Published:Updated:

`தண்ணீரின் அழகை வைத்து விழிப்புணர்வு!' - புகைப்பட கலைஞரின் வித்தியாச முயற்சி

மலையரசு

உலக புகைப்படத் தினத்தை முன்னிட்டு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் இது. எப்பவும் போல் இல்லாமல் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும் என எண்ணினோம்.

கண்காட்சி
கண்காட்சி

உலக புகைப்படத் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் Light & Life Academy சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மற்ற கண்காட்சிகளைப்போல் அல்லாமல் புகைப்படத் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்து, உலகில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை பேசும் புகைப்படங்களை மட்டும் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், சாதாரண மக்கள், மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் தண்ணீர் குறித்து எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கண்காட்சி
கண்காட்சி

மாலுக்கு வந்திருந்த மாணவர்கள், பொதுமக்கள் புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இந்தக் கண்காட்சி தொடர்பாக அதை ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கலைஞர் இக்பால் முகமதுவிடம் இதுதொடர்பாகப் பேசியபோது, ``மற்ற மீடியாக்களைக் காட்டிலும், காட்சி ஊடகம் சமூக காரணங்களுக்காகச் செயல்பட வைக்கவும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால் இன்றைய உலக புகைப்படத் தினத்தை முன்னிட்டு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் இது. எப்பவும்போல் இல்லாமல் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும் என எண்ணினோம். இதற்காக `Shoot For A Cause' என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளோம்.

இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமே தண்ணீரின் முக்கியத்துவத்தை மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்பதே. இப்போதெல்லாம் தண்ணீரில் மாசுதான் இருக்கிறது. ஆறு, கடல் என அனைத்திலும் நிறைய குப்பைகளைக் கொட்டி வருகிறோம். தண்ணீர் மிக அழகான ஒன்று. நாம் அதற்கு என்ன வடிவம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படிப்பட்ட நீரை அசுத்தப்படுத்துவது மோசமான செயல். இதைத் தடுக்க தண்ணீரின் அழகை காண்பித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பை தொடங்கினோம்.

இக்பால் முகமது
இக்பால் முகமது
எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

வலைதளங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மாணவர்கள் முதல் பலதரப்பட்ட மக்களும் தங்கள் பகுதியில் உள்ள தண்ணீரின் அழகை புகைப்படமாக எடுத்து அனுப்பினர். ஏன் ராஜஸ்தான் பகுதியில் இருந்துகூட புகைப்படங்கள் வந்தன. அவற்றை மொத்தமாக வைத்துதான் இந்தக் கண்காட்சியை நடத்திவருகிறோம். கண்காட்சி என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இதை ஒரு போட்டியாக நடத்தி வருகிறோம். கண்காட்சிக்கு வந்தவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு இருந்தது. இதுமாதிரியான புகைப்படங்களைப் பார்த்ததில்லபென்று நிறைய பேர் வியந்தனர்" என்றார்.