Published:Updated:

மெட்ராஸின் கதைகளைப் பதிவு செய்யவேண்டும்... `நம் ஊர், நம் வீடு, நம் கதை’ இளைஞர்கள் சொல்வது என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மெட்ராஸ்
மெட்ராஸ் ( ஓவியம்: பரத் குமார் )

“சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றாக இதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதாவது, எல்லோரையும் உள்ளடக்குவது என்பது தனித்த ஒன்றல்ல, அது இயல்பிலேயே அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.”

நம் வேர்களைத் தேடி, நம் வரலாற்றைத் தேடி, நம் கதையைத் தேடிப் புறப்பட்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த ‘நம் ஊர், நம் வீடு, நம் கதை’ மரபுக் குழு.
ஊர்க்கதை
ஊர்க்கதை
ஓவியம்: ஸ்ருஷ்டி
நம் ஊர், நம் வீடு, நம் கதை
நம் ஊர், நம் வீடு, நம் கதை

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் கட்டடக் கலைஞர் திரிபுரசுந்தரி செவ்வேள். இவரது முன்னெடுப்பால், 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நம் ஊர், நம் வீடு, நம் கதை’ மரபுக் குழு, இன்றைக்குச் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கட்டடக் கலை பயின்றிருக்கும் திரிபுரசுந்தரி, சென்னை திரும்பிய பிறகு மரபு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இதன் முதல்கட்டமாகப் பிரபலமில்லாத, ஆனால் கவனிக்கத் தவறிய இடங்களில் மரபு நடையை ஒருங்கிணைத்திருக்கிறார்.

“நான் கட்டடக் கலை படிக்கும்போது நகர்ப்புற வடிவமைப்பு, நகர்ப்புற கட்டடங்கள் சார்ந்து மாற்றங்கள் கொண்டுவரும்போது, அவற்றில் பயன்படுத்தும் பொருள்களைக் கவனப்படுத்துவார்கள்; பாரம்பர்ய கட்டடம் என்றால், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களை, அந்த வடிவமைப்பின் தொழில்நுட்பத்தைக் காப்பாற்றுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், அதைத் தாண்டி அதில் ஒரு வாழ்வு இருக்கிறது, வாழ்வாதாரம் இருக்கிறது என்பதை முதலில் நான் உணரவே இல்லை. இத்தனை பொருள்கள், தொழில்நுட்பத்தைக் காப்பாற்றுவது முக்கியம். அதே சமயம் அதற்குப் பின்னால் இருக்கும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவது அதைவிட முக்கியம்” எனப் படிப்பிலிருந்து சமூகப் பார்வை உருவான பின்னணியை விளக்குகிறார் திரிபுரசுந்தரி.

திரிபுரசுந்தரி செவ்வேள்
திரிபுரசுந்தரி செவ்வேள்

வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்குச் சென்னையின் பிரபலமான சுற்றுலாத் தலங்களை விடுத்து, நடுவக்கரை என்று முன்பு அழைக்கப்பட்ட அண்ணாநகர், அமைந்தகரை, திருவல்லிக்கேணியின் பழைய வீடுகள் என மரபு நடையை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். இந்த முயற்சியை அறிந்து, அண்ணாநகர் உருவாக்கத்தில் பங்கெடுத்த பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள் இவரைத் தொடர்புகொண்டு பழைய வரைபடங்கள், நகரத் திட்டங்கள் ஆகியவற்றை வழங்கியிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மக்களை மையப்படுத்திய செயல்பாடாக ஆரம்பத்திலேயே இதைத் திட்டமிட்டோம். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றாக இதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். கட்டணம் செலுத்த முடியாமல் ஒருவர் மரபு நடைகளைத் தவிர்க்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நடையின்போதும் ஐந்து பேர் வரை கட்டணமில்லாமல் பங்கெடுக்க வழிசெய்கிறோம். சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கதைகளாக இதுவரை சுமார் 600 பேரின் கதைகளைப் பதிவு செய்திருக்கிறோம்; இதன் மூலமான சென்னையின் வரலாற்றை, வெகுஜன மக்கள் வரலாற்றின் வழி ஆவணப்படுத்த முயன்றிருக்கிறோம்” என்று தங்கள் செயல்பாடுகளை விவரிக்கிறார் திரிபுரசுந்தரி.

மரபு நடை | Heritage walk
மரபு நடை | Heritage walk

மேலும், மெட்ராஸ் சார்ந்து உருவாக்கப்படும் கலைப் படைப்புகளை ‘மெட்ராஸ் இன்ஸ்பையர்ட்’ என்ற திட்டத்தின் மூலம் தொகுப்பது; நொடிந்துவரும் கலைகள், அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வது; ‘முற்றம்’ என்ற திட்டத்தின் மூலம் பாரம்பரிய பொருட்கள், வீட்டு உபகரணங்களை ‘தொட்டு-உணரும்’ கண்காட்சிகளை ஒருங்கிணைத்தல்; பழைய கடிதங்கள், நினைவுப் பொருட்கள், கருவிகள் ஆகியவற்றைப் பாதுகாத்துப் பராமரிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது. “‘நம் ஊர், நம் வீடு, நம் கதை’ என்பது நான் மட்டுமல்ல... பல தளங்களில் விரியும் இதன் செயல்பாடுகளை ஏராளமானோர் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

மதுர மக்கள்: கல்லூரி பேராசிரியை, வானொலி அறிவிப்பாளர், சமூக ஆர்வலர்... `யூ கேன்' அகிபாவின் கதை!

“அன்றாடம் நம்மைச் சுற்றி நிறைய நடக்கிறது; மக்கள் சார்ந்த ஏராளமான கதைகள் உருவாகின்றன. இந்தக் கதைகள் கேட்கப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும். நம் ஊரை, வாழிடத்தைக் கொண்டாடக் காரணம் தேவையில்லை; அப்படி ஒரு காரணம் இருந்தால் சந்தோஷம்தான். அந்தக் காரணங்களைத் தேடியதும், அதைக் கொண்டாடியதும் சுய விழிப்பை, அறிதலைக் கொடுத்திருக்கிறது; ‘நம் ஊர்’ ஒரு குடும்பமாகப் பரிணமித்திருக்கிறது” கண்கள் மிளிரச் சிரிக்கிறார் திரிபுரசுந்தரி.

கொண்டாடுவோம் நாமும் நம் ஊரை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு