Published:Updated:

நாடகக் கலையும் திராவிட இயக்கமும்... இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சும் மாற்றுத் தரப்பின் கருத்துகளும்!

சென்யைில், நேற்று த.மு.எ.க.ச மற்றும் சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்திய தென்னிந்திய மக்கள் நாடக விழாவில், இயக்குநர் இரஞ்சித் பேசியது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்தும் தென்னிந்திய நாடக விழா, நேற்று சென்னையில் தொடங்கியது. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரைக்கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். த.மு.எ.க.ச-வின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தலைவர் சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் நாசர் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அக்டோபர் 6-ம் தேதிவரை இந்த நாடக விழா நடைபெற உள்ளது.

நாடக விழா
நாடக விழா

விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "இன்றைய தமிழ்ச் சூழலில் நாடகத்துக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் என்ன மாதிரியான மதிப்பிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தீவிரமான கலைச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இங்கு நாடகப் பள்ளி இல்லை; கலையை ஊக்கப்படுத்துவதற்கான திட்டம் இல்லை. அரசு ஏன் அவர்களை ஊக்குவிக்கப் பயப்படுகிறது எனத் தெரியவில்லை. அரசு செய்யவேண்யடிதைப் பல அமைப்புகள் செய்து வருகின்றன.

Vikatan
இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்

திராவிட இயக்க வரலாறு என்பதே கலையின் மூலமாகத்தான் மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. அந்தக் கலையை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள், கலையையும் கலைஞர்களையும் வளர்க்க ஏன் யோசிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கலைஞர்களை ஊக்குவிக்கப் பயப்படுகிறார்களோ எனத் தோன்றுகிறது" என்ற கருத்தை முன்வைத்தார். இந்தக் கருத்து சமூகக் கலைதளங்களில் விவாதத்தை உண்டாக்கியது.

இதுகுறித்து தி.மு.க-வைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மாவிடம் பேசினோம். "சமூக நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளைத் திராவிட இயக்கங்கள் மேற்கொண்டன. அதை தி.மு.க-வும் தொடர்ந்துள்ளோம். தி.மு.க -வின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியாது. இயக்கத்தின், அரசியல் கட்சியின் மிக முக்கியத் தேவையே சமூக மேம்பாட்டைக் கொண்டுவருவதுதான். அதை நாடகத்தின் வழியே மட்டும்தான் கொண்டு வரவேண்டும் என்றில்லை.

எழுத்தாளர் சல்மா
எழுத்தாளர் சல்மா

பொதுக்கூட்டம், போராட்டம் எனப் பல வழிகளில் கொண்டுவர முடியும். ஆனால், ஏன் ரஞ்சித் தொடர்ந்து திராவிட இயக்கங்களைக் குற்றம் சாட்டுகிறார் எனத் தெரியவில்லை. அவர் பேச்சை பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். கலைஞர், தன் எழுத்தின் மூலமாகக் கிடைத்த காப்பீட்டுத் தொகையில் 1 கோடி ரூபாயை எழுத்தாளர்களுக்கு விருது வழங்க ஒதுக்கியுள்ளார். நிறைய நூலகங்களைத் திறந்துள்ளார். அரசு சார்பில் கலைதாதணி உட்பட பல விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு எழுத்தாளராக, கலைஞர் அவர்கள் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நிறைய செய்துள்ளார்" என்றார்.

பா.ரஞ்சித் பேச்சின் மையம் குறித்து, நாடகவியலாளர் மு.ராமசாமியிடம் பேசினோம். "காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கம் இரண்டுமே ஆரம்ப காலத்திலிருந்தே நாடகத்தின்மூலம் தமது கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுசென்றனர். ஆரம்பத்தில், வெள்ளையர்கள் தேசிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட நாடகங்களைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியிலிருந்தபோது, மெட்ராஸ் டிராமா ஆக்ட் என 1954-ல் கொண்டுவந்தனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படியொரு சட்டம் கிடையாது. M.R.ராதா நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. M.R.ராதா வின் நாடகம் தடை செய்யப்பட்டபோது, அவர் நீதிமன்றம் சென்றார். கலைஞரின் 'தூக்கு மேடை' நாடகம் தடை செய்யப்பட்டது. இப்படி, பல வரலாறுகள் நம் நாடகத்துறைக்கு உண்டு. தடைசெய்யப்பட்ட நாடகங்களை ஊர், ஊராகச் சென்று நிகழ்த்த முயற்சி செய்தனர். ஆரம்ப காலத்தில் பத்திரிகை, நாடகம், சினிமா எனப் பல தளங்களில் செயல்பட்டனர்.

Street Play
Street Play

திரையில் பிரபலமான நடிகர்களான பிறகும்கூட சிவாஜி கணேசன், ஶ்ரீகாந்த், ராஜேஷ், மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்கள் நாடகம் நடித்தனர். அவர்கள் நடித்த நாடகங்களில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்தச் செயல்பாடு தொடர்ந்து இருந்தது. இது, இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத ஓர் அம்சம். தமிழகத்தில் இப்படி, பல நல்ல முன்னெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.

தமிழக அரசின் கீழ் இயங்கும் இயல், இசை, நாடக மன்றம் சார்பில், ஆண்டுக்கு ஒருமுறை நாடக விழா நடத்தப்படுகிறது. ஆனால், அதில் என்ன மாதிரியான நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பொதுவுடமைக் கருத்துள்ள, தீவிர நவீன நாடக முயற்சிகளுக்கான அரங்கமாக அது இல்லை. பொதுவுடமைச் சிந்தனையுள்ள, அரசியல் பேசும் நாடகங்களாக மட்டுமே அவை பார்த்து ஒதுக்கப்படுகின்றன. பத்திரிகை, மேடைப் பேச்சு, சுவரொட்டி, நாடகம், திரைப்படம் என அனைத்திலும் தமது சுவடை ஆழமாகப் பதித்தவர்கள், திராவிட இயக்கத்தினர்.

 Sivaji Ganeshan
Sivaji Ganeshan

நாடகம் மட்டுமல்ல, அன்று நடத்தப்பட்ட பல பத்திரிகைகள் இன்று இல்லையே. ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் செயல்பாடுகள் குறைந்துதான் போயின. நான் நிகழ்த்திய 'பெரியார்' நாடகத்துக்கு அன்றைய தி.மு.க அமைச்சர் பரிதி இளம்வழுதி வந்திருந்தார். அந்த நாடகத்தில் தி.மு.க-வை விமர்சித்து சில வசனங்களை வைத்திருந்தேன். அதை அவர் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. நாடகமாக ரசித்தார். ஆனால், இன்று அப்படிப்பட்ட சூழல் இல்லை. நாடகம் மட்டுமன்றி எல்லா துறைகளுமே இன்று இப்படிதான் இருக்கின்றன. ஆனால், தனித்தனி அமைப்புகள் தீவிரமான முறையில் நாடகத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. யார் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த நிலை மாறாது என்றுதான் நினைக்கிறேன். தடையை மீறச் சொல்லும் அமைப்புகள், ஆட்சிக்கு வந்ததும் அவர்களும் தடைதான் செய்கிறார்கள் என்பதுதான் வரலாறு!" என்றார் ஆதங்கத்தோடு.