அறிவுப்பசி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கலை என்பதையெல்லாம் தாண்டி யாருக்கும் நாவில் எச்சி ஊறாமல் இருக்காது. 'கல்லில் கலைவண்ணம் கண்டான்' என ஒரு பாடல் இருக்கிறது. ஜப்பானிய பெண் கலைஞரான மானமி சஸாகி (Manami Sasaki) சாப்பிடக் கூடிய பிரட் டோஸ்ட்டில் கலைவண்ணம் கண்டிருக்கிறார். பாரம்பரியமான ஜப்பானிய ஓவியங்களை, அதில் வரும் மனிதர்களை, அவர்களின் உடைகளை, ஒரு பிரட்டில் ஸ்குவிட் இங்க் (Squid Ink) பயன்படுத்தி வரைகிறார். ஸ்குவிட் இங்க் எனப்படுவது ஜப்பானிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருள். இது ஸ்குவிட் எனும் ஒரு கடல்வாழ் உயிரில் இருந்து பெறப்படுவது. அடர்த்தியாக இருக்கும் இதனை பயன்படுத்தும் போது ஓவியம் பிரட் நிறத்தோடு இணைந்து ஒரு புகைப்படம் போலவே காட்சியளிக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஓவியம் மட்டுமல்லாமல் பூக்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அதனை அழகு ததும்பும் ஒரு கலைப்பொருளாக மாற்ற பல மணிநேரங்களை செலவிடுகிறார் மானமி. இந்த பழக்கம் மனாமிக்கு ஊரடங்கு காலத்தில் உருவானதாம். பணிக்குச் சென்று வருகிற நேரம் எல்லாம் மிச்சம் ஆவதால் ரொம்பவும் சோம்பேறியாக போய் கொண்டிருந்த மானமியின் பொழுதுகளை சுவாரசியமாக மாற்ற பிரட் டோஸ்டில் ஆர்ட் செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த பழக்கம் காலையில் சீக்கிரம் எழவும் அவருக்கு உதவியிருக்கிறது. அப்புறம் மனாமி சிறு வயதில் இருந்தே தினமும் பிரட் டோஸ்ட் சாப்பிட்டு வருபவாராம். அதனால் இது தான் தனது கலையை வெளிப்படுத்த சிறந்த மீடியம் என்கிறார் மானமி. பிரட் சாப்பிட மட்டுமல்ல போல!