Published:Updated:

``மறக்க முடியாத தனிமை சைக்கிள் பயணம்... 13 வருஷத்துக்குப் பிறகு மீண்டும் டான்ஸ்!" - நடிகை ரேவதி

எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் டான்ஸ் குருவுடன் ரேவதி
எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் டான்ஸ் குருவுடன் ரேவதி

அம்மாவுக்கும் மீறிய மரியாதையை டான்ஸ் குரு மேல வெச்சிருக்கேன். அவங்க இருக்கிற இடத்துல சேர்ல உட்கார மாட்டேன். தரையிலதான் உட்காருவேன்.

நடிப்புக்கு மட்டுமல்ல, நடனத்துக்கும் புகழ்பெற்றவர் நடிகை ரேவதி. கிளாசிக்கல் டான்ஸில் கலக்கிக்கொண்டிருந்தவர், கடந்த 13 ஆண்டுகளாக நடனமாடுவதைக் கைவிட்டிருந்தார். இந்நிலையில், தன் டான்ஸ் குருவுக்காக மீண்டும் நடனமாடத் தொடங்கியிருக்கிறார். நேற்று இவர் பயின்ற நடன பள்ளியின் ஆண்டு விழாவில் நடனமாடியிருக்கிறார். தன் டான்ஸ் ஆர்வம் குறித்தும் பேசுகிறார் ரேவதி. 

நடிகை ரேவதி
நடிகை ரேவதி

``என் டான்ஸ் ஆர்வத்தைக் கண்டுபிடிச்சு, அதுக்கு ஊக்கம் கொடுக்க நினைச்சார் என் அம்மா. 7 வயசுல, சென்னை `ஶ்ரீ சரஸ்வதி கான நிலைய'த்துல டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். எங்கப்பா ராணுவத்துல வேலை செய்ததால, அப்போ இந்தியாவின் பல பகுதிகளில் வசிச்சோம்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு, நடனமாடும்  ரேவதி
13 ஆண்டுகளுக்குப் பிறகு, நடனமாடும் ரேவதி

எனக்கு டான்ஸ் ஆர்வம் குறைஞ்சுடக் கூடாதுனு என் அம்மா என்னுடன் டான்ஸ் ஆடுவாங்க; எனக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. அவ்வப்போது சென்னை வந்து என் டீச்சர் ரங்கநாயகி ஜெயராமன்கிட்ட டான்ஸ் கத்துப்பேன். என் 12 வயசுல அரங்கேற்றம் செய்தேன். பிறகு சென்னையிலயே குடியேறிட்டோம்.

`இயல் இசை நாடக மன்ற'த்தின் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றேன். அதனால், அம்மன்றத்தின் சார்பில் ஈரோடு, கரூர், பவானி, நாகப்பட்டினம்னு நான்கு ஊர்களில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைச்சுது. பிறகு, அர்ப்பணிப்புடன் டான்ஸ் கத்துக்கிட்டேன். என்மேல சிறப்பு கவனம் செலுத்தி, என் டீச்சர் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க.

நடிகை ரேவதி
நடிகை ரேவதி

அப்போ எங்க வீடு டிஃபன்ஸ் காலனியில இருந்துச்சு. சனி, ஞாயிறுகளில் எங்க வீட்டுல இருந்து திருவல்லிக்கேணியிலிருக்கும் டான்ஸ் ஸ்கூலுக்கு சைக்கிள்ல தனியா போவேன். என் டீச்சர் எல்லா மாணவிகளுக்கும் பிடி சோறு கொடுப்பாங்க. எனக்கு ஊட்டியும் விடுவாங்க. அதேசமயம் சரியா டான்ஸ் ஆடலைனா, பிரம்பாலயே அடிப்பாங்க. அதுக்காக நாங்க எங்கயும் புகார் கொடுக்கலை. எங்க பெற்றோரும் சண்டைக்கு வரலை.

மாணவர்களின் நலனுக்காகக் கண்டிக்கிறதுதான் ஆசிரியரின் கடமை. அதனாலதான் நாங்க முன்னுக்கு வர முடிஞ்சது. அம்மாவுக்கும் மீறிய மரியாதையை டான்ஸ் குரு மேல வெச்சிருக்கேன். அவங்க இருக்கிற இடத்துல சேர்ல உட்கார மாட்டேன். தரையிலதான் உட்காருவேன். அந்தக் காலத்துல கிளாசிக்கல் டான்ஸை பெரிய கலையாக மதிச்சாங்க.

அரங்கேற்றம் முடிச்ச சில வருஷங்களில் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். `நடிப்பைவிட டான்ஸ்தான் உனக்குச் சிறந்தது. அதை கைவிட்டுடாதே'னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதனால நடிச்சுகிட்டிருந்தாலும், தொடர்ந்து டான்ஸ் கத்துகிட்டேன். நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் டான்ஸ் ஆடியிருக்கேன்" என்கிற ரேவதி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடனமாடியது குறித்துப் பேசுகிறார்.

``தனிப்பட்ட காரணங்களால என்னால டான்ஸில் கவனம் செலுத்த முடியலை. வருத்தமா இருந்தாலும், அதைத் தொடர முயற்சி செய்தும் என்னால பயிற்சி எடுக்க முடியலை. அது என்னுடைய தவறுதான். கடந்த 13 வருஷமா சுத்தமா கிளாசிக்கல் டான்ஸ் ஆடவேயில்லை. இந்நிலையில், என் டான்ஸ் ஸ்கூலின் 80-வது ஆண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்தார் என்னுடைய குரு. மேலும், என்னை டான்ஸ் ஆடவும் வலியுறுத்தினார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் டான்ஸ் குருவுடன் ரேவதி
எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் டான்ஸ் குருவுடன் ரேவதி

என் குருவின் இரண்டு பிள்ளைகளும் அமெரிக்காவில் இருக்காங்க. அவங்க, என் குருவை அமெரிக்காவுக்கு வந்திடச்சொல்லி அழைப்பு விடுப்பாங்க. `என் நூற்றுக்கணக்கான பிள்ளைங்க இப்பவும் டான்ஸ் கத்துக்கிறாங்க. அவங்கள விட்டு நான் எங்கயும் வரமாட்டேன்'னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு டான்ஸ் மேல் அவங்களுக்கு மதிப்பு உண்டு.

என் குருவுக்கும், என் டான்ஸ் மையத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில மீண்டும் டான்ஸ் ஆட முடிவெடுத்தேன். போன வாரம் சில தினங்கள் டான்ஸ் ரிகர்சலுக்குப் போயிருந்தேன். அப்போ என் பழைய தோழிகளும் வந்திருந்தாங்க. அவங்களுடன் பழைய நினைவுகள் குறித்துப் பேசியபோது கண்கலங்கினேன்.

தொடர்ந்து டான்ஸ் ஆடணும்னு ஆசைப்படறேன். அதற்கு என் உடலும் மனசும் எந்தளவுக்கு ஒத்துழைக்கும்னு தெரியலை. ஆனாலும், அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்வேன்
நடிகை ரேவதி

வயசாகிட்டதால, என் குருவால இப்போ டான்ஸ் ஆட முடியாது. ஆனாலும், சேர்ல உட்கார்ந்தபடி நிறைய ஆலோசனைகளைச் சொல்லிக்கொடுத்து ஊக்குவிச்சாங்க.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்க டான்ஸ் மையத்தின் ஆண்டு விழா நடந்துச்சு. அதில், கிருஷணரைப் போற்றும் ஒரு பதத்துக்கு 15 நிமிஷம் டான்ஸ் ஆடினேன். அரங்கத்திலிருந்த எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. பல வருஷம் கழிச்சு டான்ஸ் ஆடினதால எனக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

நடன ஆசிரியருடன் ரேவதி
நடன ஆசிரியருடன் ரேவதி

அந்த நாளை என்னால மறக்கவே முடியாது. தொடர்ந்து டான்ஸ் ஆடணும்னு ஆசைப்படறேன். அதற்கு என் உடலும் மனசும் எந்தளவுக்கு ஒத்துழைக்கும்னு தெரியலை. ஆனாலும், அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்வேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் ரேவதி.

அடுத்த கட்டுரைக்கு