Published:Updated:

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!' - 40 அடி உயரத்தில் தயாராகும் வள்ளுவர் மணல் சிற்பம்

திருவள்ளுவர் மணல் சிற்பம்
திருவள்ளுவர் மணல் சிற்பம்

மாமல்லபுரம் சிற்பிகள், கல் சிற்பம் மட்டுமே செய்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், மாமல்லபுரத்தில் மணல் சிற்பம் செய்யும் சிற்பிகளும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கிறோம்.

மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி மற்றும் மல்லைத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து, கடந்த 2018-ல் திருவள்ளுவர் தினத்தில், 133 அடி நீளத்துக்கு திருவள்ளுவர் மணல் சிற்பத்தைச் செய்தனர். இந்திய அளவில் 100 அடிக்குமேல் செய்த முதல் மணல் சிற்பம் என்ற பெருமைக்குரியதாக அது அமைந்தது. அதுபோல் இந்த வருடமும் மாமல்லபுரம் கடற்கரையில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் எழுப்பிவருகிறார்கள், மாமல்லபுரம் சிற்பிகள்.

திருவள்ளுவர் மணல் சிற்பம்
திருவள்ளுவர் மணல் சிற்பம்

இதுகுறித்து மாமல்லபுரம் தலைமைச் சிற்பி பாஸ்கரன், “ஒவ்வொரு தை முதல் தேதி அன்றும் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திக் கொண்டாடிவருகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு, திருவள்ளுவருக்கு மல்லைத் தமிழ்ச் சங்கம், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி, மல்லையில் உள்ள சிற்பிகள் இணைந்து, 133 அடியில் பிரமாண்டமான மணல் சிற்பத்தை அமைத்தோம். இது, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் மணல் சிற்பத்தைப் பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். மாமல்லபுரம் சிற்பிகள், கல் சிற்பம் மட்டுமே செய்வார்கள் என்ற கருத்து உண்டு. ஆனால், மாமல்லபுரத்தில் மணல் சிற்பம் செய்யும் சிற்பிகளும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தி யிருக்கிறோம்.

பாஸ்கரன், மாமல்லபுரம் தலைமைச் சிற்பி
பாஸ்கரன், மாமல்லபுரம் தலைமைச் சிற்பி

இனி வரும் காலங்களில், திருவள்ளுவர் மணல் சிற்பத்தோடு ஒரு திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கம் தரக்கூடிய சிற்பங்கள் ஆகியவற்றைச் செய்யவும் முடிவெடுத்திருக்கிறோம். `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளைத் தேர்வுசெய்து, 40 அடியில், அமர்ந்த நிலையில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் அமைத்துவருகிறோம். மேலும், குறளுக்கான விளக்கத்தை 35 அடி அகலம் மற்றும் 10 அடி நீளத்தில் சிற்பங்களை வடிவமைத்து வருகிறோம். அதில், பல்வேறு தொழில்களைச் சார்ந்து வாழும் மக்கள், விலங்கு மற்றும் பறவைகள் எனக் காட்சிப்படுத்தி இருக்கிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

Vikatan

மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நம்மிடம் பேசுகையில், “கடந்த 10-ம் தேதியிலிருந்து சிற்பக் கல்லூரி மாணவர்கள் மணல் சிற்பத்தை வடிவமைத்துவருகிறார்கள். காலையில் 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மல்லைத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த சிற்பிகள் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள்.

ராஜேந்திரன், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர்
ராஜேந்திரன், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர்

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி மாணவர்கள், மணல் சிற்பம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இந்தச் சிற்பம் சான்றாக அமையும்” என்றார் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு