Published:Updated:

"என் உசுரு போறதுக்குள்ள ஒருத்தருக்காவது கட்டைக்குழல் வாசிக்க கத்துக்கொடுக்கணும்" - 95 வயது செல்லம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்டுப்புற கலைஞர் செல்லம் ஐயா
நாட்டுப்புற கலைஞர் செல்லம் ஐயா

அழிவின் விளிம்பில் உள்ள 'கட்டைக் குழல்' என்ற இசைக் கருவியை தன்னுடைய 95 வயதிலும் தன் குழந்தையைப் போல் பராமரித்து, அடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதைத் தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் செல்லம் ஐயா.

தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் காக்க எத்தனையோ இடங்களில் ஒன்றிணைந்து போராடுகிறோம். தமிழர்களுக்கான அடையாளங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படும் போதும், தடுக்கப்படும் போதும் அவற்றைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மேலோங்குகிறது. ஆனால், அழிவின் விளிம்பில் இருக்கும் நம் விழுமியங்களைக் காக்க ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்தோம், என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

செல்லம் ஐயா
செல்லம் ஐயா

தன் பிள்ளைகள் மேல்நாட்டு கலைகளையும் கலாசாரங்களையும் கற்றுக்கொள்வதைத்தான் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் வாழ்வோடு இணைந்த இந்த மண்ணின் கலையைக் கற்றுக்கொள்வதிலும், பொது இடத்தில் வெளிப்படுத்துவதிலும் நிறைய மனத்தடைகள் நம்மைச் சுற்றியிருக்கிறது. இதனால் எத்தனையோ பாரம்பர்யங்கள் அருங்காட்சியகத்தில் அடைக்கப்பட்ட ஒன்றாக மாறி, கண்ணாடி அறைகளை அலங்கரிக்கத்தொடங்கியுள்ளன. எங்கோ சிலர் அந்த மரபுகளை மீட்டெடுக்கத் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் அழிவின் விளிம்பில் உள்ள 'கட்டைக் குழல்' என்ற இசைக் கருவியைத் தன்னுடைய 95 வயதிலும் தன் குழந்தையைப் போல் பராமரித்து, அடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதைத் தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் செல்லம் ஐயா. ஈரோடு மாவட்டம் திருவாச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைச் சந்தித்தோம்.

வீடு முழுவதும் பறை, உறுமி, அரை, என ஆங்காங்கே இசைக்கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வீட்டின் ஒரு மூலையில், தன் உடம்பை குறுக்கி கட்டிலில் படுத்துக்கிடக்கிறார் செல்லம் ஐயா. கட்டிலின் கால்பகுதியில் ஒன்றரை அடி உயரமுள்ள 'கட்டைக் குழல்' சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பார்த்ததும், "வீட்ல யாரும் இல்லங்க, பொழுது போனதும் வாங்க'' எனத் தளர்வான குரலில் பதில் சொல்கிறார்.

ஒரு கச்சேரிக்குப் போனா 300 ரூபாய் கொடுப்பாங்க. சோறு தண்ணி கிடைக்காம வீட்டுக்கு வருவேன். அதே ஆர்க்கெஸ்ட்ரா குரூப்ல இருந்து வர்றவங்களுக்கு 10,000 ரூபாய் குடுப்பாங்க. நம்ம மண்ணுல நாட்டுப்புற கலைக்கு அவ்வளவுதான் மரியாதை.
கட்டை குழல் கலைஞர் செல்லம்.

’’ஐயா, உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறோம். கட்டைக் குழல் பற்றி சில தகவல்கள் சொல்ல முடியுமா?’’ என்றவுடன், முகம் முழுவதும் பரவசத்துடன், "கட்டைக் குழல் வாசிக்க சொல்லித்தரணுமா?" எனக் குழந்தையைப் போல் வேகமாக எழுந்து அமர்கிறார். வயதான காலத்திலும் தான் கற்ற இசையைக் கொண்டாடும் செல்லம் ஐயாவுடன் உரையாடல் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"95 வயசு ஆகுது. பார்வை குறைஞ்சு போச்சு, காதும் சரியா கேட்கிறது இல்ல. ஆனா, இப்ப கூட நான் கட்டைக்குழல் வாசிச்சா என்னோட வாத்தியத்தின் ஸ்வரம் தெளிவா இருக்குதுனு என் பசங்க சொல்லுவாங்க. இதை விட ஒரு கலைஞனுக்கு என்ன வேணும் சொல்லுங்க"- செல்லம் ஐயா முகத்தில் பெருமிதம் ததும்புகிறது.

Vikatan

"கட்டைக் குழலை தம்கட்டி ஊதும்போது எனக்கு என்னோட வயசே மறந்து போயிரும். சின்ன பையன் போல உற்சாகமாயிருவேன். எனக்கு 15 வயசாயிருக்கும்போது ஊர்த்திருவிழாவில் ஒருத்தர் இதை ஊதுறதைப் பார்த்தேன். சின்ன சைஸ் நாதஸ்வரம் மாதிரி இருக்கேனு அவர்கிட்ட விசாரிக்க, அவர்தான் கட்டைக்குழல் வாத்தியத்தை எனக்கு அறிமுகப்படுத்தினாரு. எங்க குடும்பத்துல எல்லாரும் பறை வாசிக்கிறவங்க. நான் கட்டைக் குழல் வாசிக்கப் போறேன்னு சொன்னதும், எங்க வீட்டுல வாங்கிக்கொடுக்கல. பப்பாளி மரத்தை வெட்டுனா குழாய் மாதிரி கிடைக்கும். அதுல ஓட்டை போட்டுதான் வாசிக்கப்பழகுனேன். அந்தக் காலத்துல ஒரு கட்டைக் குழல் 20 ரூபாய்க்குள்ளதான் இருந்திருக்கும். ஆனா அதை வாங்க பல மாசம் காத்துக்கிடந்தேன். கடைசியா கூலி வேலைக்குப் போயிதான் இந்தக் கட்டைக் குழலியை வாங்குனேன். 80 வருஷமா என் உசுரு மாதிரி என்கூடவே ஒட்டிக்கிட்டுக் கிடக்கு" எனத் தன்னுடைய கட்டைக் குழலை வாஞ்சையாகத் தடவிக் கொடுக்கிறார் செல்லம் ஐயா.

"கிராமத்து திருவிழா, கச்சேரினு சில வருஷத்துக்கு முன்னாடி வர வெளி இடங்களுக்கு போயி வாசிச்சுட்டுதான் இருந்தேன். ஒரு கச்சேரிக்கு போனா 300 ரூபாய் கொடுப்பாங்க. சோறு தண்ணி கிடைக்காம வீட்டுக்கு வருவேன். அதே ஆர்க்கெஸ்ட்ரா குரூப்ல இருந்து வர்றவங்களுக்கு 10,000 ரூபாய் குடுப்பாங்க. நம்ம மண்ணுல நாட்டுப்புற கலைக்கு அவ்வளவுதான் மரியாதை. ஆனாலும், கலைஞனா இந்தக் கலை எப்படியும் போகுதுனு விடமுடியல. வயசானதால் உடம்பும் தள்ளாட்டாம் கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. அதனால் எங்கேயும் வெளிய போறது இல்ல. காலையில ஒரு மணிநேரம், ராத்திரி ஒரு மணிநேரம் வீட்டிலேயே வாசிப்பேன்.

கலைஞன் கை ஏந்தக் கூடாதுனு சொல்லுவாங்க. கொரோனா நேரத்தில் கச்சேரி இல்லாம என் மொத்த குடும்பமும் பட்டினில இருந்தப்போகூட நாங்க கையேந்தல. ஆனா, இப்போ கையேந்திக் கேட்குறேன்.
கட்டைக் குழல் கலைஞர் செல்லம்

'வயசான காலத்துல இதுல ஏன் மூச்சை கொடுத்துட்டு இருக்கீங்க'னு பசங்க கேட்பாங்க. ஆனால், வாசிக்காம ஒரு நாள் கூட இருந்தது இல்ல. எனக்கு ரெண்டு பிள்ளைங்க. பறை, துடும்புனு வேற வேற வாத்தியங்களை வாசிக்கப் பழகுனாங்க. கட்டைக் குழல் வாசிக்குறது கொஞ்சம் சிரமங்கிறதால் இதை வாசிக்கப் பழகாம விட்டுட்டாங்க. எனக்கு தெரிஞ்சு எங்க ஊருலையே இப்போ நான் மட்டும்தான் கட்டைக் குழல் வாசிக்கிறவன். எனக்கு அப்புறம் எங்க ஊருல இந்தக் கலையே இருக்காது. என் கலைக்காக இன்னும் கொஞ்ச நாள் வாழணும்னு ஆசையா இருக்கு" - சுருக்கங்கள் நிறைந்த கன்னங்களை கண்ணீர் தழுவுகிறது. வேட்டியால் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

" 'கட்டைக் குழல்'ங்கிற வாத்தியமே இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்குத் தெரியாது. அதை வாசிக்க கத்துக்கவும் யாரும் விரும்புறது இல்ல. இந்தக் கருவிக்கு முகவீணைனு ஒரு பேரு உண்டு. மூச்சைப் பிடிச்சு இழுத்து வாசிக்கும்போது , வீணையோட சத்தம் மாதிரியே இருக்கும். ஆதி காலத்துல இருந்து இருக்கிறதா சொல்லுவாங்க. ஆனா இந்தக் கலைக்கும் கலைஞனுக்கும் எந்த மரியாதையும் இல்ல. இசைக்கு ஒரு வடிவம்தான். ஆனா மனுஷங்களுக்கு சாதி, மதம்னு நிறைய வடிவங்கள் இருக்கு. மனுஷங்களை சாதிப் பெயரைச் சொல்லி ஒதுக்குறவங்களுக்கு ஒரு கருவியை சாதிக்குள்ள அடக்குறதா கஷ்டமா? எங்க சாதிக்காரவங்ககிட்ட இருந்ததுனாலயே, எங்க கருவியும் அடையாளம் இல்லாம போச்சு.

செல்லம் ஐயா
செல்லம் ஐயா

பறையை ஒரு குறிப்பிட்ட சாதிக்காரங்க மட்டும்தான் வாசிக்கணுங்கிறது இப்போ உடைஞ்சுட்டு வருது. அதே மாதிரி கட்டைக்குழலை தேடுற காலமும் வரும். அந்த நேரத்தில் கட்டைக் குழலை அறிமுகம் செய்து வைக்ககூட ஆளுங்க இருக்க மாட்டாங்க. என் உடம்புல இருந்து உசுரு போறதுக்குள்ள ஒருத்தருக்காவது கட்டைக் குழல் வாசிக்க கத்துக்கொடுக்கணும்னு நினைக்கிறேன். யாரும் தயாரா இல்ல. அரசாங்கமும் மக்களும் நினைச்சா நிச்சயம் எதாவது பண்ணமுடியும். கலைஞன் கை ஏந்தக் கூடாதுனு சொல்லுவாங்க. கொரோனா நேரத்தில் கச்சேரி இல்லாம என் மொத்த குடும்பமும் பட்டினில இருந்தப்போகூட நாங்க கையேந்தல. ஆனா, இப்போ கையேந்திக் கேட்குறேன். கட்டைக் குழல் வாத்தியத்தை அடுத்த தலைமுறை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஏதாவது பண்ணுங்க. முழுசா அழிஞ்ச பிறகு, பாரம்பர்யம்னு புஸ்தகத்துல படிச்சு தெரிஞ்சுக்கிறதுக்குப் பதிலா இப்போவே வாசிக்க பழகுங்க. சாதிக்காக ஒரு அடையாளத்தை அழிச்சுறாதீங்க மக்கா" கைக்கூப்பி விடைபெறுகிறார் செல்லம் ஐயா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு