Published:Updated:

"ராகுல் டிராவிட்டை போட்டோ எடுக்க அவ்ளோ பிடிக்கும்... ஏன்னா?"- புகைப்படக் கலைஞர் தர்ம சந்துரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்துரு போட்டோகிராபி | ராகுல் டிராவிட்
சந்துரு போட்டோகிராபி | ராகுல் டிராவிட்

“ஒரு புகைப்படம் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு புன்னகையை உங்களிடம் உருவாக்க வேண்டும்”

சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்ம சந்துரு, புகைப்படக் கலையின் சாத்தியங்கள் அனைத்தையும் கைகொண்டுவிடும் நோக்கில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வெகு சிலரில் ஒருவர். தன்னுடைய 12 வயதில் கேமராவைக் கையிலெடுத்த சந்துரு, புகைப்படத் துறையில் 25-ம் ஆண்டை இப்போது நிறைவுசெய்திருக்கிறார். சுமார் 20-க்கும் மேற்பட்ட வகைமைகளில் புகைப்படங்கள் எடுத்திருக்கும் சந்துருவிடம் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு பேசினேன்.
சந்துரு போட்டோகிராபி
சந்துரு போட்டோகிராபி

“12-வது வயதில் என் அப்பா பரிசளித்திருந்த ஒரு கேமராவைக் கொண்டு விளையாட்டாகப் படமெடுக்கத் தொடங்கினேன். அந்த வயதுக்கே உரிய குறும்புகளோடும், கற்பனைகளோடும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று, சூரிய அஸ்தனமத்தின்போது நான் எடுத்திருந்த ஒரு ‘சில்ஹவுட்’. என் மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிட்ட அந்தப் படத்தை, ரொம்பவும் பெருமையாக எங்கள் வீட்டில் காட்டியபோது, ‘என்ன படத்துல முகமே தெரியல’ என சொல்லிவிட்டார்கள். புகைப்படக் கலையில் என்னுடைய பயணம் தொடங்கியது இப்படித்தான்!” நினைவுகளின் ‘சில்ஹவுட்’ட்டில் பேசத் தொடங்குகிறார் தர்ம சந்துரு.

1996-ல் சந்துரு எடுத்த ‘சில்ஹவுட்’
1996-ல் சந்துரு எடுத்த ‘சில்ஹவுட்’
DHARMA CHANDRU

புகைப்படங்களின் மீதான எல்லையற்ற காதலினால், சுயதேடலில் பரிசோதனைகள் மேற்கொண்டு, சொந்தமாகவே புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் சந்துரு.

“ஃபிலிம் கேமராவிலேயே படமெடுத்துவந்த நான், 2004-ல் முதன்முறையாக டிஜிட்டல் கேமராவுக்கு மாறினேன். அது கற்றல் சார்ந்து புதிய வாசல்களை எனக்குத் திறந்துவிட்டது. 2007-ல் பொறியியல் படிப்பு முடித்தேன். அந்த ஆண்டின் இறுதியிலேயே, ஆங்கில நாளிதழின் சென்னை பதிப்பில், சுயாதீனப் புகைப்படச் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தேன். புகைப்படச் செய்தியாளரின் பணி, செய்திக்கான படங்களை எடுப்பது எப்படி, செய்தியைப் புகைப்படங்கள் வழி கடத்துவது எப்படி என முற்றிலும் புதிய விஷயங்கள் எனக்கு அப்போது அறிமுகமாயின.

சந்துரு போட்டோகிராபி
சந்துரு போட்டோகிராபி
DHARMA CHANDRU
சந்துரு போட்டோகிராபி
சந்துரு போட்டோகிராபி
DHARMA CHANDRU

சிறுவயதில் கிரிக்கெட் கனவுகளோடு இருந்த சந்துருவுக்கு, ஓர் புகைப்படக்காரராக கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது இந்தக் காலகட்டத்தில் தான். “2008-ம் ஆண்டு இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியைப் புகைப்படம் எடுக்கும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிரிக்கெட்டுக்குப் பதிலாக சிறுவயதில் கேமராவைத் தேர்ந்தெடுத்திருந்த எனக்கு, இப்போது கேமராவுடன் கிரிக்கெட் மைதானத்தில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நான் மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்” என புன்னகைக்கிறார் சந்துரு.

மைதானத்தில் புகைப்படக்காரராக...
மைதானத்தில் புகைப்படக்காரராக...

“இதைத் தொடர்ந்து 2009-ல் ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ அணியின் முதன்மைப் புகைப்படக்காரர் பணிக்கான தேர்வில் கலந்துகொண்டேன். சுமார் 1,000 போட்டியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 இறுதித் தேர்வாளர்களில் ஒருவராக நான் இருந்தேன். ஆனால், எனக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டு முயற்சித்தபோது, முதல் நிலையைக் கூட என்னால் தாண்டமுடியவில்லை” என்று கூறும் சந்துரு, ஒரு மாற்றம் வேண்டி வெளிநாட்டில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்கிறார். பிரிட்டனில் 4 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துவிட, மூன்றாவது முறையாக ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ அணியின் புகைப்படக்காரருக்கான தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்ல தயாராக இருந்தாலும், இந்த முறை கண்டிப்பாக இதில் தேர்வாகிவிடுவது என்ற தீர்மானத்தில் அதுவரை வெளியான என்னுடைய படைப்புகள் அனைத்ததும் எடுத்துக் கொண்டு சென்றேன். குறிப்பாக 2008-ல் சேப்பாக்கம் மைதானத்தில் நான் எடுத்திருந்த படங்களைத் தனி ஆல்பமாக அவர்களிடம் காண்பித்தேன். ‘ஏற்கெனவே மைதானத்துக்குள் படமெடுத்த அனுபவம் எனக்கு இருக்கிறது’ என்று அவர்களிடம் சொன்னேன். நான் தேர்வாகிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மாறியது. அந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் போட்டிகளைப் படமெடுத்தேன். சுமார் இரண்டரை மாதங்கள் அவர்களோடு பயணித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அது அமைந்துவிட்டது” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறும் சந்துரு, ஐசிசி உலகக் கோப்பை 2011, ஐசிசி டி-20 உலகக் கோப்பை 2016, ஐ.எஸ்.எல் 2014 என அடுத்தடுத்து தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஒவ்வொன்றிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் எம்.எஃப்.பி எனப்படும் ‘மல்டிபிள் ஃப்ரேம் போட்டோகிராபி’ என்ற முறையில் சந்துரு எடுத்த புகைப்படங்கள், பார்வையாளர்களை மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது!

இதற்கு இடைப்பட்ட காலங்களில், யாரும் அதிகம் சென்றிராத புதிய இடங்களைத் தேடிச் சென்று படமெடுத்திருக்கிறார் சந்துரு. சுற்றுலாவுக்குக் கேரளா தான் என்றில்லை, தமிழ்நாட்டிலும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்ல குமுளி, மேகமலை, பச்சை மலை, கொல்லிமலை என தமிழ்நாட்டின் இண்டு, இடுக்குகள் வரை சென்று படம் எடுத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க பணியாக, குற்றாலம் தவிர்த்து தமிழ்நாட்டில் 50 அருவிகளைப் படமெடுத்திருக்கிறார் சந்துரு. “அருவிகளை அதன் இயல்பு, இயற்கைத் தன்மையிலேயே படமெடுக்க விரும்பினேன். எனவே, அந்தப் படங்களில் பிளாஸ்டிக், அழுக்கு, மனிதர் போன்ற எந்தக் கூறுகளும் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டேன்” என்று இத்திட்டத்தின் நோக்கம் குறித்து கூறுகிறார். தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா துறை, இன்க்ரெடிபிள் இந்தியா ஆகியவற்றுக்கும் படங்கள் எடுத்திருக்கிறார் சந்துரு.

“இன்றைக்குப் புகைப்படக் கலையைக் கவர்ச்சி தரும் ஒன்றாகவே பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு எத்தனை ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர், தங்கள் புகைப்படங்களுக்கு எத்தனை லைக்ஸ் கிடைக்கிறது என்பதிலேயே அவர்கள் கவனம் கொண்டுள்ளனர். தாங்கள் எடுக்கும் படங்களைக் கம்யூட்டரில் கூட பார்க்காமல், அப்படியே பதிவேற்றிவிடுகின்றனர்; எல்லோரும் இன்ஸ்டாகிராம் போட்டோகிராபராகவே இருக்கிறார்கள். புகைப்படக்கலையின் மீது ஒரு கமிட்மென்ட் இருக்க வேண்டும். ஒரு ஃப்ரேமின் அருமை தெரிய வேண்டும். ஒரு புகைப்படம் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு புன்னகையை உங்களிடம் உருவாக்க வேண்டும்” என்று புகைப்படக் கலையின் இன்றைய பிரச்னைகள் குறித்துப் பேசுகிறார் சந்துரு.

புகைப்படப் பயிற்சி வகுப்பு
புகைப்படப் பயிற்சி வகுப்பு

“என்னுடைய புகைப்படப் பயிற்சி வகுப்புகளில் தொடக்கத்தில், ‘அடிப்படைகளில் இருந்து தொடங்கலாமா’ என்று கேட்பேன். எல்லோரும் வேண்டாம் என்பார்கள். ஆனால், பயிற்சியின் போக்கில், 1) படத்தைப் பிரின்ட் போட்டுப் பார்ப்பீர்களா?; 2) படத்தை 100 சதவிகிதம் ஜூம் செய்து பார்ப்பீர்களா?; 3) பேட்டரி இல்லாமல் உங்களால் படமெடுக்க முடியுமா? என இந்த மூன்று அடிப்படைக் கேள்விகளுக்குக் கூட யாரிடமும் பதில் இருக்காது. நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும். தெரியவில்லை என்பதும் நல்ல விஷயமே; ஆனால், அதை ஒத்துக் கொள்ளும் மனம் இருக்க வேண்டும். அப்போதுதான் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்” தீர்க்கமாகப் பேசுகிறார் சந்துரு.

இயக்குநர்கள் பாலசந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் எல்லோரும் சந்துருவின் புகைப்படங்களைப் பார்த்து பாராட்டும் வாழ்த்தும் வழங்கியிருக்கின்றனர்; டிராவிட் உட்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் சந்துருவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள்!

''ஒருமுறை ராகுல் டிராவிட் ஹோட்டல் அறையில் மசாஜ் சர்வீஸ் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது நானும் அங்கே இருந்தேன். அந்த அறையில் லைட்டிங் நன்றாக இருந்தது. அப்போது நான் டிராவிட்டிடம் 'சார்... இந்த லைட்டிங்ல ஒரு போட்டோ எடுக்கலாமா' என்று கேட்டேன். தாராளமா எடுத்துக்கோங்க'னு சொன்னார். உடனே எடுத்தேன். ராகுல் டிராவிட்டை போட்டோ எடுக்க அவ்ளோ பிடிக்கும். ஏன்ன 'ஜெம் ஆஃப் எ பர்சன்'னு சொல்லுவாங்கள்ல அதுக்கு சரியான உதாரணம் ராகுல் டிராவிட்தான்'' என நெகிழ்கிறார் தர்ம சந்துரு.

டிராவிட்டுடன் சந்துரு
டிராவிட்டுடன் சந்துரு

“2012-ல் என்னுடைய கனவுகளில் ஒன்று நிறைவேறியது. நான் கெனான் இந்தியாவின் பிராண்ட் அம்பாஸிடராகவும், ‘கெனான் ஈ.ஓ.எஸ் மாஸ்ட்ரோ’வாகவும் நியமிக்கப்பட்டேன். இதன் மூலம் கேமரா பயிற்சிப் பட்டறைகள், வழிகாட்டல்கள், விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றை கெனான் இந்தியாவுக்காக மேற்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து தனிப்பட்ட முறையிலும் புகைப்பட வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட புகைப்பட வகைமைகளில் இயங்கியிருந்தாலும், நான் அதிகம் தொடாத, இன்னும் முழுமையாக ஈடுபடாத ஒரு வகைமை ‘ஃபேஷன்’. வரும் ஆண்டுகளில் ஃபேஷன் புகைப்பட வகைமையில் தனிக் கவனம் செலுத்துவது என முடிவெடுத்திருக்கிறேன்” என்று கூறும் சந்துருவின் வார்த்தைகளில் அந்தப் பன்னிரெண்டு வயது சிறுவனின் ஆர்வம் நிறைந்திருக்கிறது!

தர்ம சந்துருவின் இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/dharmachandru

புகைப்படக் கலைஞர் தர்ம சந்துரு - ஆல்பம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு