சுக் கொடுக்கும் வேலை கிடைச்சது. திருப்தியா முடிச்சுக் கொடுத்ததில், பேசினதுக்கு மேல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து தொடர்ந்து சேனலுக்காக வேலை பார்க்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. மதுரையில நடந்த சர்வதேசக் குறும்படத் திருவிழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் பொறுப்பும் தேடி வந்தது. ஓவியம், கேமரா, இசை, குறும்பட இயக்கம்னு இத்தனை தளங்களில் நான் இயங்குவேன்னு மூணு வருஷம் முன்னாடி கனவுகூட கண்டதில்லை. இப்போ கல்லூரி படிப்பு முடியப்போகுது. இயக்குநர் சிம்புதேவனிடம் அசிஸ்டென்ட்டா சேரப்போறேன். சினிமா இன்னும் பெரிய தளம். இன்னும் திறமைகளை வளர்த்துக்கணும்!'' எனும் கிருபாகரனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் டன் கணக்கில் உற்சாகம்.

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

காமர்ஸ் மாணவியான லக்ஷனா பொழுதுபோக்காகத் தேர்ந்தெடுத்த ஒரு பழக்கம்தான் இன்று அவரது அங்கீகார அடையாளம். ''ப்ளஸ் டூ படிக்கிற வரை சங்கீதம் கத்துக்கிறதை ஒரு பொழுதுபோக்காத்தான் வெச்சிருந்தேன். காமர்ஸ் படிச்சு சி.ஏ முடிச்சு ஆடிட்டர் ஆகணும்கிறதுதான் ஐடியா. ஆனா, கடந்த மூணு வருஷத்தில் என் வாழ்க்கையில் கிடுகிடு மாற்றங்கள். திருச்சி கணேசன் மாஸ்டரும், வீணை சிவக்குமார் மாஸ்டரும்தான் என்னோட ப்ளஸ் பாயின்ட்டை எனக்கு அடையாளம் காட்டினாங்க. 'எல்லாருக்கும் நல்ல குரல் வளம் இருக்கிறதில்லை. உனக்கு அது இயற்கையா அமைஞ்சிருக்கு. அதை வீணாக்காதே'ன்னு சொல்லிச் சொல்லியே என்னை ஏழு ஸ்வரங்களுக்குள் மூழ்கடிச்சிட்டாங்க. ஏரியா ஸ்டேஜ் ஷோவில் ஆரம்பிச்சு ஆல் இண்டியா ரேடியோ, டி.வி ஷோ, மேடைக் கச்சேரிகள்னு இப்போ நான் கிட்டதட்ட மினி செலிபிரட்டி. காமர்ஸ் படிச்ச நான் அடுத்ததா படிக்கப் போற பி.ஜி படிப்பு இசை. எதிர்காலத்தில் இசையில் பிஹெச்.டி பண்ற திட்டமும் இருக்கு!'' என்று கண்கள் நிறையக் கனவுகள் பிரதிபலிக்கிறார் லக்ஷனா.

உங்களுக்குள் இருக்கும் அந்த சகலகலா வல்லவரை நீங்கள் தட்டியெழுப்பும் நாள் எந்நாள்?

''தனித்திறமை அவசியம்!''

நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் சீனியர் சீஸன் 2-ல் வெற்றிபெற்ற அஜீஸ் அசோக் மிக சராசரி குடும்பத்தைச் சேர்ந்த விஸ்காம் மாணவன்.இயல்பான குரல்வளம் பயிற்சியின் மூலம் இனிமை சேர்த்துக்கொள்ள, கல்லூரி இறுதியாண்டு மாணவராக இருக்கும்போதே பின்னணி பாடும் வாய்ப்புகள்.

''அப்பா அசோக், அசோக் லேலாண்ட், அம்மா கீதா எல்.ஐ.சி ஊழியர்கள். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சேன்னுதான் சொல்லணும். பத்தாவது படிக்கும்போதே ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில பாடியிருக்கேன். பள்ளி, கல்லூரின்னு எல்லா இடங்களிலும் நிறைய போட்டிகளில் பல பரிசுகள் ஜெயிச்சுருக்கேன். அப்படி சின்னச் சின்ன வட்டங்களில் வளைய வந்துட்டு இருந்த என் மேல பளிச் வெளிச்சம் பாய்ச்சியது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இப்போ சினிமா பின்னணி பாடல் பாடும் வாய்ப்பு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புன்னு உலகம் சுத்திட்டு இருக்கேன். நிச்சயமா இதெல்லாம் எதிர்பார்த்து நான் சங்கீதம் கத்துக்கலை. ஆனா, வாய்ப்பு வந்தப்போ இந்தத் திறமை என்னை அலேக்கா உயரத்துக்கு தூக்கிட்டுப் போயிருச்சு. இந்தப் பயிற்சிகள் கொடுத்த தன்னம்பிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளிலும் எப்பவும் மதிப்பான மதிப்பெண்கள் குவிக்கும் மாணவனாகவும் இருந்தேன். என்னைக் கேட்டா, செல்போனைக் காட்டிலும் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை அவசியம்!'' என்று சிலிர்க்கிறார் அஜீஸ்!

ம.கா.செந்தில் குமார்


சைக்கோ மெட்ரிக் டெஸ்ட்!

பிரபல தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக பணியாற்றும் ஜெஸி ஆலிவர் தனித்திறன் மேலாண்மை குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

''பொழுதுபோக்க, தனிமை தவிர்க்க, இயல்பான ஆர்வம் காரணமாக, கேரியராக அமைத்துக்கொள்ள என எந்த எந்த நோக்கத்துக்காக தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்களின் ஆலோசனை போக, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் மூலமும் ஒருவரது விருப்பத்தை தீர்மானிக்கலாம். சைக்கோமெட்ரிக் டெஸ்ட் என்பது மனதை அளவிடும் ஒரு தேர்வு. இன்ட்ரஸ்ட் டெஸ்ட், அச்சீவ்மென்ட் டெஸ்ட், பெர்சனாலிட்டி டெஸ்ட், இன்டெலிஜன்ட் டெஸ்ட் எனப் பல நிலைகள் உள்ளன. இன்ட்ரெஸ்ட் டெஸ்ட் மூலம் ஒருவரது உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆர்வத்தை அடையாளம்கொள்ளலாம். பொறியியல் மாணவர் ஒருவருக்கு நடனத்தில்தான் ஆர்வம். தொடர்ந்து நடனம் கற்று, தற்போது சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அதேபோல பல் மருத்துவம் முடித்த மருத்துவர் ஒருவருக்கு மார்க்கெட்டிங்கில் ஆர்வம். உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, எம்.பி.ஏ., படித்து முடித்து தற்போது மார்க்கெட்டிங் துறையில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். விருப்பம் இருக்கும் எதையும் நெருக்கமாக உணர்வீர்கள்!''

பா.பிரவீன்குமார்

 
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்
நீங்கள் சகலகலா வல்லவரா? :ஜீரோ டு ஹீரோ டிப்ஸ்