Published:Updated:

ரபேல் முதல் தேஜஸ் வரை, முப்படைகளின் ராணுவத் தளவாட மாதிரிகளைச் செய்து அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்!

ராணுவத் தளவாட மாதிரிகளுடன் ஆனந்தராஜ்

"இதுவரைக்கும் எங்கிட்ட 15க்கும் அதிகமான போர் விமானங்கள், போர் கப்பல்கள், பீரங்கி டாங்கிகள்ன்னு மொத்தம் 30க்கும் மேற்பட்ட ராணுவத் தளவடாங்கள் இருக்கு." - ஆனந்தராஜ்

ரபேல் முதல் தேஜஸ் வரை, முப்படைகளின் ராணுவத் தளவாட மாதிரிகளைச் செய்து அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்!

"இதுவரைக்கும் எங்கிட்ட 15க்கும் அதிகமான போர் விமானங்கள், போர் கப்பல்கள், பீரங்கி டாங்கிகள்ன்னு மொத்தம் 30க்கும் மேற்பட்ட ராணுவத் தளவடாங்கள் இருக்கு." - ஆனந்தராஜ்

Published:Updated:
ராணுவத் தளவாட மாதிரிகளுடன் ஆனந்தராஜ்
புதுக்கோட்டை அருகே குறிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (29). டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்கும் இவர், தரைப்படை, விமானப்படை, கப்பற்படை என நாட்டின் முப்படைகளின் ராணுவத் தளவாடங்களின் மாதிரிகளை சார்ட் பேப்பரில் தத்ரூபமாக தயாரித்து அசத்தி வருகிறார்.

வெளிநாட்டில் இருந்து வாங்கிய ரபேல் போர் விமானம், மிசோரி போர் கப்பல், சி.எச்-47 சினுக் ஹெலிகாப்டர், டாங்கிகள் என 30க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாட மாதிரிகளை சார்ட் பேப்பரில் தயாரித்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போதும் ராணுவத் தளவாடங்களின் மாதிரிகளை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கண்காட்சிப்படுத்தி பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

ராணுவத் தளவாட மாதிரிகள்
ராணுவத் தளவாட மாதிரிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில், புதுக்கோட்டையில் உள்ள அரசு பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடைய பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு, அங்கு தான் தயாரித்த ராணுவத் தளவாட மாதிரிகளைக் காட்சிப்படுத்தி, பார்வையற்ற மாணவர்களையும் தொட்டுப் பார்க்க வைத்து, நெகிழ வைத்திருக்கிறார். ஆனந்தராஜை சந்திக்கச் சென்றபோது, வீட்டின் பாதியை ராணுவத் தளவாடங்களின் மாதிரிகள் ஆக்கிரமித்திருந்தன. வெளிநாட்டில் இருந்து வாங்கிய ரபேல் துவங்கி, இந்தியாவின் தேஜஸ் வரை அனைத்து போர் விமானங்களின் மாதிரிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. புதிதாக எதிர்கால விமானம் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் தயாரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனந்தராஜிடம் பேசினோம்.

"நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் குறிச்சிப்பட்டிதான். விவசாயக் குடும்பம். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். அதுவும், ரெண்டு வயலை அடமானம் வச்சிதான் என்னைய, படிக்க வச்சாங்க. சின்ன வயசிலயிருந்தே எல்லாருக்கும் மாதிரி, எனக்கும் விமானம் ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி ராணுவத்துல சேரணும்ங்கிற ஆசையும் இருந்துச்சு. எங்க ஊர்ப் பக்கம் எல்லாம் வீட்டுல ஒரு பையனா இருந்தா, ராணுவத்துக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்க. நான் வீட்ல ஒரே பையன்ங்கிறதால எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலே போச்சு.

சின்னவயசுல பலரும், பேப்பர்ல கப்பல், விமானம் செஞ்சு விளையாடுவோம். அது மாதிரிதான் நானும் மொதல்ல இதைச் செய்ய ஆரம்பிச்சேன். ஊர்ல ஒரு குளம் வெட்ட ஜேசிபி வரும். அந்த ஜேசிபியை எல்லாரும் கூடிப்போய் பார்ப்போம்.

ராணுவத் தளவாட மாதிரிகள் கண்காட்சி
ராணுவத் தளவாட மாதிரிகள் கண்காட்சி

சின்னப்பிள்ளைங்களுக்கு இப்பவும் ஜேசிபின்னா ஒரு பிரமிப்பு இருக்கத்தான் செய்யும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச ஜேசிபியில இருந்துதான் கிராஃப்ட் செய்யறதையே ஆரம்பிச்சேன். முழுமையாக சார்ட் பேப்பர்லயே தத்ரூபமா ஜேசிபி, அதோட டிப்பர் லாரியையும் செஞ்சேன். ரொம்ப மெனக்கெடல் எடுத்து செஞ்சேன். ஜேசிபி இயங்கிற மாதிரியே செஞ்சதால ஊர்ல உள்ள பிள்ளைங்க எல்லாருமே எங்க வீட்டுல கூடிருவாங்க. ஒவ்வொருத்தரும் தங்களுக்கு விமானம், கப்பல்ன்னு செய்யச் சொல்லிக் கேட்டாங்க. அதற்கப்புறம்தான் டிவியில, பேப்பர்ல பார்க்கிற போர் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் செய்யலாம்னு தோணுச்சு.

ராணுவத் தளவாடங்களில் மொத மொதல்ல மிசோரி போர் கப்பல்தான் செஞ்சேன். அதற்கப்புறமா அதிகளவுல போர் விமானங்கள் செய்ய ஆரம்பிச்சேன்.

இப்போ, எங்கிட்ட 15க்கும் மேற்பட்ட போர் விமானங்களின் மாதிரிகள் இருக்கு. என்னோட போன்ல இணையதளத்தில் போய் இவற்றின் ஃப்ரன்ட் வியூ, சைடு வியூ, டாப் வியூ எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணிக்குவேன். மொதல்ல ரஃப் ஸ்கெச்சிங் பண்ணுவேன். அதற்கப்புறம் டெவலப்மென்ட் டிராயிங் நானே போட்டு முடிச்சு, ஒவ்வொண்ணா ரெடி பண்ணுவேன். ஒரு ஜெட் செய்யணும்னா ரெண்டு வாரம் வரைக்கும் ஆகும். இதுக்கு சார்ட் பேப்பர், பெவிக்கால், அனபாண்ட், அக்ரலிக் பெயிண்ட், பிரஷ் உள்ளிட்டவை எல்லாம் தேவைப்படும். ஒரு ஜெட் செய்யணும்னா ரூ.1,500 வரைக்குமே தேவைப்படும்.

ராணுவத் தளவாட மாதிரிகள்
ராணுவத் தளவாட மாதிரிகள்

ஆரம்பத்துல ராணுவத் தளவாடங்கள் செய்யறதுக்கு பெருசா வீட்டுல, வெளியில எல்லாம் எனக்கு ஆதரவு இல்லை. சார்ட் பேப்பர் வாங்கக் கூட காசு இருக்காது. வீட்டுலயும் கேட்க முடியாது. சின்ன, சின்ன வேலைகள் செஞ்சி சம்பாதிச்ச காசை வச்சிதான் கொஞ்சம், கொஞ்சம் சார்ட், பெவிக்கால்னனு தேவைப்படுகிறதை வாங்கிக்குவேன்.

'அந்த மூலையிலேயே உட்கார்ந்துக்கற... நறுக்கி, நறுக்கி ஒட்டிக்கிட்டே இருக்க... இத விட்டா உனக்கு வேலை இல்லை. நீ எல்லாம் எங்க உருப்படப் போறே'ன்னு சொல்லி வீட்டுலயே திட்டியிருக்காங்க. வீட்டுல மட்டுமில்லாம, சொந்தக்காரங்க, நண்பர்களும் என்னைய கண்டபடி பேசியிருக்காங்க. அதையெல்லாம் நாம் காதுல வாங்காம என் வேலையை செஞ்சிக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு கலெக்டரே என்னோட செயலைப் பாராட்டி பரிசு வழங்கியிருக்காங்க. பலரும் வீடு தேடி வந்து என்னைப் பாராட்டுறாங்க. இப்ப வீட்டுல உனக்கு என்ன தேவையோ எங்ககிட்ட கேளுன்னு சொல்றாங்க. உறவினர்கள் சிலரும் உதவுறாங்க. நான் எப்படியும் இதுல பெரிய ஆளா வந்துருவேன்னு நம்புறாங்க.

சென்னையில ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டே இப்போ கேட்கிறவங்களுக்கு இந்த கிராப்ட் ஒர்க்கையும் செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் எங்கிட்ட 15க்கும் அதிகமான போர் விமானங்கள், போர் கப்பல்கள், பீரங்கி டாங்கிகள்ன்னு மொத்தம் 30க்கும் மேற்பட்ட ராணுவத் தளவடாங்கள் இருக்கு.

ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்னைக்கும் நான் தயாரிச்சதை கண்காட்சியா வைப்பேன். கடந்த முறை இதுபோன்று கண்காட்சிப்படுத்திய போது, அப்போது கலெக்டராக இருந்த உமா மகேஸ்வரி என்னை வியந்து போய் பாராட்டினாங்க. புதுக்கோட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் என்னைத் தொடர்புகொண்டு, எங்க பள்ளியில இதைக் கண்காட்சிப்படுத்த முடியுமான்னு கேட்டுக்கிட்டாங்க. உடனே, அதைச் செய்தேன்.

ராணுவத் தளவாட மாதிரிகள் கண்காட்சி
ராணுவத் தளவாட மாதிரிகள் கண்காட்சி

அங்க படிக்கிற மாணவ, மாணவிகள் இதையெல்லாம் ரொம்ப ஆர்வமா தொட்டுப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டதோட, எங்களுக்கும் சொல்லித்தாங்க அண்ணான்னு கேட்டுக்கிட்டாங்க. அது என்னைய ரொம்ப நெகிழ வெச்சிருச்சு. சார்ட் பேப்பர்ல இருக்கிறதால, இதனை பராமரிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். வரும்காலத்துல எல்லாத்தையும் மெட்டல்ல செய்யணும்ங்கிற ஆசை இருக்கு. பொருளாதாரம்தான் அதற்குத் தடையா இருக்கு. இப்பவும், எந்தப் பள்ளியில யார் கூப்பிட்டாலும் இதனைக் கண்காட்சிப்படுத்தத் தயாராக இருக்கேன். குடியரசு தினம், சுதந்திர தினத்தில் மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் கண்காட்சிப்படுத்துறேன். அரசு ஊக்கம் கிடைத்தால், இன்னும் வேகமாக என்னால் இயங்க முடியும்" என்கிறார் ஆனந்தராஜ்.