ஸ்பெஷல் -1
Published:Updated:

நான் சிக்கில் குருசரண் ஆனது எப்படி?

நான் சிக்கில் குருசரண் ஆனது எப்படி?

நான் சிக்கில் குருசரண் ஆனது எப்படி?
##~##
''மீ
ன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா என்பார்கள். ஆனாலும், எனக்கு நன்றாகவே கற்றுக்கொடுத்தார்கள்... இசைக் கடலில் நீந்த!'' ஆலாபனை மென்மையில் பேசத் தொடங்குகிறார் 'சிக்கில்’ குருசரண். மார்கழி மாத சீஸனில் இவர் குரல் அலங்கரிக்காத சபா மேடைகளே கிடையாது. 'சங்கீத நாடக அகாடமி’, 'யுவபுரஸ்கார்’ எனக் குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்றவர்.  

''என் பாட்டி சிக்கில் குஞ்சுமணி நீலா பிரபலமான புல்லாங்குழல் வித்வான். அப்போதே சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ விருது கள் பெற்றவர். சமீபத்தில்தான் காலமானார். என் சித்தி மாலா சந்திரசேகர் புல்லாங்குழலைக் கையில் எடுக்க, என் அம்மாவோ அரசு இசைக் கல்லூரியில் பேராசிரியராகப் பாடங் களை வாசிக்கிறார். மூன்றாவது தலைமுறை யாக இப்போது நான் சங்கீதக்காரன்.

என் குரு வைகல் ஞானஸ்கந்தன் செம்மங் குடி ஸ்ரீனிவாச ஐயரின் சிஷ்யர். பாலபாடங் களை அம்மா எனக்குக் கற்றுக்கொடுக்க, முறையான சங்கீதத்தை என் குரு பயிற்று வித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டு முன்னேறட்டும் என்று விட்டுவிடும் சில குருக்கள் இருந்த காலத்தில், சீக்கிரமே பொறுப்பைக் கொடுத்து ஒருவரை முன் னேற்றும் குருவாக எனக்கு ஞானஸ்கந்தன் அமைந்தார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த மூன் றாவது வருடத்தில் நான் அரங்கேற்றம் செய் தேன். இப்படி என் முதல் கச்சேரி 12 வயதில் நடந்தது.

முதல் கச்சேரி செய்த பிறகும் பெரிதாக சாதிப்பேன் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஓர் ஆர்வத்தோடு சாதகம் செய்துகொண்டு இருந்தேன். நான் படித்த வித்யா மந்திர் பள்ளி யில் பாடங்களுக்கு மட்டுமல்லாது; இசை, நடனம் போன்ற பல்வேறு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். அது என்னை இன்னும் பட்டை தீட்டியது. விருந்தினர்கள் வரும் நாட்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் என்னை அழைத்துப் பாட வைத்தார்கள். என் திறமையை அடையாளம் கண்டுகொண்ட ஆசி ரியர்கள் என்னைப் பல இசைப் போட்டிகளில் பங்கேற்க வைத்தார்கள். இப்படி ஒவ்வொரு மேடையையும் பயிற்சிக் களமாகக் கருதியதால், அந்த வயதிலேயே மேடை பயம் நீங்கிவிட்டது. என் பாடலைக் கேட்ட நிறைய பேர் 'நல்லா இருக்கு’ என்றார்கள். அதைவிட அதிகம் பேர் 'இன்னும் சாதகம் பண்ணணும்’ என்றார்கள். 'அடடா நல்லாயிருக்கே’ என்று நினைத்தாலும் எப்போதும் படிப்புக்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன்.

நான் சிக்கில் குருசரண் ஆனது எப்படி?

ஆனாலும், பள்ளி இறுதியில் விவேகானந்தா கல்லூரியில்தான் மேற்கொண்டு படிக்க வேண் டும் என்று முடிவு எடுத்தேன். காரணம், டி.வி.ஷங்கர்நாராயணன், விஜயசிவா என பல இசைக் கலைஞர்கள் அங்கு இருந்துதான் வந் தார்கள். அதனாலேயே அங்கு பி.காம்., சேர்ந் தேன். 18 வயதில் இருந்தே முறைப்படியான கச்சேரிகள் துவங்கிவிட்டேன். இசை பயில ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை, நான் மேடையில் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொண்டு வருகிறேன். நன்றாகக் கச் சேரி செய்தால் பாராட்டுகள் குவிவதுபோல, தவறுகள் செய்யும்போது விமர்சனங்கள் எழுவதும் இயல்புதானே. ஒரு சமயம் கச்சேரியின்போது, எடுத்த எடுப்பிலேயே மெயின் ஐட்டத்தைப் பாடிவிட்டேன். பொதுவாக இரண்டு மணி நேரக் கச்சேரியில் நான்கைந்து பாடல் களைப் பாடிவிட்டு, அதன் பிறகுதான் மெயின் ஐட்டத்துக்கு வருவார்கள். அதுவே 45 நிமிடங்கள் எடுக்கும். சினிமாவில் இன்டர்வெல் வருவது மாதிரி அது. நான் சிறுவனாக இருந்த காரணத்தினால் அது கண்டுகொள்ளப்படவில்லை என்றாலும், மணி கிருஷ்ண சுவாமி என்கிற மேதை என் தவறைத் திருத்தினார். அன்று வருத்தப்பட்டேன். இன்று விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.

பாம்பே ஷண்முகாநந்தா சபா மிகவும் பழமை வாய்ந்த சபா. அங்கே கச்சேரியில் பாடி முடித்த பிறகு, சபா உறுப்பினர்களில் ஒருவர் மேடைக்கு வந்து 'இந்தப் பையன் ரொம்ப நல்லா பாடுறான். இவனுக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணுது’ என்று சொல்லி கண்ணாடி யால் மூடப்பட்ட வெள்ளிக் குத்துவிளக்கை எனக்குப் பரிசாக அளித்தார். வாங்கிய பின்புதான் தெரிந்தது. அந்தப் பரிசு 'வாழ்நாள் சாதனையாளர்களுக்கு’ வழங்கப்படும் விருதாம். அந்த விருதை வளர்ந்து வரும் எனக்குக் கொடுத்தது என்னை இன்னும் உழைக் கத் தூண்டியது. அத்தனை ஆயிரம் பேருக்கு முன்னால் இப்படியான பாராட்டு கிடைப்பதைவிட ஒரு கலைஞ னுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருந்துவிட முடியும்?

இசைப் பயணத்தில் அடுத்த கட்டமாக நானும் அனில் ஸ்ரீனிவாசன் என்ற என் பள்ளி சீனியரும் சேர்ந்து கர்னாடக சங்கீதத்தையும், மேற்கத்திய இசை யையும் இணைத்து ஒரு புது வடிவ இசையை அறி முகப்படுத்தி இருக்கிறோம். அதன் முதல் முயற்சியாக 'மதிராக்ஷி’ ஆல்பம் வெளிவந்தது. அதேபோல குறுந்தொகை, எட்டுத் தொகைப் பாடல்கள் ஆகியவற்றைக்கொண்டு 'தருணம்’ என்கிற ஆல்பம் செம்மொழி மாநாடு சமயத்தின்போது வந்தது. அந்த இசைக் கலவையைக் கேட்டுவிட்டு ஜாஸ் இசையின் மாமேதை ஜான் மெக்லாஃலின், இந்துஸ்தானி இசை மேதை முராத் அலிகான் போன்றவர்கள் பாராட்டியது இன்னும் பெரிய பேறு. கர்னாடக இசையை இன்னும் 'குளோபலைஸ்டு’ ஆக்க எங்களால் முடிந்த ஒரு சிறு முயற்சி அது.

'இன்னிக்கு நல்லா இருக்கு. இன்னிக்குச் சிறப்பா செய்யணும். நாளைக்கு எப்படியோ..? நல்லதே நடக்கும்னு நம்புவோம்..’ என்ற தைரி யம்தான் எம்.ஏ., ஃபைனான்சியல் மேனேஜ் மென்ட் படித்து இருந்தாலும் இசையை முழு நேரத் தொழிலாக ஏற்கவைத்தது. போதுமான அளவு பணம் கிடைக்கிறது. இசையை நிர்ண யிக்கும், எடை போடும் விஷயமாக நான் பணத்தை நினைப்பது இல்லை. அது சங்கீதத்துக்குச் செய்கிற துரோகம்.

விருதுகள் பல வென்றாலும் நான் எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. இப்போது வித்வான் கிருஷ்ணமூர்த்தியிடம் சங்கீதம் பயின்று வருகிறேன். நம்முடைய இசையின் பழமையை இன்னும் ஆழ்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. ஏனெ னில் இசை எனக்குத் தெய்வீக மகிழ்ச்சி!''

படம்:என்.விவேக்