Published:Updated:

"ஊரடங்கில் தளர்வுகள் இல்லையென்றால் கிராமிய கலையே அழிந்து விடும்" - கலங்கும் கலைஞர்கள்!

கலைஞர்கள் மனு
கலைஞர்கள் மனு ( எம். விஜயகுமார். )

2018-ல் கஜா புயலால் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டோம். 2019 தேர்தலால் வேலை இழந்தோம். 2020-ல் இருந்து இன்றுவரை முழுமையாக தொழில் இல்லை. அதனால் வருமானம் இல்லாமல் குடும்பமே பசியும், பட்டினியுமாகத் தவிக்கிறோம்.

மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கிராமியக் கலை கலைஞர்கள் மீண்டும் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

"சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்கள் ஷூட்டிங் எடுக்க அனுமதிக்கிறார்கள். திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அமர்வதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம், ஏன் இந்தப் பாரபட்சம்? எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளோடு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்.

கரகாட்டம்
கரகாட்டம்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து குடும்பம், குழந்தைகளோடு பசியால் தவிக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு எங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டக் கலைஞர்களும், மேடை மெல்லிசை மற்றும் நடன கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், அலங்கார குழுவினர் என 250-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சேலம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள்.

இதுபற்றி சேலம் மேற்கு மாவட்ட நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

"எங்க சங்கத்தில் நூறுக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இருக்கிறோம். எங்களுடைய தொழிலே கிராமியக் கலைதான். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. நாங்கள் காலகாலமாக எங்க தாத்தா, அப்பா, நான், மகன் என அனைவரும் இந்தத் தொழிலை செய்து வருகிறோம்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

2018-ல் கஜா புயலால் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டோம். 2019 தேர்தலால் வேலை இழந்தோம். 2020-ல் இருந்து இன்று வரை முழுமையாக தொழில் இல்லை. அதனால் வருமானம் இல்லாமல் குடும்பமே பசியும், பட்டினியுமாக தவிக்கிறோம். கடந்த வருடம் கலை பண்பாட்டுத் துறை மூலமாக 2,000 ரூபாய் கொடுத்தார்கள். தற்போது இரவு நேர ஊரடங்கு அறிவித்து இருக்கிறார்கள்.

இதனால் பெரிதும் நாங்கள்தான் பாதிக்கப்படுவோம். அதனால் மாதம் 5000-ம் வீதம் எங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். அல்லது அரசு கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு எங்களை பயன்படுத்திக் கொண்டு சம்பளம் வழங்க வேண்டும். இப்படி ஏதாவது செய்தால் நான் நாங்கள் வாழ முடியும். இல்லையென்றால் நாங்கள் பசியால் சாவும் நிலை உருவாகும்'' என்றார்.

இதுபற்றி சேலம் கிழக்கு மாவட்ட நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் சங்கத்தின் கெளரவ தலைவரும், கலைமாமணி விருது பெற்றவருமான நாகூர்கனி, ''என்னிடம் கரகாட்ட கலைஞர்கள், பொய்கால் குதிரை, மான் மற்றும் மயிலாட்ட கலைஞர்கள், தப்பாட்ட கலைஞர்கள் குறவன், குறத்தி என 25க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு கலை நிகழ்ச்சி தான் முழுநேரத் தொழில். அதில் கிடைக்கிற வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம்.

நாகூர்கனி
நாகூர்கனி

கொரோனா ஊரடங்கால் மிகுந்த துன்பத்தில் இருந்தோம். கடந்த ஓரிரு மாதங்களாக கலை நிகழ்ச்சிக்கு சென்று வந்தோம். தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம். அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளோடு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் கலைத் தொழிலே அழிந்து விடும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு