Published:Updated:

வீட்டிலிருந்தே சினிமா... ஓவியர் சந்தோஷ் நாராயணனின் புதிய முயற்சி!

குறும்படம்

மனைவி மற்றும் குழந்தைகளோடு தானும் நடித்து, செலவு என்பதே சிறிதும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு ஆச்சரியம் அளித்திருக்கிறார்!

வீட்டிலிருந்தே சினிமா... ஓவியர் சந்தோஷ் நாராயணனின் புதிய முயற்சி!

மனைவி மற்றும் குழந்தைகளோடு தானும் நடித்து, செலவு என்பதே சிறிதும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு ஆச்சரியம் அளித்திருக்கிறார்!

Published:Updated:
குறும்படம்

“இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்கிளின் இயக்கத்தில் உருவான ‘ரைட்டர்’ படத்துல, எழுத்தில் பங்களிச்சிருக்கேன். அடுத்ததா, ஒரு திரைப்படத்துக்கான ஆரம்பகட்டப் வேலைகள்ல ஈடுபட்டிருக்கேன். தொடர்ந்து லாக்டௌன்ல இருக்கோம்ன்றனால, இந்த வருஷம் முழுவதும் அந்தத் திரைப்படத்துக்கான எழுத்துப் பணிகளுக்காகச் செலவிடுறதுனு முடிவு பண்ணிருக்கேன்... நல்லா வந்துட்டு இருக்கு!” ஓவியர் சந்தோஷ் நாராயணனின் வார்த்தைகளில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மிளிர்கின்றன.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

ஓவியம், வடிவமைப்பு சார்ந்த புதிய முயற்சிகளுக்குப் பெயர்பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன், ஒரு ஓவியராகப் பயணத்தைத் தொடங்கி, வடிவமைப்பாளராக உருப்பெற்று, எழுத்தாளராகக் கவனம் ஈர்த்து, இயக்குநராக இன்றைக்குப் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனைவி மற்றும் குழந்தைகளோடு தானும் நடித்து, செலவு என்பதே சிறிதும் இன்றி, மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு குறும்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு ஆச்சரியம் அளித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்!

‘ட்யூன்’ என்ற அறிவியல் புனைவு குறும்படம் முதலில் வெளியாகி கவனம் ஈர்த்திருந்த நிலையில், அடுத்ததாக ‘மாஸ்க்’ என்ற ஃபான்டஸி குறும்படம் வெளியாகி ‘இயக்குநர்’ சந்தோஷ் மீதான எதிர்பார்ப்பைப் பார்வையாளர்களிடம் எகிற வைத்திருக்கிறது. எளிமையான கதைசொல்லலோடு, மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு உருவான இக்குறும்படங்கள் திரைத்துறையினர் கவனத்தை ஈர்த்திருப்பதாக சொல்கிறார் சந்தோஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வழக்கம் போல அன்னைக்கும் வீட்டு முற்றத்துல சாயாங்காலம் உட்கார்ந்து டீ குடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம்... அப்போ ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலமா பிடிச்சப் பாடல்களைக் கேட்கிறதும் உண்டு. அன்னிக்கு திடீர்னு எனக்கொரு யோசனை தோனுச்சு... ‘இந்த ஸ்பீக்கர் ஒரு ஏலியனா இருந்தா எப்படி இருக்கும்?’ உடனே என் பசங்க அபிநந்தன், காயாம்பூவுக்கு அதை வச்சு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சேன். ‘இந்த ஏலியன் எங்கிருந்தோ வந்திருக்கு... நம்ம வீட்டு பூச்செடிங்களுக்கு மத்தில காயாம்பூ கண்டுபிடிக்கிறா... அபி அது என்னனு பார்த்து ஸ்பீக்கர்னு கண்டுபிடிக்கிறான்’ இப்படி டெவலப் பண்ணி கொண்டுபோனேன். இதையே ஷார்ட் ஃபிலிமா எடுத்தா என்னனு, முதல்ல மொபைல்ல ஷூட் பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம் என்னோட உறவினர்கள் பசங்க கேமரா மூலமா ரெண்டு மூணு நாள்ல ஷூட் பண்ணி முடிச்சோம். இப்படி விளையாட்டா தொடங்குனதுதான் ‘ட்யூன்’ ” என்று தொடக்கப்புள்ளிகளை விவரிக்கிறார் சந்தோஷ்.

‘ட்யூன்’
‘ட்யூன்’

“நம்ம ஊர்ல இருக்க எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏலியனாக இருந்தால் எப்படி இருக்கும்ங்கிற கற்பனை தான் ‘ட்யூன்’ ஷார்ட் ஃபிலிமா வளர்ந்திருக்கு; தத்துவார்த்தமா பார்த்தா கூட நம்மளைச் சுற்றி எத்தனை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருக்குல்ல... ஆக, ஏலியனா இருக்க ஸ்பீக்கர், இசையும் பாடல்களும் கேக்றது மூலமா எப்படி ஃபீல் பண்ணுதுங்கிறது இந்தப் படம் மூலமா வெளிப்படுத்த நினைச்சேன்” என்கிறார் சந்தோஷ்.

சந்தோஷ் ஓவியக் கலைக் கல்லூரியில் படிப்பு முடித்து வெளியே வந்த காலகட்டத்தில், அனிமேஷன் துறை தீவிரமாக வளரத் தொடங்கியிருந்தது. சிறுவயதிலிருந்தே இவருக்கு ஏற்பட்டிருந்த வாசிப்புப் பழக்கமும், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களின் அட்டைப்பட ஓவியங்களும் இவரைப் புத்தக அட்டை வடிவமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறது; பிறகு விளம்பரத் துறையில் நுழைந்த சந்தோஷ், கடந்த சில ஆண்டுகளாகச் சுயாதீனக் கலைஞராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

மினிமலிசம், ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ என இவர் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் ஆரவார ஹிட். ஓவியங்களில் மட்டுமல்லாமல் தன் சொந்த வாழ்க்கைமுறையிலும் மினிமலிசத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் கடந்த ஊரடங்கின்போது சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறிக்கே திரும்பிவிட்டார்.

‘ட்யூன்’ குறும்படத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மாஸ்க்’ குறும்படத்தை முழுமையாகத் தன்னுடைய செல்போன் கேமராவில் படம்பிடித்துள்ளார். மதில் சுவரைத் தாண்டாமல் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நாட்டுப் புற பாடலொன்றும் இடம்பெற்றிருக்கிறது.

‘மாஸ்க்’
‘மாஸ்க்’

“கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலா லாக்டௌன்ல இருக்கோம். குழந்தைகளுக்கு வகுப்பு இல்லாதனால, படிப்பு கிடையாது. விளையாட்டுக்கும் வாய்ப்பு குறைவு. ஏதோ ஒரு வகைல அவங்களை ஈடுபாட்டோட வெச்சுக்கணும்னு விரும்புனேன். நம்மகிட்ட இருக்க வசதிகளைக் வச்சு என்னப் பண்ண முடியும்னு யோசிச்சேன். சிறுகதை, கவிதை, பெயின்ட்டிங் பண்ணுவது மாதிரி சினிமாவும் எடுக்கலாம்னு ரொம்ப எளிமையா சினிமாவை அணுகுற முயற்சியா இது நடந்துச்சு... வீட்ல எப்பயும் கலை, இலக்கியம் சார்ந்த உரையாடல் இருக்கும்ன்றதனால, என் மனைவி ஷர்மிளாவோட பங்களிப்பு இதுல ரொம்ப முக்கியமானது. ஈரானிய இயக்குநர் மோஷன் மக்மல்பஃப் தான் இதுல எனக்கு இன்ஸ்பிரேஷன்!” எனும் சந்தோஷின் புன்னகையில் எளிமை மிளிர்கிறது.

சந்தோஷின் நண்பர்களான ஜெய்கிருஷ்ணன் - பிரான்ஸிஸ்கா தம்பதியின் முன்னெடுப்பில் அபிநந்தன், காயாம்பூ இருவரும் இணைந்து உருவாக்கிய ‘Learn to live with Corona' என்ற அனிமேஷன் குறும்படம், ஜெர்மனியில் நடைபெறும் Unified Filmmakers Festival-ல் குழந்தைகள் பிரிவில் போட்டியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

காயாம்பூ, அபிநந்தன்
காயாம்பூ, அபிநந்தன்

“சினிமா என்பது ரொம்ப பெரிய விஷயமா, தூரமா எங்கேயோ இருக்கு. வணிக சினிமா அப்படித்தான் இருக்கும், அது இயங்குற விதம் அந்த மாதிரி. ஆனா, ஒரு கலைவடிவமா சினிமாவைப் பார்க்கும்போது, சின்னச் சின்ன கதைகளைச் சொல்ல நம்ம கையிலேயே செல்போன்ங்கிற அட்டகாசமான கேமரா இருக்கு... சின்ன வயசுல காலி தீப்பெட்டி டப்பாவை, சினிமாஸ்கோப்பா கற்பனைப் பண்ணிக்கிட்டு எங்க ஊரை படமெடுத்துக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு தீப்பெட்டியைவிட கொஞ்சம் பெருசா இருக்க செல்போன்ல நிஜமாகவே படமெடுக்கத் தொடங்கியிருக்கேன்... அடுத்து இன்னும் பெருசா எடுக்கத் தயாராகிட்டு இருக்கேன்” நிறைவாகப் புன்னகைக்கிறார் சந்தோஷ் நாராயணன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism