Published:Updated:

இயேசுவின் வரலாறு: 143 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் இடைக்காட்டூர் பாஸ்குவைப் பற்றித் தெரியுமா?

இடைக்காட்டூர் பாஸ்கு

"143 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த பிரமாண்ட நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் யாரும் நடிப்பதில்லை. நடிக்கும் அனைவரும் பல துறைகளில், பல பணிகளில் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் இடைக்காட்டூரை சேர்ந்த மக்கள் என்பதுதான் சிறப்பு."

இயேசுவின் வரலாறு: 143 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் இடைக்காட்டூர் பாஸ்குவைப் பற்றித் தெரியுமா?

"143 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த பிரமாண்ட நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் யாரும் நடிப்பதில்லை. நடிக்கும் அனைவரும் பல துறைகளில், பல பணிகளில் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் இடைக்காட்டூரை சேர்ந்த மக்கள் என்பதுதான் சிறப்பு."

Published:Updated:
இடைக்காட்டூர் பாஸ்கு
லாப நோக்கமில்லாமல் பக்தியின் வெளிப்பாடாக இயேசுவின் வரலாற்றை பாஸ்கு என்ற பெயரில் நாடகமாக்கி, அதில் ஊர் மக்கள் மட்டுமே நடித்து 143 ஆண்டுகளாக அரங்கேற்றி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
இடைக்காட்டூர் பாஸ்கு
இடைக்காட்டூர் பாஸ்கு

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் ஒவ்வொரு வருடமும் ஈஸ்டரைத் தொடர்ந்து 2 நாள்கள் நடக்கும் பாஸ்கு விழா பிரபலமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இடைக்காடர் சித்தர் வாழ்ந்த ஆன்மிக பூமியான இடைக்காட்டூரில் நவக்கிரக கோயில் உள்ளது. 150 வருடங்களுக்கு முன் இறை பணி செய்ய சிவகங்கை பகுதிக்கு வந்த பிரான்ஸ் நாட்டு பாதிரியார் பெர்டினண்ட் செல், இடைக்காட்டூரில் தேவாலாயம் கட்ட நினைத்தார். அதற்காக தன் சொத்துக்களை விற்றவர், கூடுதல் நிதி வசூலிக்க பிரான்ஸ் சென்றார். அங்கு இதய நோயிலிருந்து மீண்ட மரிய அன்னாள் என்பவர், பாதிரியாரின் நோக்கத்தை அறிந்து தன்னைக் காப்பாற்றிய இயேசுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இடைக்காட்டூரில் ஆலயம் கட்ட தேவைப்படும் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டார். இயேசு இதயத்தைத் திறந்து காட்டுவது போல் மார்க்கரேட் மேரி என்ற பிரான்ஸ் கன்னியாஸ்திரி உருவாக்கிய உருவப்படத்தையும் பாதிரியார் பெற்றுக் கொண்டு வந்தார்.

நாடகத்தில் ஒரு காட்சி
நாடகத்தில் ஒரு காட்சி

பிரான்ஸ் நாட்டின் கோத்திக் கட்டடக்கலை அடிப்படையில் நுணுக்கமாக அழகிய வேலைப்பாடுகளுடன் வானைத் தொடும் உயரத்தில் உறுதியான தரத்தில் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இதயத்தைத் திறந்து இயேசு காட்சி தரும் தேவாலயங்கள் இந்தியாவில் 3 உள்ளன. அதில் முக்கியமானது இடைக்காட்டூரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆலயத்தைக் காண வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகிறார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த ஆலயம் இருக்கும் இடைக்காட்டூரில் கூடுதல் பெருமையாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாஸ்கு விழாவும் அமைந்துள்ளது.

பாஸ்கு விழா
பாஸ்கு விழா

பாஸ்கு விழாவைக் காண நாம் இடைக்காட்டூர் சென்றிருந்தோம். அதிகமான மக்கள் வாழும் பெரிய ஊராட்சி. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் முத்தானேந்தலில் இடப்பக்கமாக பிரியும் பாலத்தை கடந்தால் இடைக்காட்டூர் ஊராட்சி வந்துவிடுகிறது. நாடகத்தைக் காண பல மாவட்டங்களிருந்தும் மக்கள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இடைக்காட்டூரில் அனைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் அரசுப் பணிகளில் உள்ளனர். எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் இந்த பாஸ்கு விழாவுக்கு வந்துவிடுகிறார்கள்.

நம்மிடம் பேசிய இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், "அந்தக் காலத்தில் பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவின் வரலாற்றை பொம்மலாட்டம், பாவைக்கூத்து மூலம் மக்களுக்கு புரிய வைத்த ஊர் மக்கள், பின்பு தமிழ் பண்பாட்டின் கலை வடிவமான மேடை நாடகமாக மாற்றித் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 143 வருடமாக நடத்தப்பட்டு வரும் இந்த பிரமாண்ட நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் யாரும் நடிப்பதில்லை. நடிக்கும் அனைவரும் பல துறைகளில், பல பணிகளில் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் இடைக்காட்டூரை சேர்ந்த மக்கள் என்பதுதான் சிறப்பு.

இருதயராஜ்
இருதயராஜ்

பாஸ்குவின் இயக்குநர் இருதயராஜிடம் பேசினேன். "நான் இப்ப தஞ்சாவூரில் வசிக்கிறேன். பாஸ்குவுக்காக ஒரு வாரம் முன்பே வந்துவிட்டேன். 30 வருடமாக இந்த பாஸ்குவின் இயக்குநராக இருக்கிறேன். அதற்கு முன் என் தந்தை இருந்தார். இயேசுவின் வரலாற்றை மக்களுக்கு அவர்களுக்குத் தெரிந்த நாடகம் மூலம் கொண்டு செல்வதுதான் இவ்விழாவின் நோக்கம். ஆனால், அதே நேரம் அந்தக் காலத்தில் பொம்மலாட்டம், கூத்து வடிவத்திலிருந்து நாடகமாக மாறியபோது நாடகப்பிரதியை எப்படி உருவாக்கினார்களோ அந்தத் திரைக்கதையை கொஞ்சமும் மாற்றாமல், வசன மொழி, உச்சரிக்கும் முறையில்கூட எந்த மாற்றமும் செய்யாமல் இதைச் செய்கிறோம். பாஸ்குவை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தாண்டுதான் டிஜிட்டல் திரைகள் பின்னணியில் நடத்த இருக்கிறோம்" என்றார்.

ஆசிரியர் ஜான் பெளீக்ஸ் கென்னடியிடம் பேசினேன், "நான் மதுரையில் வசிக்கிறேன். பூர்வீக ஊர் என்பதால் பாஸ்குவில் நடிக்க இடைக்காட்டூருக்கு வந்துவிடுவேன். ஸ்பிரிச்சுவலும் கல்ச்சுரலும் கலந்த நிகழ்வு இது. நூறாண்டுகளைக் கடந்து எங்கள் ஊரில் நடந்து வரும் பாஸ்குவில் நடிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். பாஸ்கு என்ற வார்தைக்கு கடத்துவது என்று பொருள். பாஸ் பண்ணுகிறோம் என்று சொல்கிறோமே அதுபோல. இயேசுவின் வாழக்கை வரலாற்றை மற்றவர்களுக்கு கடத்துவதுதான் இந்த பாஸ்குவின் நோக்கம். பாஸ்குவில் பேசப்படும் வசனங்கள் யாவும் பைபிளில் நற்செய்திகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

ஜான் பெளீக்ஸ் கென்னடி
ஜான் பெளீக்ஸ் கென்னடி

அந்தக் காலத்தில் இங்கு சேவையாற்றிய குருக்களாலும் ஊர்ப்பெரியவர்களாலும் வசனங்கள் எழுதப்பட்டு உருவாக்கப்பட்டது. நடிப்பவர்கள் அனைவரும் இந்த ஊரைச்சேர்ந்தவர்கள். வசனங்களில் காட்சிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து நடித்து வருகிறோம். பாஸ்குவுக்கு முன்பு 21 நாள்கள் பயிற்சி எடுப்போம். ஊர்க்காரர்கள் அதிகாமானோர் மதுரையில் உள்ளதால் அங்கேயே பயிற்சி எடுப்போம். மற்ற ஊர்களில் வசிப்பவர்களும் இங்கு வந்து விடுவார்கள்.

நாடகத்துக்கான செலவுகளுக்கு ஊரிலுள்ள உறவுகளிடம் வசூல் செய்கிறோம். இது பைபிள் அடிப்படையில் நடக்கும் நாடகம் என்றாலும், காட்சியமைப்புகள் சினிமா போல விறுவிறுப்பாக இருக்கும். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரு மாதம் விரதம் இருந்து பக்தி மன நிலையோடு நடிப்பார்கள். இந்தாண்டுதான் எல்.இ.டி திரையை பயன்படுத்தியுள்ளோம்.

இங்குள்ள அனைத்து மதத்தினரும் பாஸ்கு விழாவை கொண்டாடுகிறார்கள். மொத்தம் 55 பேர் நடிப்பார்கள். அப்பா அவருக்குப்பின் மகன் என்று பரம்பரையாக நடிப்பதையும் பலர் பெருமையாக நினைக்கிறார்கள். தமிழகத்தில் இன்னும் சில ஊர்களில் இதுபோன்ற பாஸ்கு நடத்தினாலும், பாஸ்கு என்றால் அது இடைக்காட்டூர்தான்" என்றார்.

பாஸ்குவில் பங்கெடுப்பவர்களில் சிலர்
பாஸ்குவில் பங்கெடுப்பவர்களில் சிலர்
நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ள செட்டுகள், உடைகள், ஒலி ஒளி அமைப்புகள் இயேசு வாழ்ந்த காலத்துக்கே மக்களை அழைத்து செல்கின்றன. மத ரீதியான நாடக விழாவாக இருந்தாலும், அதை அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் நாடகக் கலை விழாவாக நடத்தி, நாடு முழுவதுமிருந்து மக்களை இடைக்காட்டூருக்கு வர வைக்கிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism