Published:Updated:

இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்!

ஜமீன்தாரர்
பிரீமியம் ஸ்டோரி
ஜமீன்தாரர்

வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்றும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை குறித்த தகவல்கள் இன்றைய கர்னாடக இசையில் உள்ள மூல இலக்கணங்கள் ஆநமது பழந்தமிழ் இசை இலக்கணத்திலிருந்தே வந்தன என்றும் அறிவித்தார்.

இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்!

வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்றும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை குறித்த தகவல்கள் இன்றைய கர்னாடக இசையில் உள்ள மூல இலக்கணங்கள் ஆநமது பழந்தமிழ் இசை இலக்கணத்திலிருந்தே வந்தன என்றும் அறிவித்தார்.

Published:Updated:
ஜமீன்தாரர்
பிரீமியம் ஸ்டோரி
ஜமீன்தாரர்

மீன்தாரர்களுக்கும் தங்கள் அடிவருடிகளுக்கும் மட்டுமே ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட ராவ்சாகேப் போன்ற பட்டம் ஒரு தமிழ்நாட்டு விவசாயிக்கு வேளாண்மைக் கண்டுபிடிப்பு களுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? ஆம், அதிக சுவை கொண்ட ராஜகரும்பு எனும் புதிய கரும்பு வகையை உருவாக்கியதாலும், இயற்கை முறையில் விவசாயத்தில் அதிக உற்பத்தியைத் தரும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததாலும் ஆங்கிலேய அரசு அந்தத் தஞ்சை விவசாயிக்கு ராவ்சாகேப் என்ற உயரிய பட்டத்தை வழங்கியது. அவர் பெயர் ஆபிரகாம் பண்டிதர். நூறு வருடங்களுக்கு முன்பே பல்வேறு துறைகளில் மேதையாக இருந்து பல்வேறு சாதனைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திக்காட்டிய தமிழர் ஆபிரகாம் பண்டிதர். அவருடைய நினைவு நூற்றாண்டு, இந்த ஆண்டு.

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்தார். ஆனாலும் தமிழ்கூறு நல்லுலகம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தேவை அவர் இசைத்துறையில் செய்த பல்வேறு ஆய்வுகளும், அதனால் விளைந்த பல்வேறு கண்டுபிடிப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.

எங்காவது இசைக்கச்சேரி நடந்தால் நேரில் சென்று பாருங்கள். பதினைந்து தெலுங்குக் கீர்த்தனைகள், ஒன்றிரண்டு தமிழ்ப்பாடல்கள், சில இசைக்கருவித் தனி ஆவர்த்தனங்கள் இவற்றுடன் அந்தக் கச்சேரி முடிந்துவிடும். சிலநாள் கழித்து இசை விமர்சகர்கள் அற்புதமான ஆலாபனை, மிக விஸ்தாரமான சஞ்சாரம், அழகான கமகப் பிரயோகம், அதிசயமளிக்கும் மனோதர்மம் என்றெல்லாம் எழுதுவார்கள், அல்லது, பேசுவார்கள். ஒரு இசைக் கலைஞருக்கு இவை யாவும் அவரின் படைப்புத் திறனுக்கு மிகத் தேவையான அவசியமான விஷயம்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்!

ஆனால், ஒரு மிகச்சிறந்த இசைக்கலைஞருக்கு எத்தனை ராகங்களில் ஆழமான திறமை இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள். இருபது ராகங்களுக்கு மேல் தாண்டாது. சிலர் வேண்டுமானால் சற்றுக் கூடுதலாகப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் யாரும் நூறு ராகங்கள் வரை அறிந்தவர்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. மகாகவி பாரதி அவர் காலத்தில் எழுதினார் ``எந்தக் கச்சேரிக்குப் போ, வித்வான் வாயைத் திறந்தால் வாதாபி கணபதி, அதைத் தவிர புதிதாய் ஏதும் இல்லை” என. அதுதான் இப்போதும் இங்கிருக்கும் நிலைமை.

இதற்கான காரணம் கர்னாடக இசையின் போதாமைதான். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசவையில் இருந்த கோவிந்ததீட்சிதர் நாயக்க மன்னர்களுடன் மிக நெருக்கமானவர். அவர் மகன் வேங்கிடமகி என்பவர் 300 வருடங்கள் முன் எழுதிய சதுர்த்தண்டிப் பிரகாசிகை எனும் நூலில் மேளகர்த்தா ராகங்கள் 72 என்ற கருத்து மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேளகர்த்தா என்பது தாய் ராகம். அதன் வழியாகப் பிறந்த குழந்தை ராகங்கள் ஜன்ய ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றியபோதே இசையை முறையாகக் கற்றுக்கொண்ட ஆபிரகாம்பண்டிதர் பின் தஞ்சைக்குச் சென்ற பின்னரும் இசைமீதுள்ள தீராக்காதலினால் நாகஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சிபெற்றார். இயல்பாகவே எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்திடும் பண்டிதருக்கு கர்னாடக இசையின் அடிப்படைகள்மீதும் அதன் சிக்கல்கள்மீதும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. எங்கெங்கோ விடைகளுக்கான தேடலில் தோற்றவர், கடைசியில் அதற்கான விடைகளைச் சிலப்பதிகாரத்தில் கண்டுணர்ந்தார். ஆம், சிலப்பதிகாரம் வெறும் கதையல்ல, இசை மற்றும் நடனம் குறித்த விரிவான விளக்கங்களைக் கொண்டி ருக்கும் காப்பியம். அதில் உள்ள மாதவியின் நடன அரங்கேற்றப் பகுதியிலும் ஆய்ச்சியர் குரவை, வட்டப்பாலை போன்ற பல்வேறு பகுதிகளிலும் நுட்பமாக ஆய்வு செய்தார். அதில் அவர் கர்னாடக இசை சொல்லும் 72 மேளகர்த்தா (தாய்ப்பண்கள்) ராகங்களுக்கு அறிவியல்பூர்வமாக வாய்ப்பில்லை என்பதைக் கண்டறிந்தார். அதற்குப் பதிலாக சுத்த மத்திமம், பிரதி மத்திமம் என்பவற்றில் ஒவ்வொன்றிலும் 16 ஆக 32 தாய்ப் பண்களுக்கே வாய்ப்பி ருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

இந்த 32 தாய்ப் பண்களில் (ராகங்கள்) உருவாகக்கூடிய ஜன்ய ராகங்கள் என்னும் சேய்ப் பண்கள் உருவாகும் முறை குறித்து ஆய்வு செய்தார். அப்போதுதான் பண்களுக்குள் நுட்பமாக ஒளிந்திருக்கும் கணித முறையை உணர்ந்தார். அடுத்து அந்தக் கணித முறையை விரிவுசெய்து புதிய ராகங்கள் உருவாகும் முறையைக் கண்டறிந்தார். அதை ஒரு கணிதச் சமன்பாடாக மாற்றினார். அதன் பெயர் ராகப் புட கணிதம். இந்தக் கணித முறையை முழுமையாகப் பயன்படுத்தும்போது பழைய தமிழ் இசையாசிரியர்கள் குறிப்பிடுவதுபோலப் புதிய ராகங்களை உருவாக்கிட இயலும் என நிறுவினார். அவர் இசைக்கு இலக்கணம் அமைக்கவில்லை. ஆனால் இசைக்கான விஞ்ஞான வழியை வகுத்த பெரும் அறிவியல் அறிஞர். 12,000 ராகங்கள் தமிழிசையில் உள்ளன எனத் தமிழ் நூல்கள் குறிப்பிடுவது உண்மை என நிறுவி முடிப்பதற்குள் இயற்கை அவரை 1919 ஆகஸ்ட் 31 அன்று தன்வசம் ஏற்றுக்கொண்டது, தமிழுலகத்திற்கும் தமிழிசைக்கும் மட்டுமன்றி உலக இசை மரபிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில் முத்துச்சாமி - அன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாக 2.8.1859இல் பிறந்தார். ஆபிரகாம் தமது தொடக்கக் கல்வியை சுரண்டை எனும் ஊரிலும், அதன் பிறகு, உயர்கல்வியைப் பன்றிகுளம் எனும் ஊரிலும் முடித்தார்.

இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்!

1874இல் திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன் மாணாக்கராகத் தேர்ச்சிபெற்றார். அவரின் தனித்திறமையை வியந்துபோற்றி அதன் முதல்வர் அருள்திரு யார்க் துரை, தமது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தார். பள்ளி வகுப்பறையில் பாடங்களை நேரடியாக நடத்தாமல், கதையின் ஊடாகவே வலியுறுத்துவார். இதன் காரணமாக அவரைப் பள்ளியில் ‘கதை வாத்தியார்’ என்று அழைத்தனர்.

திண்டுக்கல்லில் புகழ்பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பத்தரிடம் சரளி வரிசை, அலங்காரம், கீதம், கீர்த்தனை, வர்ணம் ஆகியவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத்தேர்ந்தார். இசைத்துறையில் இருந்து கொண்டே சித்த மருத்துவம் கற்றுக்கொள்வதிலும் ஆர்வ மிகுதியோடு காணப்பட்டார். அவர் நண்பருடன் சுருளிமலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கருணானந்த முனிவர் என்பவரைச் சந்தித்துப் பல்வேறு மருந்துகள் தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டார்.

1882இல் திருமணம் நடந்தது. இவரின் துணைவியார் ஞானவடிவு பொன்னம்மாள் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இருவருக்கும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திண்டுக்கல்லிலிருந்து தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தனர். அப்பள்ளியின் முதல்வர் அருட்திரு.பிளேக், பண்டிதர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அம்மையாருக்குத் தலைமை ஆசிரியர் பொறுப்பையும், பண்டிதருக்குத் தமிழாசிரியர் பொறுப்பையும் வழங்கினார்.

1890ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து இருவரும் விலகினர். மீண்டும் கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர். தொடக்கத்தில் பணவரவு அதிகம் இல்லை என்றாலும் காலப்போக்கில் ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் தயாரித்த கோரசனை மாத்திரை உள்ளிட்ட சித்த மருந்துகள், இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரு வரவேற்பைப் பெற்றது. மருந்து விற்பனை வழியாக அதிக அளவில் பொருளீட்டினார்.

அவரின் இரண்டாவது மனைவி கோவில் பாக்கியத்தம்மாள் ஆசிரியர், மிகச் சிறந்த இசை ஆளுமை. அந்தக் காலத்திலேயே வீணை, பியானோ போன்ற கருவிகளை இசைப்பதில் தேர்ச்சிபெற்றவர். அவர்கள் இருவருக்கும் இடையான மிக ஆழமான இசையினால் ஏற்பட்ட காதல் கதையைக் குறித்துப் பேசிட ஒரு தனிப் புதினமே எழுத வேண்டும்.

தஞ்சைக்கு அருகில் 100 ஏக்கர் பரப்பில் நிலமொன்றை விலைக்கு வாங்கி அதற்கு ‘கருணானந்தபுரம்’ என்று பெயரிட்டார். அங்கு உருவான தோட்டத்தில் மாங்கன்றுகள், பலாமரங்கள், தென்னைமரங்கள் வளர்க்கப் பட்டன. 1907 முதல் 1914 வரை நடைபெற்ற விவசாயப் பொருட்காட்சியில் கருணானந்தபுரத் தோட்டம் பங்குபெற்று 6 தங்கப் பதக்கங்களும், 37 வெள்ளிப் பதக்கங்களும் வென்றது.

திண்டுக்கல்லில் இருந்தபோது அச்சுத் தொழிலையும் கற்றவர் என்பதால், 1912இல் தஞ்சையில் மின்சக்தியால் இயங்கும் அச்சகத்தை ‘லாலி அச்சகம்’ எனும் பெயரில் நிறுவினார்.

1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டிதர் தமிழில் பாடல் எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு 96 தமிழிசைப்பாடல்களை இயற்றினார். 1912 முதல் 1916 வரை ‘சங்கீத வித்தியா மகாஜன சங்கம்’ பெயரில் பல இசை மாநாடுகளை தமது சொந்த முயற்சியிலும் செலவிலும் நடத்தினார். மேற்கத்திய இசை விற்பன்னர்களையும் இந்த மாநாட்டில் பங்கேற்க வைத்துத் தமிழிசைக்குப் புத்துயிர்ப்பு தந்தார்.

வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்றும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை குறித்த தகவல்கள் இன்றைய கர்னாடக இசையில் உள்ள மூல இலக்கணங்கள் என்றும், இன்று இசையின் அடிப்படைகளாக விளங்கும் ராகங்களும், பாடும் முறையும் நமது பழந்தமிழ் இசை இலக்கணத்திலிருந்தே வந்தன என்றும் அறிவித்தார்.

1916ஆம் ஆண்டில் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் கலந்துகொண்டு, தனது ஆய்வுமுடிவுகளை ஆய்வாளர்கள் முன் நிரூபித்தார். இசைத்தமிழ் குறித்து அரிய உண்மைகளை விளக்கும் வகையில் 1917ஆம் ஆண்டில் ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலினைப் பண்டிதர் வெளியிட்டார். இந்த நூல் தமிழிசை வ‍ரலாற்றில் ஒரு மைல் கல்.

பொதுவாகவே தமிழர் மனம் மறதி மிக்கது. அதிகமாகத் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்தவர்கள்மீதான மரியாதையும் நன்றியும் இல்லாதது. அவர் மறைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காற்றில் கரைந்த கீதம்போல அவரின் அளவிட முடியாத தமிழிசைக்கான கண்டுபிடிப்புகள் மறக்கப்பட்டன, மறைக்கப்பட்டன என்பது மிகக் கசப்பான வரலாற்று உண்மை. இனியேனும் அவரை மீட்டெடுத்து உரையாட வேண்டியது தமிழர் கடமை.