Published:Updated:

“வர்றேன்னு சொன்ன ரஜினி வரவேயில்லை!”

துளசி தாஸ் சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
துளசி தாஸ் சௌத்ரி

``பீகார் மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.

“வர்றேன்னு சொன்ன ரஜினி வரவேயில்லை!”

``பீகார் மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.

Published:Updated:
துளசி தாஸ் சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
துளசி தாஸ் சௌத்ரி

ர்க்கஸ் நிகழ்ச்சியின் விடுமுறை தினப் பகல் காட்சி. அரங்கில் கூட்டம் நிரம்பிவழிகிறது. சாகசக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரையும் தாண்டி, பார்வையாளர்களைத் தனித்துவமாகக் கவர்கிறார், துளசி தாஸ் சௌத்ரி. இரண்டடி உயரமே உடைய இவர்தான் சர்க்கஸ் நிகழ்ச்சியின் ஆட்ட நாயகன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்க, அரங்கத்தில் சுழன்று வேலை செய்கிறார்.

சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு குறைந்துவரும் இன்றைய சூழலில், அதில் வேலை செய்யும் ஜோக்கர்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. ஆனால், 62 ஆண்டுகளாக ஜோக்கராகப் பணியாற்றும் சௌத்ரியின் உலகமே சர்க்கஸ்தான். சென்னையில் நடைபெற்றுவரும் `கிரேட் பாம்பே சர்க்க’ஸில் பணியாற்றும் துளசி தாஸ் சௌத்ரியைச் சந்தித்தேன். இரண்டரை மணிநேர நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தாலும் எனர்ஜி குறையாமல் பேசுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பீகார் மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். சகோதர, சகோதரிகள் ஆறு பேர். அதில், கடைக்குட்டியான நான் மட்டும்தான் உயரம் குறைவு. அதனால சின்ன வயசுல இருந்தே பலரும் என்னை வித்தியாசமாவும் விளையாட்டாவும் பார்ப்பாங்க. அதை நானும் ரசிச்சேன். படிப்பில் பெரிசா நாட்டமில்லை. ஆறாவது படிக்கும்போது, ஒருநாள் ஸ்கூல் போயிட்டிருந்தேன். இந்த கம்பெனியின் சர்க்கஸ் நிகழ்ச்சி எங்க ஊரில் நடந்துச்சு. அதன் ஊழியர்கள் சிலர் என்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கிட்டுப்போனாங்க. `உயரம் குறைவா இருக்கும் நீ, ஜோக்கர் வேஷம் போட்டா நிறைய மக்கள் ரசிப்பாங்க. இங்க வேலை செய்றியா?’ன்னு சர்க்கஸ் நிர்வாகி கேட்டார்.

துளசி தாஸ் சௌத்ரி
துளசி தாஸ் சௌத்ரி

சர்க்கஸ் சூழல்கள் பிடிச்சதாலும் ஸ்கூல் போகாம இருக்கவும் உடனே அந்த வேலையில் சேர்ந்துட்டேன். ஜோக்கருக்கான பயிற்சி முடிஞ்சதும் ஊழியரானேன். தினமும் ஸ்கூல் போறதா வீட்டில் சொல்லிட்டு சர்க்கஸ் வேலைக்குப் போனேன். இதை ரெண்டு முறை என் வீட்டில கண்டுபிடிச்சு, கண்டிச்சாங்க; அடிச்சாங்க. ஆனாலும், என் மனசு சர்க்கஸ்லதான் இருந்துச்சு. 12 வயசுல அம்மா இறந்துட்டாங்க. பிறகு, மீண்டும் சர்க்கஸ் வேலைக்கு வந்துட்டேன். வீட்டுலயும் யாரும் எதிர்ப்பு சொல்லலை. அப்போ எனக்கு மாதச் சம்பளம் ஒரு ரூபாய். தங்குமிடம், மூணு வேளைச் சாப்பாடு இலவசம். சர்க்கஸ் வேலையில், இந்தியா முழுக்கவே எல்லா மாநிலங்களுக்கும் பல முறை போயிருக்கேன்” என்று சுறுசுறுப்பாகப் பேசுபவருக்கு 74 வயது என்பதுதான் ஆச்சர்யம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினிகாந்த் உடனான நட்பு குறித்துப் பேசுகையில், சௌத்ரியின் முகம் மலர்கிறது. ``என் வாலிபப் பருவத்துல பெங்களூரில் சில மாதம் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினோம். காலை ஓய்வு நேரத்துல சுத்திப்பார்க்க, சிவாஜி நகர் - மெஜஸ்டிக் போவேன். நான் பயணம் செய்யும் 8-ம் நம்பர் பஸ் கண்டக்டராக ரஜினிகாந்த் இருந்தார். சிலநாள் பயணத்துலயே அவரும் நானும் நண்பர்களாகிட்டோம். எனக்கு சீட் ரிசர்வ் பண்ணி வைப்பார். தமாஷாப் பேசுவார். எங்க உரையாடலில் வாலிபப் பருவ கேலி கிண்டல்கள் அதிகம் இருக்கும். என் சர்க்கஸ் அனுபவங்கள் குறித்துத் தினமும் கேட்பார். `சர்க்கஸ் பார்க்க ஒருநாள் வர்றேன்’னு சொல்லிட்டே இருந்தார். ஆனா, அவர் வரவேயில்லை. பிற்காலத்துல நடிகரான பிறகு அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை. அவர் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவருடன் பழகிய நினைவுகள் எனக்கு ஞாபகம் வரும். அவர் எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். ஆனா, அவரைச் சந்திக்க முடியலை. இப்போதும் அவருக்கு என்னை ஞாபகம் இருக்கும். ரஜினியைச் சந்திச்சுப் பேச வாய்ப்பு கிடைச்சா ரொம்பவே சந்தோஷப்படுவேன்” என்கிறார், ஏக்கத்துடன்.

துளசி தாஸ் சௌத்ரி
துளசி தாஸ் சௌத்ரி

``நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உட்பட நிறைய அரசியல் தலைவர்களுடன் பேசியிருக்கேன். எங்க சர்க்கஸ் கம்பெனியில நிறைய சினிமா ஷூட்டிங் எடுத்திருக்காங்க. அதற்காகவும், விருந்தினர்களாகவும் சினிமா நட்சத்திரங்கள் வந்திருக்காங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ஹேமமாலினி, சத்ருகன் சின்ஹா, சத்யராஜ், அஜித், சூர்யா, ஸ்ருதிஹாசன் உட்பட ஏராளமான நடிகர்களுடன் பழகியிருக்கேன். இவங்கள்ல பலரும் எனக்குப் பரிசு கொடுத்திருக்காங்க. கைம்மாறாக, அவங்களை நான் சிரிக்க வைப்பேன். அதில் பலரும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வரும்போது, `ஜோக்கர் மேன் எங்கே?’ன்னு ஆர்வமா விசாரிச்சு என்னிடம் பேசுவாங்க. தமிழ் ஹீரோயின்களில் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி ஆகியோரை நேரில் பார்த்தபிறகு, நீண்டநாள் அவங்களை நினைச்சுக் கனவு கண்டேன். இந்த மூணு பேருக்காகவே மொழி புரியாட்டியும் தமிழ் சினிமா பார்க்க ஆரம்பிச்சேன்” என்பவர், சில இந்திப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

சௌத்ரியை, சக சர்க்கஸ் ஊழியர்கள் மாமா, அப்பா, அண்ணா எனப் பல உறவு முறைகளில் அழைக்கிறார்கள். இவர்களே சௌத்ரியின் தற்போதைய குடும்ப உறவுகள். ``சில வருடங்களுக்கு முன்பு வரை, ஸ்பிரிங் வளையத்துல பல்டி அடிக்கிறது, தரையில குட்டிக்கரணம் அடிப்பது, see-saw பலகையில் குதிச்சு சாகசம் செய்றது, கொரில்லா குரங்குடன் காமெடி நிகழ்ச்சி பண்றது, ரிங் மாஸ்டருக்கு உதவியாளர்னு ஜோக்கராகப் பல வேலைகள் செய்தேன். இப்போ வயசாகிட்டதால, டான்ஸ் ஆடுறது, அடி வாங்குறது, அழுவுறது, கைதட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்துறது உள்ளிட்ட வேலைகளை மட்டுமே செய்றேன்.

எனக்கு ரெண்டு முறை ஆக்ஸிடென்ட் ஆனபோதும், கிட்னி ஆபரேஷன் நடந்தபோதும், உடன் வேலை செய்றவங்க துடிச்சுப்போய் எனக்கு ஆறுதலாக இருந்து காப்பாத்தினாங்க. இப்படிப் பல மொழிகளைச் சேர்ந்த நண்பர்களும் உறவினர்களும் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. இந்த வேலையால் அளவுகடந்த மகிழ்ச்சியும் போதுமான வருமானமும் கிடைக்குது. அதையெல்லாம்விட வயது வித்தியாசமில்லாம எல்லாத் தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைக்க முடியுது. சர்க்கஸ் முடிஞ்சதும் நிறைய குழந்தைகள் என்னிடம் ஆவலா வந்து பேசுவாங்க; போட்டோ எடுத்துப்பாங்க. இந்தக் கொடுப்பினைகள் வேறு எந்த வேலையில் கிடைக்கும்? `அதிகமா சம்பளம் தர்றோம்’னு மத்த கம்பெனிக்காரங்க பலமுறை கூப்பிட்டிருக்காங்க. ஆனாலும், என் மனசு முழுக்க இங்க இருக்கிறதால, 62 வருஷமா இதே சர்க்கஸ் கம்பெனியிலதான் வேலை செய்றேன். நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்” என்கிறவரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். நம்மிடம் பேசிக்கொண்டே , மீண்டும் மாலைக் காட்சிக்காக ஜோக்கர் மேனாக உருமாறிக்கொண்டிருந்தார் இந்த எழுபது வயது கலைஞர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism