Published:Updated:

''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''

''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''

பிரீமியம் ஸ்டோரி
16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
கி.கார்த்திகேயன், படங்கள் : கே.ராஜசேகரன்
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''

''ராஜபாளையம்தான் நான் பிறந்து வளர்ந்தது. கோவில்பட்டியில டென்த் படிக்கிறப்ப எனக்கு அப்போ எதிரியா இருந்த ஒரு பையனுக்கு ரஜினி ஆபீஸ்ல இருந்து ஆட்டோகிராஃப் போட்ட ரஜினி போட்டோ ஒண்ணு வந்துருச்சு. ஒரே நாள்ல ஏரியா ஹீரோ ஆகிட்டான். அதுவரை என் ஓவியங்களால் கொஞ்சம் கவனம் பெற்றிருந்த எனக்குப் பயங்கர அவமானமாயிருச்சு. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக்னு அப்போ இருந்த எல்லா ஹீரோக்களையும் படமா வரைஞ்சு எடுத்துட்டு மெட்ராஸ் கிளம்பிட்டேன். அவங்கவங்க படங்களில் அந்தந்த ஹீரோக்களிடம் கையெழுத்து வாங்கணும்னு வெறி. ஆனா, ஒருத்தரைக்கூட என்னால நேர்ல பார்க்க முடியலை. யதார்த்தமா அம்புலிமாமா ஆபீஸ் பக்கம் ஒதுங்கினேன். என் கையில் இருந்த ஓவியங்களைப் பார்த்துட்டு, 'இது மாதிரில்லாம் படம் போடக் கூடாது. ராஜா, ராணி, மரம், குரங்குன்னு அழகாப் போடணும் சரியா?'ன்னு சொல்லி வேலை கொடுத்தாங்க. அடுத்தடுத்து, தமிழின் அத்தனை பத்திரிகைகளிலும் என் ஓவியப் பெண்கள் கண்களில் காதல் தேக்கிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. நிமிர்ந்து பார்க்கக்கூட நேரம் இல்லாம வரைஞ்சுட்டே இருந்தேன். முழுசா 10 வருஷம் கழிச்சுத்தான் ஊருக்குத் திரும்பிப் போனேன். ஒருவேளை, அன்னிக்கு நான் யாராவது ஒரு ஹீரோகிட்ட கையெழுத்து வாங்கிஇருந்தா, இப்பவும் ஊர்ல எங்கேயாவது சுவத்துல எதாவது வரைஞ்சிட்டு இருப்பேனோ என்னவோ!

''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''

சாதாரண விவசாயக் குடும்பம் எங்களுடையது. யூ.கே.ஜி-ல எனக்கு ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால், சி ஃபார் கேட்னு எழுதச் சொன்னாங்க. ஏ எப்படி எழுதணும், சி எப்படி வளைக்கணும்னு டீச்சர் சொல்லிக் கொடுத்ததைக் கவனிக்கக்கூட இல்லை. ஏ-க்கு எதிரே ஆப்பிள் படம், பி-க்கு எதிரே பந்து படம், சி-க்கு எதிரே பூனை படம்னு வரைய ஆரம்பிச்சுட்டேன். என் நோட்டை வாங்கிப் பார்த்த டீச்சர், என்னைத் திட்டுறதா, அடிக்கிறதான்னு தெரியாம முழிச்சாங்க. அடுத்தடுத்து நடந்த பரீட்சைகள்லயும் இதே விளையாட்டுதான். 'கண்ணகி ஆற்றைக் கடந்து மலையேறி கோயிலில் கோவலனைச் சந்தித்தாள்'னு எழுத வேண்டிய இடத்துல, கண்ணகி ஆற்றைக் கடந்து நடக்கிற மாதிரி, மலையேறுகிற மாதிரி, கோயிலுக்குள் நுழையுற மாதிரி, கோவலனைச் சந்திக்கிற மாதிரின்னு படங்களா வரைஞ்சுவெச்சிருப்பேன். இப்படியே ரொம்ப நாள் டேக்கா கொடுக்க முடியலை. வருஷத்துக்கு ஒரு ஸ்கூல்னு 10 ஸ்கூல்ல படிச்சேன். 10 வெவ்வேற யூனிஃபார்ம்ஸ்.

ஸ்கூல்ல படிக்கிறப்போ அடிக்கடி சினிமா பார்க்க ஓடிப் போயிருவேன். சினிமா பார்க்கக் காசு இருக்காது. 'சிவகாசியில காலண்டர் வரைஞ்சு கொடுத்தா காசு கிடைக்கும்'னு பசங்க சொன்னாங்க. பல கடைகளில் போய் வேலை கேட்டேன். ரொம்ப சின்னப் பையனா இருக்கானேன்னு வேலை கொடுக்க மாட்டாங்க. சளைக்காம தினமும் போய் நிப்பேன். 'தெனமும் ரோதனையைக் கொடுக்குறானே... என்ன பண்ணலாம் இவனை'ன்னு நினைச்சோ என்னவோ அதுல ஒருத்தர் மட்டும் என்னை உக்காரச் சொன்னாரு.

தீப்பெட்டி டிஸைன், காலண்டர், போஸ்டர்னு வரைஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். கைகொள்ளாமக் காசு கிடைச்சது. புரோட்டா தின்னுட்டு, சினிமா பார்த்துட்டு செம ஜாலியாத் திரிஞ்சேன். அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு அடி வெளுத்தெடுத்துட்டாரு.

அதனாலேயே எனக்கு வரையத் தெரியும்னு யார்கிட்டயும் சொல்லிக்க மாட்டேன். திட்டுவாங்க, அடிப்பாங்கன்னு பயம். ஏழாவது படிக்கிறப்போ, நாலஞ்சு வருஷம் ஃபெயில் ஆன சீனியர் பையன் ஒருத்தன் என்கூட படிச்சான். கிட்டத்தட்ட ரௌடி. ஒரு நாள் அவன் என்னை சில்க் ஸ்மிதாவை வரையச் சொன்னான். 'வரையலேன்னா அடிப்பானே'ன்னு பயந்துகிட்டே நானும் வரைஞ்சுட்டேன். கையை ஒரு மாதிரி ஆட்டி அசைச்சு, அந்த சில்க் ஸ்மிதா ஆடுற மாதிரி கிளாஸ் ரூம்ல வேடிக்கை காமிச்சுட்டு இருந்தான். அதைப் பார்த்துட்ட எங்க மிஸ், 'என்னடா வரைஞ்சிருக்க கையில... யாருடா அது?'ன்னு கேட்டாங்க. 'ஆங்... நீங்கதான். வரைஞ்சது இவன்தான்!'னு அசால்ட்டா என்னைக் கை காட்டிட்டான். அந்த மிஸ் எங்க ரெண்டு பேரையும் தரதரன்னு இழுத்துட்டுப் போய், ஹெட்மாஸ்டர்கிட்ட நிப்பாட்டிட்டாங்க. பார்த்ததுமே என்னைப்பத்திப் புரிஞ்சுக்கிட்டார் ஹெட்மாஸ்டர். 'உனக்கு இவ்வளவு நல்லா வரையத் தெரியும்னு எனக்குத் தெரியவே தெரியாதே! ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை. ஆனா, இப்படிலாம் அசிங்கமா படம் போடக் கூடாது. சரியா?'ன்னு பாசமாப் பேச ஆரம்பிச்சுட்டாரு. 'ஓஹோ... அப்போ வரையிறது தப்பில்லைபோல'ன்னு அப்பதான் எனக்குப் புரிஞ்சது. கொஞ்ச நாள் அடக்க ஒடுக்கமா இருந்தேன்.

அப்பத்தான் ஹீரோக்கள்கிட்ட கையெழுத்து வாங்கணும்னு மெட்ராசுக்கு ஓடி வந்தது. அம்புலிமாமா ஆபீஸ்ல ஆரம்பிச்ச பயணம் இப்போ தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு பல மொழிகளுக்கு இழுத்துட்டுப் போயிருச்சு. என்னை எப்படி நம்புனாங்கன்னு தெரியலை... நான் மெட்ராசுக்கு வந்ததுமே எல்லா பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளுக்கும் என்கிட்டதான் படம் போடக் கொடுத்தாங்க. ஃபீல்டுலயே சின்னப் பையன்கிறதாலயோ என்னவோ, எல்லா எழுத்தாளர்களும் என்கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. சுஜாதா சாருக்கு நான் ரொம்பவே செல்லம். 16 வயசுல மெட்ராசுக்கு வந்தவன், அதுக்குப் பிறகு வரைஞ்சுட்டே

''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''

இருந்தேன். ரொம்பக் குறைஞ்ச நேரத்துல எந்த ஓவியத்தையும் முடிச்சுடுறது எனக்குச் சின்ன வயசுல இருந்து கை வந்தது.

என்னைப் பார்க்கிற பலர், 'ஓவியம் வரைஞ்சு சம்பாதிக்க முடியுமா'ன்னு ஆச்சர்யமா கேப்பாங்க. ஏன் முடியாது? எந்தக் கலையிலும் ஒரு தொழில் நேர்த்தியைப் புகுத்தினால், அது வருமானத்தைக் கொட்டும். கோபுலு காலத்தில் இருந்து பிரமாதமான ஓவியர்களை உருவாக்கிட்டு இருந்த பூமி இது. ஆனா, துரதிர்ஷ்டவசமா எனக்குப் பிறகு சொல்லிக்கிற மாதிரி பத்திரிகை ஓவியத் துறையில் பெரிய சாதனைகள் யாரும் படைக்கலை. அட்லீஸ்ட்... ரஜினி, கமல்கிட்ட கையெழுத்து வாங்கணும்னாவது யாராவது கிளம்பி வந்து நில்லுங்கப்பா. போட்டி இருந்தா இந்தப் பயணம் இன்னும் இனிக்கும்!''

 
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
''நான் ஸ்யாம் ஆனது எப்படி?''
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு