Published:Updated:

தினமும் 5 கி.மீ நடந்து வீடு வீடாக புத்தகம் வழங்கி வாசிக்கத் தூண்டும் 73 வயது மூதாட்டி!

உமாதேவியைப் பாராட்டும் சசிதரூர்
உமாதேவியைப் பாராட்டும் சசிதரூர்

"பெண்களுக்கு வாசிப்பதற்கு விருப்பம் இருந்தபோதிலும், நூலகத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நான் கொடுக்கும் நூல்கள் பயன் உள்ளதாக இருக்கும்." என்கிறார், 73 வயதைக் கடந்த உமாதேவி அஞ்சர்ஜனம்.

தற்போதைய அறிவியல் யுகத்தில் ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்களே கிடையாது என்கிற நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட பெரும்பாலான நேரத்தை மொபைல் போன், கணினி ஆகியவற்றில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Vikatan

இன்றைய இளைஞர்களிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்கிற குரல்களும் எழும்பத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் கேரளாவைச் சேர்ந்த உமாதேவி அஞ்சர்ஜனம் என்ற 73 வயது மூதாட்டி, தினமும் 5 கி.மீ தூரம் நடந்து சென்று வாசகர்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் வீட்டுக்கே தேடிச்சென்று வாசிக்கக் கொடுத்து வருகிறார்.

ஆலப்புழா மாவட்டம், செங்கனூர் அருகே உள்ள பூதன்னூர் கிராமத்தைச் சேர்ந்த உமாதேவி அஞ்சர்ஜனம். கல்லூரிப் படிப்பைப் படித்துக்கொண்டிருந்தபோதே ஜதாவேதா பட்டாதிரிப்பாடு என்பவருடன் கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் மட்டும் உமாதேவியுடன் வசித்து வருகிறார்.

உமாதேவி அஞ்சர்ஜனம்
உமாதேவி அஞ்சர்ஜனம்

18 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தன் கணவரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்டுவதற்குக் கொடுத்துவிட்டார். கணவர் இறந்தபின்னர் வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட  அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அவரை, கணவரின் தந்தை வேலைக்குச் செல்ல அனுமதித்தார். அதனால் பூதன்னூர் கலாபோஷினி நூலகத்தில் கள நூலகராகப் பணியைத் தொடங்கினார்.

கடந்த 14 வருடங்களாகக் கள நூலகராகப் பணியாற்றிவரும் உமாதேவியை காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான சசிதரூர், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். பல்வேறு சமூக அமைப்புகளும் அவரை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். சமூக ஊடகங்களிலும் அவர் குறித்த செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.

மலையாளச் செய்திகளில் உமாதேவி
மலையாளச் செய்திகளில் உமாதேவி

தன்னைப் பற்றி உமாதேவி அஞ்சர்ஜனம் கூறுகையில், "நான் இந்த வேலையைச் செய்வதற்கு எனது குடும்பத்தினர் எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். காலையில் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நூலகத்துக்குச் சென்று எனது பையில் நூல்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் செல்லத் தொடங்குவேன். 220 வீடுகளுக்கு நான் நூல்களை விநியோகம் செய்கிறேன்.

தினமும் 4 முதல் 5 கி.மீ தூரம் நடந்து சென்று நூல்களைக் கொடுப்பேன். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்கள் பற்றி முன்கூட்டியே தெரிவித்து விடுவதால் அதை எடுத்துச் சென்று கொடுப்பேன். பெண்களுக்கு வாசிப்பதற்கு விருப்பம் இருந்தபோதிலும், நூலகத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நான் கொடுக்கும் நூல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.

விடு தேடிச் சென்று பாராட்டும் சசிதரூர்
விடு தேடிச் சென்று பாராட்டும் சசிதரூர்

சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குத் தேவையான கதை புத்தகங்களைத் தருவேன். மறுநாள் வந்து கதை கேட்பேன் என்று சொல்வதால் அவர்களும் ஆர்வமாகப் படிப்பார்கள். வயது முதிர்வின் காரணமாக புத்தகங்களைச் சுமந்தபடி நடப்பதற்கு சில சமயம் சிரமம் ஏற்படும். ஆனால், கல்விக் கடவுளைச் சுமக்கிறேன் என்ற நினைப்பு வந்ததும் என் சிரமங்களை மறந்துவிடுவேன். 

2018-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின்போது எங்கள் லைப்ரரிக்குள் தண்ணீர் வந்து நிறைய நூல்கள் பாழாகிவிட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதுதவிர, நூலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் மன நிறைவுடன் இருக்கிறேன். எனது கடைசி மூச்சு இருக்கும்வரை புத்தகங்களைச் சுமந்து சென்று பிறரைப் படிக்க வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு