Published:Updated:

`ராமர் பட்டாபிசேஷக நாணயம் மட்டும் 5 லட்சம் ரூபாய்; மத்ததெல்லாம்...’ - நாணய சேகரிப்பாளர் சம்பத்குமார்

``என்னிடம் இருக்கிற நாணயங்கள் மற்றும் தபால் தலைகளின் இன்றைய மதிப்பு 25 லட்சம் ரூபாய்க்கும் மேல். இவற்றை தனித்தனியா பலரும் விலைக்குக் கேட்கிறாங்க!"

sampathkumar
sampathkumar

ஈரோட்டைச் சேர்ந்த சம்பத்குமார், அரியவகை நாணயங்கள் மற்றும் தபால்தலைகளைச் சேகரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். 70 ஆண்டுகளைக் கடந்தும் இவரின் தேடல் தொய்வடையவில்லை. 76 வயதாகும் சம்பத்குமாரிடம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் அரியவகை நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும். வயதானாலும், தன் நாணயச் சேகரிப்பு ஆர்வத்தைக் கைவிடாத சம்பத்குமாரிடம் பேசினோம்.

Chola period rare coins
Chola period rare coins

``பழங்கால நாணயங்களைச் சேகரிச்சுகிட்டிருந்த என் உறவினர் ஒருவரைப் பார்த்துதான், ஏழு வயசுல எனக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டுச்சு. சீர்காழியில ஸ்கூல் மற்றும் டிப்ளோமா படிப்பை முடிச்சேன். பிறகு, இந்தியாவின் பல பகுதிகள்லயும், லிபியா நாட்டிலும் வேலை செய்தேன். என் இளமைக்காலத்துல `பேனா நண்பர்கள்' பலர் இருந்தாங்க. உலகில் எந்த நாட்டுல இருந்தாலும், கடிதம் எழுதி நண்பர்கள் பலரும் நட்பில் இருப்போம். இப்படி நாணயங்கள் மற்றும் தபால் தலைகளைப் பரிமாறிக்குவோம்.

என் சின்ன வயசுல, சென்னை தலைமைத் தபால் நிலையத்துல உறுப்பினரானேன். சில வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம், தபால் நிலையத்தில் கட்டிடுவேன். நாட்டில் புதுத் தபால் தலை வெளியிடப்பட்டதும், சென்னை தலைமைத் தபால் நிலையத்துல இருந்து என் வீட்டுக்குத் தபால் தலை வந்திடும். சென்னையிலுள்ள தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்துலயும் உறுப்பினரா இருக்கேன். அதிலிருந்தும் என் வீட்டுக்குத் தபால் தலைகள் வரும். 

ramar pattabhisheka rare coin
ramar pattabhisheka rare coin

நாணயங்கள் சேகரிக்கிறதுதான் கொஞ்சம் சிரமம். நம் நாட்டில் வெளியிடப்பட்டும் புழக்கத்தில் வெளிவராத சிறப்பு நாணயங்கள் பத்தின தகவலைச் செய்தித்தாள்களில் படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும். பிறகு சம்பந்தப்பட்ட சிறப்பு நாணயத்தை ஆன்லைனில் பதிவு செய்வேன். பதிவு செய்தவங்களுக்கு மட்டுமே அந்த நாணயங்கள் அச்சடிக்கப்படும்.

18 மாதங்களுக்குப் பிறகுதான், நாணயம் வீட்டுக்கு வரும். தேடல், பொறுமை, ஆர்வம் இருந்தால்தான், நாணயங்கள் மற்றும் தபால் தலைகளைத் தொடர்ந்து சேமிக்க முடியும். இவற்றின் மூலம் நம் முன்னோர்களைப் பத்தியும் வாழ்க்கைமுறைப் பத்தியும் தெரிஞ்சுக்க முடியும். இந்தச் சேமிப்புக்காக, என் வாழ்நாள்ல நிறைய நேரத்தைச் செலவிட்டிருக்கேன்" என்பவர், தன்னிடமுள்ள அரிய சேகரிப்புகளைப் பட்டியலிடுகிறார்.

stamps
stamps

"மன்னராட்சி காலத்துல நம் நாட்டில் புழக்கத்தில் இருந்த அரியவகை நாணயங்கள், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் வெளிவராத சிறப்பு நாணயங்கள் அனைத்துமே என்கிட்ட இருக்கு. என்னிடம் இருக்கிற ராமர் பட்டாபிஷேக நாணயத்தை (ramar pattabhisheka coin) மட்டும் ஐந்து லட்சத்துக்குக் கேட்கிறாங்க. ஒரு நாணயத்தை மட்டும் தனியா விற்க எனக்கு விருப்பமில்லை.

1952-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இங்கிலாந்து நாட்டின் வெள்ளி விழா நாணயம், 5 மற்றும் 6-ம் ஜார்ஜ் முடிசூட்டும் நிகழ்வைக் குறிக்கும் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் உட்பட பலநூறு நாணயங்கள் என்கிட்ட இருக்கு. பல நாடுகளின் நூற்றாண்டுவிழா கொண்டாட்ட சிறப்புத் தபால் தலைகள் மற்றும் 2D, 3D தபால் தலைகளையும் வெச்சிருக்கேன். 

sampathkumar with wife
sampathkumar with wife

ஹைதராபாத் நிஜாம் காலத்து அஞ்சல் அட்டை, திருவிதாங்கூர் ஏஞ்சல் அஞ்சல் அட்டை, விக்டோரியா மகாராணியின் அஞ்சல் அட்டை உள்ளிட்ட அரிய வகை அஞ்சல் அட்டைகளையும் பாதுகாப்பா வெச்சிருக்கேன். நம் நாட்டின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் எல்லாருடைய கையொப்பமிட்ட போட்டோக்களையும் வெச்சிருக்கேன். 70 வருஷமா நம் நாட்டுல வெளியிடப்படும் முதல் நாள் உறைகளையும் (first day cover) சேகரிக்கிறேன்" என்கிற சம்பத்குமார், தன் சேகரிப்புப் பொருள்களை கண்காட்சி அமைக்கவும் கொடுத்து உதவுகிறார்.

"நான் சேகரிச்ச நாணயங்கள், தபால் தலைகள் எல்லாவற்றையும் ஆல்பம் வடிவில் பாதுகாத்து வெச்சிருக்கேன். மனசுக்குத் திருப்தி கிடைக்கிறதால, 70 வருஷங்களானாலும், இதுக்காக நான் செலவிடும் நேரத்தையும் ஆர்வத்தையும் குறைச்சுக்கலை.

exhibition
exhibition

என் இந்த ஆர்வத்துக்கு எப்போதும் உறுதுணையா இருக்கிறது என் மனைவி ரேவதிதான். நாணயம் மற்றும் தபால்தலை சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துல, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காட்சி அமைக்க ஆசைப்படுறவங்களுக்கு, எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காம என் சேகரிப்புகளைக் கொடுத்து உதவுறேன்.

இப்போ என்கிட்ட இருக்கிற நாணயங்கள், தபால் தலைகளைப் பராமரிக்க சிரமமா இருக்கு. என்னிடம் இருக்கிற நாணயங்கள் மற்றும் தபால் தலைகளின் இன்றைய மதிப்பு 25 லட்சம் ரூபாய்க்கும் மேல்.

தேடல், பொறுமை, ஆர்வம் இருந்தால்தான், நாணயங்கள் மற்றும் தபால் தலைகளைத் தொடர்ந்து சேமிக்க முடியும். இதுக்காக, என் வாழ்நாள்ல அதிக நேரத்தைச் செலவிட்டேன்
சம்பத்குமார்

இவற்றை தனித்தனியா பலரும் விலைக்குக் கேட்கிறாங்க. ஆனா, ஒட்டுமொத்தமா யாராச்சும் வாங்கிக்க முன்வந்தால் விற்கத் தயாராக இருக்கேன்" என்கிற சம்பத்குமார், தன் சேகரிப்புகளை நம்மிடம் காட்டி புன்னகைத்தார்.

Vikatan