Published:Updated:

''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''

ந.வினோத்குமார்படங்கள் : பொன்.காசிராஜன்

''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''

ந.வினோத்குமார்படங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##
''க
ண் தானம், ரத்த தானம், உறுப்பு தானம், அன்ன தானம் என இப்படி எத்தனையோ தானங்கள் இருக்கின்றன. ஆனால், பூமிக்குத் தானமாக நாம் எதைக் கொடுத்தோம்? இந்தச் சிந்தனையில் உதித்ததுதான் மர வங்கி. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஐந்து மரங்கள் நட்டால் போதும். அது இந்த உலகத்துக்கே செய்யும் தானமாகும்!'' - காற்றில் சலசலக்கும் இலைகளின் பின்னணியுடன் பேசத் தொடங்குகிறார் முல்லைவனம். சென்னையில் மட்டுமே இதுவரை மூன்று லட்சம் மரக் கன்றுகளை நட்டு அதைப் பராமரித்து வருகிறார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளைக் கொடுத்து சமூகக் கடமையில் நம்மையும் ஒருவராக இணைத்துக்கொள்ளும் பசுமை மனிதர்.

''என் பூர்வீகம் சென்னைதான். விவசாயக் குடும்பம். மரத்தடியே வீடுகளாக இருந்த காலம் அது. விதை போட்டு வளர்க்கும் மரங்களைக் காட்டிலும், கிளை வெட்டி வைக்கும் மரங்கள் வளர்ந்து செழித்திருந்தன. 'காக்கையும் குருவியும் தன் இனம்’ என்று அன்போடு அணைத்துக்கொள்கிற பக்குவம் அப்போது இருந்த மனிதர்களிடத்தில் இருந்தது. வீட்டுக்கு ஒரு பழ மரமாவது இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, இயந்திரமயமாக்கல் சூழலின் வசதிக்காகவும், இடைஞ்சல் என்று கருதியும் மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. அப்போது என் பாட்டனார் ஒவ்வொரு வீடாகச் சென்று, மரங்களை வெட்டாதீர்கள் என்று கெஞ்சிய நாட்கள் இப்போதும் மனதில் ஈரம் காயாமல் இருக்கின்றன.

''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''

என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் சென்று விவசாயம்பற்றியும், மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம்பற்றியும் எடுத்துச் சொல்லிவந்தார். விவசாயம், மரங்கள், மண் வளம் என இப்படி சங்கிலித் தொடர்போல ஒன்றை ஒன்று தொடர்வதைக் கண்டு என்னுள் இயற்கை பற்றிய கேள்விகள் எழுந்தன. ஒவ்வொரு கேள்வியையும் என் தாத்தாவிடம் கேட்டபோது, அவர் 'நம் தாய் - தந்தை மரங்கள்தான்’ என்று சொல்லித்தான் தன் பதிலை முடிப்பார். கருவில் இருந்து வெளியே வந்தவுடனேயே அன்னை தரும் தாய்ப்பாலைப் புசிப்பது இல்லை. மாறாக, இயற்கை அன்னையின் காற்றைத்தான் சுவாசிக்கிறோம். நமக்கான முதல் உணவு அதுதான்.

''நான் முல்லைவனம் ஆனது எப்படி?''

ஏழாம் வகுப்பு வரைதான் படித்தேன். வீட்டில் எல்லா முதியவர் களும் விவசாயத்தைத் தங்கள் தோள் மேல்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஓய்வு கொடுக்க, அந்தப் பொறுப்பை நானும், என் தம்பிகளும் எங்கள் தோள் மீது மாற்றிக்கொண்டோம். என் தாத்தா வும், தந்தையும் இதுவரை எடுத்துச் சென்ற செய்திகளை, இனி நாம் தொடர வேண்டும் என்று, ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கே இருக்கும் பள்ளி மாணவர்களிடத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வினை ஏற்படுத்தி வந்தோம். போகும் இடம் எல்லாம், 'அண்ணா... அண்ணா இன்னும் சொல்லுங்க!’ என்று எங்களைச் சுற்றி வளைத்து அவ்வளவு ஆர்வமாகக் கேட்பார்கள் மாணவர்கள். வரலாறும், வேதியியலும், கணினியும் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில் இரண்டு விஷயங்கள் முற்றாக இல்லை. ஒன்று, விளையாடுவதற்கான நேரம். இரண்டு, சுற்றுச்சூழல் குறித்த செய்திகள் பலவற்றை ஆசிரியர்களே அறிந்து இருப்பது இல்லை. 'அதெல்லாம் எதற்கு?’ என்ற அலட்சிய மனப்பான்மைதான் காரணம்.  

இந்த அலட்சியப் போக்குதான் இயற்கையான நிழலை, குளிர் காற்றைத் தவிர்த்து, ஏ.சி-யில் இருக்கப் பணிக்கிறது. அதில் இருந்து வெளிப்படும் வாயுக்கள்தான் ஓசோனில் ஓட்டை ஏற்படுத்துகின்றன. வசதியாக வாழலாம் என்று நினைத்து, நம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம். ஆகாயத்தில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை எல்லாம் தடுத்து, வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறது. மரங்களே இல்லாமல் போனால், அந்தக் கதிர்கள் தாக்கி நாம் தோல் புற்றுநோயினால் அவதிப்படுவோம். மரக் கன்றில் இருக்கும் ஒவ்வொரு இலையும் உங்கள் சூழலைப் பாதுகாத்து வைக்கிறது. இந்தத் தலைமுறையில் நீங்கள் அனுபவித்துவிட்டு, அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்காமல் போனால் எப்படி?

இந்தத் தலைமுறையில் நானும்தான் இருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நான் சேர்த்துவிட்டுப் போக என்னிடம் மரங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்படித் துவங்கியதுதான் மர வங்கி. குப்பையில் கிடக்கும் பழ விதைகள், வீடுகளில் உள்ள காய்கறிக் கழிவுகள், வெட்டுப் பட்டுக்கிடக்கும் மரங்களில் இருந்து கொண்டுவந்த கிளைகள் என இவற்றை வைத்து மரக்கன்றுகளை நான் சம்பாதிக்கிறேன். தேடி வருபவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறேன். பலர் மரம் நடுகிறேன் என்று சொல்லி வாங்கிச் செல்வார்கள். ஆனால், அதைச் சரியானபடி பராமரிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அபராதமும் விதிப்பேன். இதை நான் ஒருவனே ஒவ்வொரு இடத்திலும் செய்ய இயலாது என்பதால், என்னைப் பின்பற்றி வந்தவர் களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆங்காங்கே பசுமைக் குழுக்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த மர வங்கி மூலமாக சென்னையில் இதுவரை மூன்று லட்சம் மரங்கள் நட்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் 20 லட்சம் மரங்களை நட்டிருக்கிறோம். இந்தியா முழுமைக்கும் 100 கோடி மரங்கள் நட வேண்டும் என்பதுதான் என் விருப்பம், லட்சியம் எல்லாம். ஆனால், ஒரு கையால் தேர் இழுக்க முடியாதே!

ஒவ்வொருவரும் ஒரு மணி நேரத்தை மரம் நடுவது, பராமரிப்பது ஆகியவற்றுக்காகச் செலவழித்தால், நிச்சயம் பூமி குளிரும். இதை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காதீர்கள். எண்ணமாகப் பாருங்கள். யாரோ ஒருவர் வந்து சொல்லித்தான் மரம் நட வேண்டும், சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பது இல்லை. அது ஒரு பொறுப்பு உணர்வு!''