Published:Updated:

கருப்பணசாமி `ரெயின்போ' சேகர்; பி.ஏ பட்டதாரி `அம்மன்'ஆனந்த் - வீதி விருது விழா கலைஞர்கள் சொல்வதென்ன?

கருப்பணசாமி `ரெயின்போ' சேகர்
News
கருப்பணசாமி `ரெயின்போ' சேகர்

மாற்று ஊடக மையம், லயோலா கல்லூரி மாணவர்கள் அரவணைப்பு மையம், இல்லம் தேடி கல்வி (பள்ளிக்கல்வித்துறை) இணைந்து நடத்திய நாட்டுப்புற கலைக்கான வீதி விருது விழாவில் கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்

நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் வீதி விருது விழா சென்னை இலயோலா கல்லூரியில் நடைபெறுகிறது. 9ஆம் ஆண்டான இந்த ஆண்டும் வீதி விருது விழா ஜனவரி 2, 3 தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர்கள் த.ச.ஞானவேல், மாரி செல்வராஜ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

மாற்று ஊடக மையம், லயோலா கல்லூரி மாணவர்கள் அரவணைப்பு மையம், இல்லம் தேடி கல்வி (பள்ளிக்கல்வித்துறை) இணைந்து நடத்திய நாட்டுப்புற கலைக்கான வீதி விருது விழாவில் கலைஞர்கள் விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்கள். ஒயிலாட்டம், கரகாட்டம், சாமியாட்டம்,சிலம்பம், கும்மி என நாட்டுப்புறக்கலைகளால் மேடையை அலங்கரித்த கலைஞர்கள் சிலரிடம் பேசினோம்.

அம்மன் வேடமணிந்தவரை சூழ்ந்து செல்பி எடுக்க ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்துக்குள் ஒருவராக சென்று அக்கா, "பேசலாமா" என்றவுடன் அவர் "நான் பையன்ங்க" என்றார்.

வீதி விருது விழாவில் அம்மன் ஆனந்த்
வீதி விருது விழாவில் அம்மன் ஆனந்த்

அச்சு அசல் அம்மனாவே மாறியிருந்த அந்தக் கலைஞரிடம் பேசினோம், "என் பேரு ஆனந்த், ஊர் சமயபுரம். பி.ஏ. இங்கிலீஷ் படிச்சிருக்கேன். ஏழாவது படிக்குறப்ப இருந்து கரகாட்டம், சாமியாட்டம்லாம் ஆடிட்டு இருக்கேன். வீதி விருது விழாவுல 5 வருஷமா கலந்துகிட்டு இருக்கேன். இங்க வர்ற மக்கள் எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிச்சு எங்ககிட்ட பேசுறதும் போட்டோ எடுக்குறதும் சந்தோஷமா இருக்கு. எங்களோட கலைகளை அங்கீகரிக்கக் கூடிய நிகழ்ச்சியா இது இருக்கு. பள்ளி, கல்லூரிலையும் கலை நிகழ்ச்சிகள்ல சினிமா பாட்டுக்கு குடுக்குற முக்கியத்துவத்தை நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கொடுக்கணும். அது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும்" என்றார்.

கம்பீரமான தோற்றமுடைய கருப்பண்ணண் சாமி வேடமணிந்து கடந்து சென்றவரிடம் பேசினோம், "என் பேரு 'ரெயின்போ' சேகர். திருவாரூர்தான் என் ஊர். பறையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம்னு எப்பவுமே கலைகட்டும் வீதி விருது விழா; வீதியில் ஆடிப் பாடி மக்களை சந்தோஷப்படுத்தும் தெருக்கூத்து கலைஞர்களை உற்சாகப்படுத்தற வழா இது. தென் மாவட்டங்களில் பலருடைய குல தெய்வமான கருப்பண்ணன் சாமி வேடம் அணிந்து விழா மேடையில் கருப்பண்ணன் ஆட்டம் ஆடினது எனக்கு ரொம்ப சந்தோஷம்

கிராமியக்கலை தமிழ் பண்பாட்டோட அடையாளம். வீதி விருது விழா போன்ற விழாக்கள் மட்டுமல்லாமல் அரசும் கிராமிய கலைகளை மேம்படுத்த ஏதாவது பண்ணணும்" என்றார் கருப்பண்ணன் சாமி ரெயின்போ சேகர் .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும், தர்மபுரியில் உள்ள நடுப்பட்டி கிராமத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் முதன் முறையாக வீதி விருது விழாவில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்த குரலில் கூறியது இதுதான், "மகாபாரதம், ராமாயணம் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை நாடகமாக 8 மணிநேரம் வீதியில் நடிப்போம். தற்போதுள்ள சமூகத்தில் இறந்து போனவர்களின் புகழைப் பாடி, ஆடுவதற்குக்கூட ஆளில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வீதி விருது விழா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறது. வீதியில் ஆடுவதை எல்லாம் நாட்டுப்புற கலைகளுக்கான நலச்சங்கங்கள் பொருட்படுத்துவதில்லை. நிகழ்ச்சி மேடையில் ஆடி அங்கீகாரம் பெறுவதையே நலச்சங்கங்கள் பொருட்படுத்துகின்றன. அந்த வகையில் கலைஞர்களுக்கான விருதும் அங்கீகாரமும் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வாழ்க்கைக்கும் பெரிதளவில் உதவுகிறது" என்றனர் அந்தக் கலைக்குழுவினர்.

தர்மபுரி கலைஞர்கள்
தர்மபுரி கலைஞர்கள்

வயதான கலைஞர்களின் நலனுக்கும், கொரோனா காலத்தில் இறந்துபோன கலைஞர்களுக்கும், வீதி விருது விழா மூலம் நிதி திரட்டி உதவி வருகிறார்கள் என்ற தகவலை தெரிவித்தார் காட்பாடியைச் சேர்ந்த கலைஞர் கௌரி.வருடத்துக்கு இப்படியான விழாக்கள் ஒன்றோ, இரண்டோ நடைபெறுகிறது. அப்போது மட்டும்தான் நாட்டுப்புற கலைஞர்கள் குறித்தான பேச்சுகளுக்கும், நாட்புறக் கலையை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது குறித்தான பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், காலமெல்லாம் நாட்புறக் கலையைக் காத்திட அயராது இயங்கிக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கான அங்கீகாரமோ, வெகுமதியோ கிடைப்பதில்லை. அழிவின் பாதையை நோக்கி அந்த கலைகளைச் செல்லவிடாமல் காப்பாற்ற வேண்டிய காலகட்த்தில் இருக்கிறோம் என்பதையே பல கலைஞர்களும் நமக்குச் சொல்ல விரும்பியது.