Published:Updated:

``மண் எடுக்கவும் எதிர்க்கிறாங்க... லோனும் தரமாட்டுறாங்க!" - குமுறும் மண்பாண்டக் கலைஞர்கள்

கண்ணதாசன் அ

"பேங்கில் லோன் கேட்டோம். அதெல்லாம் தரமுடியாதுனு சொல்றாங்க. இந்தத் தொழில்ல லாபம் இல்லனாலும், இதைத்தான் நாங்க செய்தாகணும். ஏன்னா, வேற தொழில் எதுவும் தெரியாது".

Clay Pot Makers
Clay Pot Makers

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது, பாதிராப்புளியூர் கிராமம். அழிந்துவரும் மண்பாண்டத் தொழிலுக்குக் கடைசி உயிர்கொடுத்து வருகிறார்கள், இந்த ஊர் மக்களில் சிலர். மண்பாண்டங்கள் செய்ய, மண் எடுப்பதிலிருந்து அதைச் சந்தைப்படுத்துவதுவரை தினந்தினம் ஆயிரம் சவால்களைச் சந்தித்துவருகிறார்கள், இந்த மக்கள். நாகரிக வளர்ச்சியில், வளர்ந்துவரும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஏதோ ஒரு பாரம்பர்யத் தொழிலைப் பாதிக்கத்தான் செய்கின்றது. இன்று நகரமயமான இந்த உலகில், சிறு குடிசை வீடுமுதல் அடுக்குமாடிக் குடியிருப்புவரை மண்பாண்டங்கள் என்பவை பயன்பாட்டிலிருந்து மறைந்த ஒரு பொருளாக மாறிவிட்டது.

Clay for Clay Pot manufacturing
Clay for Clay Pot manufacturing

இம்மக்களைச் சந்திப்பதற்காக பாதிராப்புளியூருக்குப் பயணப்பட்டோம். கண்ணைக் கூசச் செய்யும் 2 மணி பொழுதின் வெயிலில், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த மண்பாண்டச் சூளை அருகே ஒரு கம்புடன் மண்பாண்டங்களை முறையாகக் கையாண்டுகொண்டிருந்தார்கள், அந்த ஊர் மக்களில் சிலர்.

பரம்பரையாக மண்பாண்டங்கள் செய்துவரும் சந்தோஷ் கூறுகையில், "நாங்கள் திண்டிவனம், ரெட்டணை, விக்கிரவாண்டி, வீடுர், மைலம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் இடமாகக் கடையமைத்து, சுற்றுப்பட்டியில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் சைக்கிள் மூலம் மண்பாண்டங்களை எடுத்துச் சென்று விற்றுவருவோம். ஒருநாளைக்குக் குறைந்தது நான்கு ஊர்கள் சுற்றுவோம். எங்கள் பகுதியில், ஒவ்வோர் ஆறு கிலோமீட்டர் இடைவெளியுள்ள ஊர்களிலும் இதுபோன்று மண்பாண்டங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதனால், எங்களுக்குப் பெரிதாக லாபமெல்லாம் இருக்காது. நகரங்களில் விற்கப்படும் மண்பாண்டங்களின் விலைக்கும் கிராமங்களில் விற்கப்படும் மண்பாண்டங்களின் விலைக்கும் வித்தியாசம் மலையளவு இருக்கும்.

மண்பாண்டம் செய்பவர்களுக்கான அமைப்பு, விழுப்புரத்தில் உள்ளது. அதில் உறுப்பினராக இருக்கும் எங்களுக்கு எந்தவித உதவிகளும் இதுவரை கிடைத்ததில்லை. மண்பாண்டங்கள் செய்வதற்கான மோட்டார்வைத்த எந்திரம் தருவதாகக் கூறினார்கள். இதுவரை கிடைக்கவில்லை. அதுபோல வருடத்திற்கு நான்காயிரம் ரூபாய் தருவதாகவும், மழைக் காலங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும் கூறினார்கள். தற்போது சென்றுகேட்டால், இதுவரை தங்களுக்கு எந்தநிதியும் வரவில்லை எனக் கூறுகிறார்கள்.

Clay Pot Makers
Clay Pot Makers

மண்பாண்டங்கள் செய்ய முக்கியமானது மண். ஆனால், அந்த மண்ணையே எடுக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். திண்டிவனம் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றோம். "மண் அள்ள எங்களுக்கு உரிமையில்லையா?" என்று தாசில்தாரிடம் கேட்டதற்கு, `நீங்கள் மண் அள்ள அனைத்து உரிமையும் உள்ளது' எனக் கூறினார். ஆனால், எங்களை மண் அள்ளத் தடைவிதித்தவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை'' என்றார்.

மேலும் அவர், "ஒரு பானையைச் சூளைக்குக் கொண்டுபோவதற்கு முன், முழுமையாக வடிவம்கொடுப்பதற்குக் குறைந்தது நான்கு நாள்கள் தேவைப்படும். கொண்டுவந்த மண்ணை நன்றாகக் காயவைத்து, தடியால் அடித்து பொடிபோலச் சலிக்க வேண்டும். அதன்பிறகு, தண்ணீரில் ஊறவைத்து, தரையில் ஊற்றிப் பக்குவத்துக்கு வரும்வரை உலரவைப்போம். மண் உலர ஒருநாள் ஆகும். எந்தவொரு மண்பாண்டத்தை எடுத்தாலும் மூன்று நிலையாக, மூன்று பகுதியாகப் பிரித்துச் செய்ய வேண்டும்.

Clay Pots
Clay Pots

ஒருநாளைக்கு ஒரு பகுதிதான் செய்யமுடியும். அதன்பிறகு, அதை முறையாகக் காயவைத்து, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சூளையை மூட்டவேண்டும். அதில் 2,000 பொருளுக்கு 150 பொருள் விரிசல் விட்டுவிடும். இப்படி லாபத்தை எதிர்பார்க்காமல், கஷ்டத்தோடு ஒவ்வொரு நாளையும் கடத்திவருகிறோம்" என்கிறார் அவர், சற்றே வேதனையுடன்.

"பெரிய பெரிய நகரத்தில் விற்பது மாதிரி எல்லாம் மண்பாண்டங்களை அதிக விலைக்கு இங்கே விற்க முடியாது. ஏனென்றால், இங்கே சுற்றி இருப்பதெல்லாம் கிராமங்கள்தான். குழம்புவைக்கும் சட்டி, பயிர் கடையும் சட்டி எல்லாம் பொதுவாக 30 ரூபாய்தான். சின்ன ரக பானையை 40 ரூபாய்க்கும் பெரிய ரக பானையை 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரைக்கும் தருவோம். இப்போதெல்லாம் பானையை யாரும் பயன்படுத்துவது இல்லை. திருமணம் என்றால் வந்து வாங்கிக்கொண்டு போவார்கள். அவ்வளவுதான்.

Clay Pots
Clay Pots

ஒற்றை அடுப்பு, இரட்டை அடுப்பு, அகல்விளக்கு என என்னென்ன பொருள்களை மண்ணால் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்வோம். இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வரப்போகிறது. அதற்குப் பலகாரம் செய்வதற்கான மண்பாண்டங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறோம். எல்லா மண்ணிலும் மண்பாண்டத்தைச் செய்ய முடியாது. இதற்காகவே மண் தனியா இருக்கிறது. அதைத் தேடி எடுத்துக்கொண்டு வருவோம்.

சூளை எரியும்போது திடீரென மழை வந்துவிட்டால், மொத்தமும் வீணாகிப் போய்விடும். சூட்டில் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது. எல்லாம் கரைந்து போய்விடும். அப்படியும் மீறி எடுத்துவந்தால், அனைத்தும் விரிசல்விட்டு உடைந்துவிடும். மழையிலிருந்து காப்பாற்றி உடையாமல் இருக்க வேண்டுமென்றால், இங்கிருக்கும் எங்களது குடிசைகளில் அடுக்கி, பனைமரத்துப் பூக்களால் நெருப்பைக் கனியவைப்போம். சில சமயம், காற்று வேகமாக அடித்தால் குடிசையும் எரிந்துவிடும். அதனால், மழை வந்து மண்பாண்டம் கரைந்தாலும் நெருப்பை அதுபோலச் செய்யமுடிவதில்லை.

Clay Pot Maker Santhosh
Clay Pot Maker Santhosh

குடிசையை அகற்றிவிட்டு ஓடுகளால் கூரை அமைக்க, விடுர் ஸ்டேட் பேங்கில் லோன் கேட்டோம். அவர்கள், தரமுடியாதென்று சொன்னார்கள். இந்தத் தொழிலில் லாபம் இல்லை என்றாலும், இதைத்தான் நாங்க செய்தாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால், வேற தொழில் எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் யாரும் படிக்கவில்லை. வங்கி மூலமாகவே எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் எங்கே போய் உதவி கேட்பதென்றே தெரியவில்லை. அரசாங்கத்தாலும் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை" என்றார் சந்தோஷ்.

சிறுகுறு தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமை. மண்பாண்டத் தொழிலை ஊக்குவிக்க அரசு முழுவீச்சில் செயல்படவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.