Published:Updated:

தூத்துக்குடி: பனை ஓலையில் 7 அடி உயர ஜெயலலிதா சிலை... அசத்தும் பனைத்தொழிலாளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பனை ஓலையில் உருவாக்கிய பொருட்கள்
பனை ஓலையில் உருவாக்கிய பொருட்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பனை ஓலையில் 7 அடி உயரத்தில் வடிவமைத்து, அவரது நினைவு நாளான இன்று தன் வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டியிடம் பேசினோம், “எங்களோட பூர்வீகமே பனையேறும் தொழில்தான். குடும்பச் சூழ்நிலையால் 5-ம் வகுப்புக்கு மேல என்னால படிக்க முடியலை. அப்பாவுடன் பனைத் தொழிலுக்கேப் போக ஆரம்பிச்சேன். வெட்டிப்போடும் பனை ஓலை, நுங்கு குலைகளைச் சேகரித்தல், பதனீர் காய்ச்சுதல், கருப்பட்டி ஊற்றுதல், சிப்பம் கட்டுதல் என சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

ஜெயலலிதா உருவச்சிலையுடன் பால்பாண்டி
ஜெயலலிதா உருவச்சிலையுடன் பால்பாண்டி

அப்படியே, கொஞ்சம் கொஞ்சமாப் பனை ஏறவும் கத்துக்கிட்டு, 13 வயசுல தனியா பனை ஏறி கலசம் கட்டி, பதனீர் இறக்க ஆரம்பிச்சேன். தொழில் இல்லாத காலத்துல வயக்காட்டு வேலைக்கும் போவேன். பனையேத்தம் குறைஞ்சாலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் என பக்கத்து மாவட்டங்களுக்குப் போயும் பனையேறிட்டு வருவேன். எனக்கு இப்போ வயசு 61. இதுவரைக்கும் முப்பதாயிரம் பனை வரை ஏறி, இறங்கியிருக்கேன். உச்சியில இருந்து மூணு முறை கீழே விழுந்தும் எந்த அடியுமில்லாம தப்பிச்சுட்டேன்.

7 வருசத்துக்கு முன்னால வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குறதுக்காக பைக்குல கடைக்குப் போயிருந்தப்போ எதிரே வந்த கார் மோதி இடுப்பு, கால்பகுதியில பலமா அடிபட்டுச்சு. 'இனிமேல் சைக்கிள், பைக் ஓட்டக்கூடாது. ரொம்ப தூரம் நடக்க கூடாது. பனைமரம் ஏறவேக் கூடாது'ன்னு டாக்டர் சொன்னதுமே உயிரே போனது மாதிரி சோர்ந்துட்டேன். 'ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா'ன்னு சொல்லுறது மாதிரி, பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனை ஒத்த ரூமுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்கன்னு சொன்னா எப்படி இருக்கும்? வீட்டுக்குள்ள உட்கார்ந்தே பெட்டி முடைஞ்சேன்.

பால்பாண்டி
பால்பாண்டி

பெட்டிக்குப் பதிலா ஏதாவது உருவங்களை செய்து பார்க்கலாமான்னு எனக்குத் தோணுச்சு. பேரன், பேத்திகளுக்கு விளையாட முதல்ல பொம்மை செய்தேன். அதுக்கே ஒரு நாள் முழுவதும் ஆயிடுச்சு. தொடர்ந்து, வில்லு வண்டி, விமானம், ஒட்டகம், யானை, குதிரை, திருச்செந்தூர் கோயில் கோபுரம், தேவாலய கோபுரம், தாஜ்மஹால், கலப்பை ஏந்திய விவசாயி, உழவு விவசாயி, ஓலைச் செருப்புன்னு என் மனசுல என்னென்ன தோணுதோ, யார் என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனித உருவங்களைச் செய்தா என்னன்னு ஒரு யோசனை தோணுச்சு. மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜர் ரொம்பப் பிடிக்கும். அதனால, காமராஜரையே டெஸ்ட்டுக்கு எடுத்துக்கிட்டேன். முதலில் கால்பகுதியை செஞ்சு முடிச்சேன். தொடர்ந்து இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு, தலைப்பகுதி என ஒவ்வொரு பாகமாகச் செய்து, கடைசியா எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தேன். ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்னு நினைச்சேன். அதையும் ஏன் ஓலையில செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கு ஏத்ததுபோல ஓலையைப் பக்குவமா கிழிச்சு செய்தேன். அவரோட பிறந்தநாளில் வீட்டுலயே காட்சிப்படுத்தினேன். தொடர்ந்து அப்துல கலாம் ஐயா உருவத்தைச் செய்தேன். அதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை 7 அடி உயரத்தில் செய்து, அவரது நினைவு நாளான இன்று காட்சிப்படுத்தி உள்ளேன். ரெண்டு மாசமா சிறுகச்சிறுக இந்த உருவத்தை செய்து முடிச்சேன்.

பால்பாண்டி
பால்பாண்டி

இதுபோன்ற உருவங்கள் செய்வதற்காக தினமும் காலை, மாலை 2 மணி நேரம் செலவிடுவேன். இதனால எனக்கு எதுவும் வருமானம் இல்ல. என்னோட ஆர்வம் மட்டும்தான். இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் செய்திருக்கேன். சின்ன வயசுல பனைத்தொழிலுடன் சேர்ந்து கத்துக்கிட்ட வைத்தியத் தொழிலையும் செய்துட்டு வர்றேன். பாம்புக்கடி, தேள்கடி, விஷக்கடிக்கு பார்வை பார்க்க வருபவர்கள் தரும் பணத்தை வச்சுதான் ஓலை வெட்டுதல், பெயின்ட், கலைப்பொருட்களை வாங்கிக்குறேன். பனை ஓலைகளில் உருவங்களைச் செய்துவருவதால், எனக்கு கெளரவ டாக்டர் பட்டமும் கிடைத்துள்ளது" என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு