Published:Updated:

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

சர்க்கஸ் வீரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்க்கஸ் வீரர்கள்

கண்ணீர் பொங்க தங்களது சோகநிலையைச் சொல்ல ஆரம்பித்தார் சாரதா.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

கண்ணீர் பொங்க தங்களது சோகநிலையைச் சொல்ல ஆரம்பித்தார் சாரதா.

Published:Updated:
சர்க்கஸ் வீரர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்க்கஸ் வீரர்கள்

“ஒருஜான் வயித்துக்குதான் சார் இத்தனை பாடும். பார் கம்பியில் எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாம அந்தரத்துல ஆடுறப்பவெல்லாம், ‘தரைக்குப்போனா சோறு;இல்லைன்னா சாவு’ன்னுதான் நினைச்சுக்குவோம். எங்க பொழப்பு நித்தம் நித்தம், ‘கரணம் தப்பினா மரணம்’ங்கிற நிலையில்தான் நடக்கும். பெரிய வருமானம் இல்லை. இருந்தாலும், காசு கொடுத்துட்டு, கூட்டத்துல உட்கார்ந்திருக்கிற ரசிகர்கள், காதைக் கிழிக்கிற அளவுக்குப் போடுற விசில் சத்தத்துல, எங்க கஷ்டம் கரைஞ்சு, மனசுக்குள்ள மத்தாப்பு பூக்கும். அந்த சொகத்துக்காகவே, சோத்துக்கே வழியில்லன்னாலும், சர்க்கஸை விடாம இழுத்துப் புடிச்சு நடத்திட்டு வந்தோம். ஆனால், எங்க பொழப்பு இனி போணியாகாதுபோல. குடிசை வீட்டுக்குள்ளகூட டி.வி, பொறந்த குழந்தை கையில்கூட செல்போன் என்று பல விசயங்களால எங்க பொழப்புல மண் விழுந்துச்சு. இப்போ, இந்தக் கொரோனா, எங்க தொழிலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திடும்போல சார்...” - தொண்டையை அடைக்கும் துக்கத்தை வார்த்தைகளில் அதிகம் வெளிக்காட்டாதபடி, சன்னமான குரலில் பேசுகிறார், சாரதா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

சாரதா, தமிழகமெங்கும் ஊர் ஊராகப் போய் டேரா போட்டு, சர்க்கஸ் வித்தை காட்டும் சிறிய குழுவான, ‘மதுரை ஜீவா சர்க்கஸ் குழு’வின் தலைவி. உடனே, லட்சங்களில் கல்லா கட்டிய அந்தக்கால பாம்பே, ஜெமினி சர்க்கஸ் கம்பெனிகளோடு ஜீவா சர்க்கஸ் குழுவை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். 25 நபர்கள், ஆடு, நாய், குதிரை, ஒட்டகம், தார்ப்பாய்கள், கம்பிகள், மூங்கில் கழிகள் என்று எளிய பொருள்களை வைத்து வித்தை காட்டுபவர்கள். அந்தரத்தில் பார் கம்பியில் விளையாடும்போது, கீழே விழ நேர்ந்தால் உயிருக்குச் சிக்கல்தான். பாதுகாப்பு வலைகள்கூட அமைக்க வழியில்லாத குழு, மதுரை ஜீவா சர்க்கஸ் குழு. சொந்த ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் அருகில் இருக்கும் நத்தமேடு. ஆனால், சர்க்கஸ் நடத்த, குளித்தலை அருகில் உள்ள தாளியம்பட்டிக்குச் சென்றவர்கள், கொரோனா ஊரடங்கில், அந்த குக்கிராமத்தில் மாட்டிக்கொண்டார்கள். 80 நாள்களாக அந்தக் கிராமத்தை விட்டு நகரமுடியாமல் இருக்கிறார்கள். உணவுக்காக அங்கே அவர்கள் படும்பாடு, அல்லல் நிறைந்தது.கண்ணீர் பொங்க தங்களது சோகநிலையைச் சொல்ல ஆரம்பித்தார் சாரதா.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

“எங்க குழுவில் உள்ள 25 பேரில் 10 பேர்தான், சர்க்கஸ் வித்தை காட்டு பவர்கள். மத்த அனைவரும், முதியோர்கள் மற்றும் குழந்தை கள்தாம். எங்களுக்குக் குலத்தொழிலே இதுதான். எங்க மாமனார் ராமுவோட அப்பா காலத்தில், தெரு வோரங்களில் இருபுறமும் கம்பு ஊன்றி, அதில் கயிற்றைக் கட்டி, அதில் சிறுவர்களை நடக்க வைப்பது தான் தொழில். அதைப் பார்த்து ரசிக்கும் மக்கள், ஒரு பைசா, ரெண்டு பைசான்னு காசு போடு வாங்களாம். அதை வச்சுதான், காலத்தை ஓட்டி யிருக்காங்க. அதுக்கு எங்க மாமனார் காலத்துல மவுசு குறைஞ்சுபோச்சு. அதனால், எங்க மாமனார் ராமு, சினிமாப் பாடல்களை ஒலிக்கவிட்டு வேஷம் போட்டு ஆடும் ரெக்கார்டு டான்ஸ் தொழிலுக்கு மாறினார். அதைப் பார்க்குறவங்க அரிசி, பருப்பு, புளின்னு கொடுப்பாங்க. ஆனால், மேடைகளில் நடத்தப்படும் ஆர்கெஸ்ட்ரா, கவர்ச்சியா உடையணிஞ்சு ஆடப்படும் ரெக்கார்டு டான்ஸ் நிகழ்ச்சிகள் வந்தபிறகு, எங்க மாமனார் நடத்திவந்த ரெக்கார்டு டான்ஸ் தொழிலை மக்கள் சீந்தலை. அதனால், என் கணவர் பாபுவும், அவரோட தம்பி முருகேசனும்தான், இந்த சர்க்கஸ் தொழிலுக்கு 30 வருஷத்துக்கு முன்னாடி பழக்கினாங்க. என் கணவரும், கொளுந்தனாரும் பார் கம்பியில் வித்தை காட்டுவாங்க. நானும், என் கொளுந்தனாரோட மனைவி கனகாவும் டான்ஸ் ஆடுவோம், கம்பியில ராட்டினம் மாதிரி சுத்துவோம். வளையத்துக்குள்ள புகுந்து, இடுப்பை ஆட்டி ஆட்டி அதைச் சுழற்றுவோம். பலதடவை பார் கம்பியில ஆடும்போது, தவறிக் கீழே விழுந்து அடிபடும்.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

சிலசமயங்களில், பலமாசம் படுத்தபடுக்கையா இருக்கிற நிலையும் ஏற்படும். அதுவரை சர்க்கஸ் தொழில்ல ஈடுபடமுடியாது. இப்போ, எங்க ரெண்டு குடும்பம், சொந்தக்காரங்க குடும்பங்கள் ரெண்டுன்னு மொத்தம், நாலு குடும்பங்கள் இந்தத் தொழில்ல இருக்கிறோம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை, காரைக்கால் முதல் கோயம்புத்தூர் வரை நாங்க போய் சர்க்கஸ் நடத்தாத இடமில்லை. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், சர்க்கஸ் நல்லாதான் நடந்துச்சு. ஒரு ஷோவுக்கே 1,000 பேர் வரைக்கும் வருவாங்க. தினமும் மூணு ஷோ நடத்துவோம். கையில கொஞ்சம் காசு புரளும். தவிர, ரங்கராட்டினம் மாதிரி நான் சுத்தி ஆடுறதை ரசித்துப் பார்த்த கெறக்கத்துல, என் ஆட்டத்துக்கு கூடக் கொஞ்சம் பணம் கொடுக்கும் ரசிகர்களும் உண்டு. அதை வச்சு, நொய்யல்ல சொந்தமா வீடு கட்ட இடமெல்லாம் வாங்கிப்போட முடிஞ்சுச்சு. ஆனா, கடந்த பத்து வருஷமா எங்க தொழிலு காத்தாட ஆரம்பிச்சுட்டு. மக்கள், ஹோட்டல் சாப்பாட்டைக்கூட வீட்டுக்குள்ள உட்கார்ந்துகிட்டு வாங்கிச் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால், வீதிக்கு வந்து எங்க தொழிலைப் பார்க்குறதை பலரும் கௌரவக் குறைச்சலா நினைக்குறாங்க. இருந்தாலும், வீம்பா நடத்திக்கிட்டு இருந்தோம். அதுக்கும் கொரோனா கள்ளிப்பாலை ஊத்திட்டு” என்று வேதனையோடு முடித்தார்.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

இவர்கள், மக்கள் தரும் டிக்கெட் காசை நம்பி இருக்க, இவர்களையே நம்பி இருக்கிற ஒட்டகம், குதிரை, நாய், ஆடு உள்ளிட்ட வாயில்லாத ஜீவன்களின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. ‘சாப்பிட ஏதாச்சும் கண்ணில் காட்ட மாட்டார்களா?’ என்று கண்கள் முழுக்கப் பசியை நிரப்பியபடி பார்க்கின்றன, இந்தப் பிராணிகள். பசியில் தவிக்கும் ஒட்டகத்தைத் தடவிக் கொடுத்தபடி பேசிய முத்து, “எங்கப்பா பாபு, என்னையும் இந்தத் தொழிலுக்குப் பழக்கினார். என் சகோதரர் தமிழரசனையும் சர்க்கஸ் தொழில்ல இழுத்து விட்டார். சர்க்கஸ்ல மக்கள் தரும் உற்சாகமும், அவர்களின் விசில் சத்தமும் படிக்கணும்ங்கிற எண்ணத்தை மாத்திடுச்சு. மாத்துத் தொழிலும் தெரியாது. வாய்க்கா, வரப்பு, காடு, கழனின்னு கையளவுகூட விவசாய நிலம் கிடையாது. வெளியூர்களில் சர்க்கஸ் நடத்த நாங்க போக சொந்தமா வாகனம் இல்லை. வாடகை லாரி புடிச்சுதான் போகணும். குறைந்தபட்சம் ரூ.5,000 வரை ஆகும். கன்னியாகுமரி, சென்னை, காரைக்கால் எல்லாம் போகணும்னா, ரூ.15,000 வரை லாரி வாடகை கொடுக்கணும். தினமும் இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுக்கவே, ரூ.1,000 வரை ஆகும். தவிர, நாங்க சாப்பிட தினமும் ரூ.1,000 செலவாகும். சர்க்கஸ் ஓடுதோ இல்லையோ, நாங்க வளர்க்கிற ஜீவன்களும், நாங்களும் சாப்பிடவே மாதம் குறைந்தப்பட்சம் ரூ.40,000 வரை செலவாகும். லாரி வாடகைக் கணக்கு தனி. பத்து வருஷத்துக்கு ஒரு தடவை குதிரை, ஆடுகளைப் புதுசா வாங்கணும். ஒரு குதிரை ரூ. 60,000க்கு வாங்கணும். ஆடு வாங்க ரூ.5,000 வரை விலை கொடுக்கணும். அதோடு, நாங்க சர்க்கஸுக்காகப் பயன்படுத்துற பொருள்களை வருஷத்துக்கு ஒருதடவை புதுசா மாத்தணும்.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

அதுக்கு ஆகும் செலவு தனிக்கணக்கு. இதனால், வர்ற வருமானத்துக்கு எங்க பொழப்பு இழுத்துக்கோ பறிச்சுக்கோங்கிற நிலைமையில் தான் நடக்கும். எங்க பொழப்புல ஒரு புதுரத்தம் பாய்ச்சுறதா நினைச்சுக்கிட்டு, ஒரு வருஷத்துக்கு முன்னாடி வட்டிக்குக் கடன் வாங்கி ரூ.70,000த்துல இந்த ஒட்டகத்தை வாங்கினோம். அஞ்சு மாசம் வரை இதை சர்க்கஸுக்குப் பழக்கினோம். நாலு மாசம்கூட இதை வச்சுத் தொழில் பண்ணலை. அதுக்குள்ள கொரோனா வந்து, எங்க தொழிலை முடக்கிப் போட்டுட்டு. நாங்கதான் இந்தத் தொழிலை நம்பி இதுல இறங்கினோம். ஆனா, எங்க பிள்ளைகளை இந்தத் தொழிலுக்குப் பழக்கமாட்டோம். அவங்களை நல்லா படிக்க வச்சு, நல்ல வேலைக்கு அனுப்புவோம். எங்களை மாதிரி ஊர் ஊரா, தெருத் தெருவா அலைஞ்சு அஞ்சுக்கும் பத்துக்கும் அவங்களும் அல்லாடக் கூடாதில்லையா?!” என்றார், சோகம் நிறைந்த வார்த்தைகளில்.

சர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்!

சமையல் வேலையில் இருந்த கனகா, “திருநெல்வேலியில் சர்க்கஸை முடிச்சுட்டு, ஊருக்குத் திரும்பினப்ப, கடந்த மார்ச் 15-ம் தேதி குளித்தலை பக்கமுள்ள இந்தத் தாளியம்பட்டியில் இரண்டு வாரம் சர்க்கஸ் நடத்தத் திட்டமிட்டோம். இங்கே டேரா போட்டு, சர்க்கஸ் கட்டமைப்பு களைச் செஞ்சோம். சர்க்கஸைத் தொடங்க நினைக்கையில்தான், கொரோனா வைரஸும், அதையொட்டிய ஊரடங்கும் எங்களைத் தொழில் நடத்தவிடாமச் செஞ்சுட்டு. கையில் இருந்த காசை வச்சு ஒருமாசம் வயித்துப்பாட்டை சமாளிச்சோம். அதன்பிறகு, ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிப்போனோம். இந்த ஊர்க்காரங்க எங்கமேல பரிதாபப்பட்டு கொஞ்சம் அரிசி, பருப்பு, புளின்னு கொடுத்து உதவுனாங்க. பத்துநாள் பாடு பிரச்னையில்லாம ஓடுச்சு. ஆனா, அதுக்குப் பிறகு மூணு நாள் சாப்பாட்டுக்கு வழியில்லாம, பசியும் பட்டினியுமா கிடந்தோம். சின்னப்புள்ளைங்க பசியில கிடந்து தவிச்சுதுங்க. அதனால், நாங்க சர்க்கஸுக்குப் பழக்கி வச்சுருந்த ஆடுகளில் ஒண்ணை மனதைக் கல்லாக்கிக்கிட்டு சொற்ப விலைக்கு வித்தோம். அதவச்சும் ஒருவாரம்கூட தாக்குப்பிடிக்க முடியலை. அப்போதான், எங்க நிலைமை பத்திக் கேள்விப்பட்டு, குளித்தலை போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் சார், எங்களுக்கு 20 நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைச் சாமான்களைக் கொடுத்தார். அதன்பிறகு, மறுபடியும் எங்க நிலைமை மோசமாயிட்டு. வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுக்க முடியலை. எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழிபண்ண முடியலை. சின்னப்பிள்ளைங்க தட்டெடுத்துட்டுப் போய், வீடு வீடா கெஞ்சிக்கேட்டு கொஞ்சம் அரிசியை வாங்கிட்டு வந்தாங்க. அதை வச்சு, ரெண்டு நாளைக்குப் பிறகு, இன்னைக்கு உலை வச்சிருக்கேன். சொந்த ஊருக்குப் போகலாம்னா, அங்க எங்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் கொடுத்தவங்க கடனைக் கேட்டு நெருக்குவாங்க. வட்டியைக் கட்டவே வழி யில்லை. அதனால், தாளியாம்பட்டியிலேயே இருக்கிறோம். எப்போ இந்தக் கொரோனா வைரஸ் சரியாகும்னு தெரியலை. எங்களை தொடர்ந்து சர்க்கஸ் நடத்த அனுமதிப் பாங்களான்னும் புரியலை. அப்படியே நாலஞ்சு மாசம் கழிச்சு சர்க்கஸ் போடும் நிலை வந்தாலும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சர்க்கஸ் பார்க்க மக்கள் வருவாங்களாங்கிறது நிச்சயமில்லை. எதிர்காலமே இருண்டு கிடக்கு சார். இருந்தாலும், எங்க இறுதி மூச்சு வரைக்கும், உயிரைப் பணயம் வச்சு, அந்தரத்துல ஆடுற இந்த சர்க்கஸ் தொழிலை நிறுத்தமாட்டோம். ஏன்னா, எங்க ரத்தத்துல கலந்திருக்கிற மூச்சுக்காத்தே இந்த சர்க்கஸ்தான்” என்று வலி நிறைந்த வார்த்தைகளில் முடித்தார்.

உயிரைத் துச்சமாக மதித்து, மக்களை மகிழ்விப்பவர்களின் வாழ்வில் ஆயிரம் துன்பக் காட்சிகள். இவர்களின் துன்பத்தைக் காலம் துடைக்கும் என்று நம்புவோம்!