Published:Updated:

``ரஜினி, எனக்காக பஸ்ஸில் சீட் ரிசர்வ் செய்து வைப்பார்!" - சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி

துளசி தாஸ் செளத்ரி

``ரஜினி எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். 45 வருஷத்துக்கு மேலயும் என் காத்திருப்பு தொடருது."

``ரஜினி, எனக்காக பஸ்ஸில் சீட் ரிசர்வ் செய்து வைப்பார்!" - சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி

``ரஜினி எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். 45 வருஷத்துக்கு மேலயும் என் காத்திருப்பு தொடருது."

Published:Updated:
துளசி தாஸ் செளத்ரி

விடுமுறை தினம் அன்று. துளசி தாஸ் செளத்ரி என்ற ஆச்சர்யமான சர்க்கஸ் கலைஞர் குறித்து நண்பர் மூலமாகக் கேள்விப்பட்டேன். சர்க்கஸ் ஜோக்கரான அவரைக் காண, காலை 10 மணிக்கு சர்க்கஸ் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள எஸ்.ஐ.ஏ.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிகழ்ச்சி. பகல் 12 மணிக்குத்தான் முதல் காட்சி தொடங்கும் என்பதால், சர்க்கஸ் அரங்கத்தின் நுழைவு வாயிலில் யாருமில்லாத நிசப்தம். அதைக் கண்டதும் எனக்கு சிறிய ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்தது. 

துளசி தாஸ் செளத்ரி
துளசி தாஸ் செளத்ரி

முன்பெல்லாம், சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காண திருவிழாவைப்போல கூட்டம் கூடும். வனப்பகுதியிலும் வனவிலங்கு சரணாலயங்களிலும் மட்டுமே காண முடிகிற விலங்குகளை சர்க்கஸில் காணலாம். அவற்றைப் பயன்படுத்தி, சர்க்கஸ் கலைஞர்கள் சாகசம் செய்ய, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில், வனவிலங்குகளைப் பயன்படுத்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சர்க்கஸ் ரசிகர்கள் பலரும், அந்த நிகழ்ச்சியைக் காணச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவிர, பல்வேறு காரணங்களால் சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காணச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. அதேசமயம், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பல நூறு கலைஞர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம், உத்தரவாதம் இல்லாத நிலையில் தொடர்கிறது. நான் சென்றிருந்த `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிறுவனத்தின் சார்பில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார். வருத்தத்துக்குரிய இன்றைய சர்க்கஸ் சூழல்கள் குறித்து யோசித்தவாறே அரங்கத்தில் நுழைந்தோம். 

துளசி தாஸ் செளத்ரி
துளசி தாஸ் செளத்ரி

பகல் காட்சிக்கான ஏற்பாடுகளில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆங்காங்கே ஃப்ரேம் செய்யப்பட்ட பெரிய படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், முந்தைய காலங்களில் இந்திய அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வருகைதந்தது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்க்கஸ் நிறுவன மேலாளரைச் சந்தித்து, துளசி தாஸ் செளத்ரி குறித்து விசாரித்தேன். அவர், சர்க்கஸ் கூடாரத்துக்குப் பின்புறமிருக்கும் செளத்ரியின் தற்காலிக வசிப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். சிறிய கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர், சட்டென எழுந்தார்.

எம்.ஜி.ஆர் உடன் செளத்ரி (இடது புற ஓரத்தில் இருப்பவர்)
எம்.ஜி.ஆர் உடன் செளத்ரி (இடது புற ஓரத்தில் இருப்பவர்)

இரண்டடி உயரம் இருப்பவர், புன்னகையுடன் என்னை வரவேற்றார். அவரிடம் கைக்குலுக்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ``வணக்கம்! கொஞ்சம் கொஞ்சம்தான் எனக்குத் தமிழ் தெரியும். ஐ நோ இந்தி வெரி வெல்" என்று சிரித்தவாறே அருகிலுள்ள சேரில் அமர்ந்தார். அவரின் சர்க்கஸ் வேலைகள் குறித்து சிறிதுநேரம் உரையாடினார்.

`துளசி தாஸ் செளத்ரி... பகல் காட்சிக்கு நேரமாகிவிட்டது. அனைவரும் தயாராகுங்கள்' என்று ஊழியர் ஒருவரின் குரல் பலமாக ஒலித்தது. ``நிகழ்ச்சி முடிந்ததும் உங்களிடம் பேசுகிறேன். காத்திருங்கள்!" என்ற செளத்ரி, மேக்கப் அறைக்குச் சென்றார். சிறிதுநேரம் கழித்து, ஜோக்கர் வேடத்தில் அட்டகாசமாகவும் உற்சாகமாகவும் உள் அரங்கத்தில் நுழைந்தார். சர்க்கஸ் நிகழ்ச்சியில் சுறுசுறுப்புடன் தனது பணியைச் செய்தார். இரண்டரை மணிநேர பகல் காட்சி முடிந்ததும் நம் அருகில் வந்தார். அப்போதும்கூட அவரின் எனர்ஜி லெவல் குறையவேயில்லை. 

துளசி தாஸ் செளத்ரி
துளசி தாஸ் செளத்ரி

``இப்போது பேசலாம்!" என்றவர், என் கேள்விகளுக்கு படபடவெனப் பேசினார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செளத்ரியை இளம் வயதில் குண்டுக்கட்டாக சர்க்கஸ் நிறுவனத்தினர் தூக்கிச்சென்றுள்ளனர். அவர்கள், செளத்ரியை சர்க்கஸ் வேலையில் சேரும்படி கேட்க, குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சர்க்கஸ் வேலையில் சேர்ந்திருக்கிறார். பிறகு, புதிய உறவுகள், நண்பர்கள், பல ஊர் பயணம் என சர்க்கஸே அவருக்கு உலகமானது.

12 வயதில் சர்க்கஸ் ஜோக்கராகப் பணியைத் தொடங்கியவருக்கு, தற்போது 74 வயது. கடந்த 62 ஆண்டுகளாக ஒரே சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். நிகழ்ச்சிக்கு வருகைதந்திருக்கும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடனும் நன்கு பழகியிருக்கும் செளத்ரி, அவர்கள் அனைவரையும் தனது மழலைத் தன்மை மாறாத குணத்தால் மகிழ்வித்திருக்கிறார். அது குறித்தெல்லாம் பேசப் பேச செளத்ரியின் முகத்தில் உற்சாகம் பிரகாசித்தது. 

துளசி தாஸ் செளத்ரி
துளசி தாஸ் செளத்ரி

``ஒருமுறை கேரளாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு, அப்போது நடிகையா இருந்த ஜெயலலிதா கலந்துகிட்டாங்க. அவரைக் கைகுலுக்கி வரவேற்று, `நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க'ன்னு சொன்னேன். சிரித்தவாறே, `நன்றி!'ன்னு சொன்னாங்க. கிளம்பி போறப்போ என்கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க. அதேபோல, நடிகர் ரஜினிகாந்த்துடன் நண்பராகப் பழகியிருக்கேன். என் வாலிப பருவத்துல பெங்களூர்ல சில மாதங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தினோம். காலை ஓய்வு நேரத்துல சுத்திப்பார்க்க பஸ்ஸில் பயணம் செய்வேன். அப்போது கண்டக்டராகப் பணியாற்றிய ரஜினியும் நானும் உரையாடல் மூலம் நண்பர்களானோம். எனக்கு சீட் ரிசர்வ் பண்ணிவைப்பார். தமாஸா பேசுவார்.

என் சர்க்கஸ் அனுபவங்கள் குறித்து தினமும் கேட்பார். நடிகரான பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை. அவர் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவருடன் பழகிய நினைவுகள் எனக்கு ஞாபகம் வரும். அவர் எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். 45 வருஷத்துக்கு மேலயும் என் காத்திருப்பு தொடருது" என்று ஏக்கத்துடன் கூறியவரின் விழிகள், ரஜினியைக் காண தற்போதும் ஏங்கிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

துளசி தாஸ் செளத்ரி
துளசி தாஸ் செளத்ரி

``குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு இருக்கிறது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அமையலைனு எனக்குள் வருத்தம் இருந்துச்சு. ஆனா, நான் வருத்தப்பட்டால், பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த முடியாது. எனவே, என் எல்லாக் கவலைகளையும் மறந்துட்டு, ஜோக்கர் வேலையை மகிழ்ச்சியுடன் செய்றேன்" என்றவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு சக சர்க்கஸ் கலைஞர்கள் நம்பிக்கையூட்டினர். மாலை வேளை சர்க்கஸ் காட்சிக்கான அறிவிப்பு ஒலித்தது. மீண்டும் ஜோக்கர் மேனாக உருமாற ஆயத்தமானர், செளத்ரி. அவருக்கு வாழ்த்துக்கூறி விடைபெற்றோம்!

துளசி தாஸ் செளத்ரியின் முழுப் பேட்டியை தற்போதைய ஆனந்த விகடன் இதழில் படிக்கலாம். மேலும், விகடன் இணையதளத்தில் படிக்க, https://bit.ly/2Sn0Dox - இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism