Published:Updated:

லாகவமாக உழைக்கலாம்... லாபத்தை அள்ளலாம் !

வே.கிருஷ்ணவேணி, படம்: ஜெ.வேங்கடராஜ்

லாகவமாக உழைக்கலாம்... லாபத்தை அள்ளலாம் !

வே.கிருஷ்ணவேணி, படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

''இது லாபம் மட்டுமில்ல, திருப்தியையும் தரும் தொழில்!'' என்று ரசித்துச் சொல்கிறார், சிதம்பரம் மேலவீதியில் உள்ள 'சர்வமங்கலா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ உரிமையாளர் சுகந்தினி.

''உண்மையாத்தான் சொல்றேன்... கைவேலைப்பாடு தொழில்ல ஒவ்வொரு பொருளையும், நம் ஆர்வத்தையும் கற்பனையையும் செலவழிச்சு பண்ணி, அது இறுதியில் அழகா உருவாகியிருக்கும்போது நமக்கு கிடைக்கிற திருப்திக்கு இணையே இல்லை!'' என்று சொல்பவர், தொழில், குடும்பம் என்று இரண்டையும் பேலன்ஸ் செய்யும் லாகவத்தையும் நன்கு அறிந்தவர்.

''புதுச்சேரிதான் சொந்த ஊர். பி.ஏ., எகனாமிக்ஸ் முதல் வருடம் படிச்சிட்டு இருக்கும்போதே, கல்யாணம் முடிஞ்சிடுச்சு. 'இனி படிப்பு அவ்வளவுதான்'னு அழுத என்னை, 'ஏன் அப்படி நினைக்கிறே?’னு தேற்றின கணவர் பாலாஜி ஸ்ரீனிவாசன், சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் வருடப் படிப்பை முடிக்க வெச்சார். அப்புறம், ரெண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பில், வேறெதையும் பற்றி சிந்திக்க முடியல. அவங்க கொஞ்சம் வளர்ந்ததும், சின்ன வயசில் கற்றிருந்த கிராஃப்ட்டையே தொழிலா ஆக்கலாம்னு எண்ணம் வந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாகவமாக உழைக்கலாம்... லாபத்தை அள்ளலாம் !

'வீட்டு வேலையை ஒழுங்கா பார்க்காம, என்ன தொழில் ஆரம்பிக்கப் போறே'னு, புகுந்த வீட்டில் சொல்லிடுவாங்களோனு எனக்குள் ஒரு தவிப்பு. தைரியத்தை வரவழைச்சிட்டு, கணவர்கிட்ட விஷயத்தை சொன்னேன். 'தாராளமா செய், நாங்க உன்கூட இருக்கோம்!’னு சொன்னார். மாமனார், மாமியார் ரெண்டு பேரும் நான் பயந்த மாதிரி இல்லாம... என்னோட முயற்சிக்கு உறுதுணையா இருந்தாங்க. உடனடியா வேலைகள்ல இறங்கி னேன். விவசாயத்தை பார்த்திட்டிருந்த கணவரும் என் தொழிலுக்கு கைகொடுத்தார். இப்போ அவர் தனியா ஒரு கிராஃப்ட் கடையைப் பார்த்துக்கிறார்!'' என்று சிரிக்கும் சுகந்தினி,

''என் கணவரைப் போல யாரும் இல்லைனு கர்வத்தோட நினைக்கும் அளவுக்கு, தோள்கொடுத்து என்னை இவ்வளவு தூரம் ஏற்றி வந்திருக்கார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் ரெண்டு பேரும் சம்பாதிச்சாதான், செலவுகளைச் சமாளிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில... ஈகோ, ஆணாதிக்கம், சண்டை, சச்சரவு இதையெல்லாம் விலக்கி நின்னாதான், வீட்டில் நிம்மதி வரும். ரெண்டு பேரும் சமம், ஒருத்தருக்கு ஒருத்தர் முக்கியம்ங்கிற மனநிலைதான் கணவன், மனைவியை நல்ல உறவுக்குள் கொண்டு செல்லும். அந்த வெற்றிகரமான திருமண வாழ்க்கைதான் சமுதாயத்தில் நல்ல பெயரை எடுத்து, குடும் பத்தையே வெற்றிப் பாதையில பயணிக்க வைக்கும்!'' என்று அழகாக குடும்பப் பாடத்தையும் செருகியவர்,

''இதுவரைக்கும் சுமார் ஆயிரம் பேர் எங்கிட்ட கிராஃப்ட் பயிற்சி பெற்றிருப்பாங்க. கணவனால் கைவிடப்பட்டவங்க, மாற்றுத்திறனாளிகள் போன்றவங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங்காக மெட்டீரியலை இலவசமாக கொடுத்து, பயிற்சிக்கு பாதி கட்டணம் மட்டுமே வாங்கிட்டிருக்கேன். 'வீட்டுல பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்ல... அதனாலதான் கிராஃப்ட் கிளாஸாச்சும் வந்து போகலாமேன்னு சேர்ந்தேன்’னு சொல்லிட்டு வந்த பெண்கள்கூட, நிக்க நேரமில்லாம ஓடுற அளவுக்கு கிராஃப்ட் தொழிலில் கலக்கிட்டு இருக்காங்க!

சீர்வரிசைத்தட்டு, ஃப்ளவர்வாஷ், வேக்ஸ் கிராஃப்ட், பாட் பெயின்ட்டிங், டைல்ஸ் பெயின்ட்டிங், வால் ஹேங்கிங் மற்றும் பலதரப்பட்ட பெயின்ட்டிங் வகைகளை கற்றுக்கொடுப்பதோடு, விற்பனையும் செய்றேன். சீஸனைப் பொறுத்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். கல்யாண சீஸன்ல கூடுதல் லாபம்தான். மொத்தத்தில், இந்த கிராஃப்ட் உலகம் எனக்கு சந்தோஷத்தையும் சம்பாத்தியத்தையும் அள்ளித் தருது!'' என்றார் சுகந்தினி, முகத்தில் மகிழ்ச்சியைத் தேக்கியவராக!

லாகவமாக உழைக்கலாம்... லாபத்தை அள்ளலாம் !