Published:Updated:

எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்!- வாசகர் பகிர்வு #MyVikatan

Representational image
Representational image

அறிவாளிகள் மட்டுமே சிறப்பாக எழுதுவார்கள் என்ற எண்ணம் நம்மில் இருக்குமேயானால் நிச்சயம் நம்மால் முகநூலில் கூட எதுவும் எழுத முடியாது. அப்படி என்றால் முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் அறிவாளிகளா? என்ற எண்ணமும் வந்துவிடக் கூடாது

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் குருநாதர் தினந்தோறும் என்னிடம் கூறும் சொல்... எழுது, எழுதினால் மட்டுமே எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க முடியும். அதுமட்டுமன்றி, எழுதினால் மட்டுமே மனதில் நீண்ட காலம் பதியும் என்பார். உண்மைதான், நாம் பள்ளிக்காலங்களில் எழுதுவதின் நோக்கத்தை ஆசிரியர்கள் நமக்கு வேறுவிதமாக உணர்த்தினார்கள். வீட்டுப்பாடம் எழுதிவா, வாய்ப்பாடு 5 முறை எழுதிவா என்றெல்லாம் நம்மைப் பழக்கியுள்ளார்கள்.

நம்மில் நிறைய பேருக்கு அதன் பயன் புரியாமல், ஆசிரியர்கள் மீது கோபம் கொண்டதுதான் மிச்சம். இன்று அதன் பலனை உணரும்போது வாழ்நாளில் நிறைய நாள்களையும், விலைமதிக்க முடியாத நேரங்களையும் வீணடித்துவிட்டேன் என்றே தோன்றுகிறது. எழுதுங்கள் என்றதும் என்ன எழுத வேண்டும்? பார்த்து எழுதணுமா? பாக்காம எழுதணுமா? என்கிற மாதிரியான கேள்விகள் எழலாம். அதற்கான பதில்கள் பல உள்ளன.

Representational image
Representational image

பள்ளி மாணவர் வீட்டுப்பாடம் என்ற பெயரில் எழுதுவதும், கல்லூரி மாணவர் அசைன்மென்ட் என்ற பெயரில் எழுதுவதும் ஒருவகையான எழுத்துத் திறன்தான். அதிலும் மேற்கண்டவை யாவும் யாரோ எழுதிய புத்தக்கத்தில் உள்ளதைப் பார்த்து எழுதுகிறோம். சில நேரங்களில் இணையத்தில் உள்ள தகவல்களைக் கூட எழுதுகிறோம். அதே புத்தகத்தில் உள்ளதைப் படித்துவிட்டு பார்க்காமல் எழுதினால் படிப்பாளி, என்கிறோம். ஆனால் ஒரு போதும் அறிவாளி என்று கூறுவதில்லை. அப்படி கூறுவதும் தவறு என்பதே உண்மை.

சுயமாகச் சிந்தித்து, தனக்குத் தோன்றுவதை எழுதுபவர்களையே அறிவாளி எனலாம். அது உண்மையா அல்ல பொய்யா என்பதை பிறகு ஆராயலாம். எழுத்து நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும். நம் நினைவில் நின்றவை, கற்பனையாக தோன்றுபவை என அனைத்தையும் பதிவு செய்ய கருவியாக உள்ளது எழுத்து. எழுதுவதன் மூலம் மறந்து போன யாவும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. எழுதுவதன் மூலம் நமக்குப் பல யோசனைகள் வரும், அந்த யோசனைகளே மீண்டும் எழுத்து வடிவம் பெற்று கதையாகவோ, கவிதையாகவோ உருவெடுக்கும். எழுதுவது மனவுளச்சலை ஏற்படுத்தாது.

அதனால்தான் சிலர் தினசரி இரவு தூங்கச் செல்வதற்கு முன் டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். அறிவாளிகள் மட்டுமே சிறப்பாக எழுதுவார்கள் என்ற எண்ணம் நம்மில் இருக்குமேயானால் நிச்சயம் நம்மால் முகநூலில் கூட எதுவும் எழுத முடியாது. அப்படி என்றால் முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் அறிவாளிகளா? என்ற எண்ணமும் வந்துவிடக் கூடாது. உலகில் உள்ள எழுத்தாளர்கள் யாவரும் அறிவாற்றலின் காரணமாக எழுத தொடங்கியவர்கள் அல்ல. யாரோ எழுதிய நூல்களைப் படித்துவிட்டு தங்கள் கற்பனைக்கு எட்டுகிற வகையில் தானும் எதாவது எழுதுவோம் என்று எழுதத் தொடங்கியவர்கள்.

Representational image
Representational image

பின் எது தோன்றுகிறதோ அதை எழுதத் தொடங்கி, அதிலிருந்து பிழைகளைத் திருத்திக்கொண்டு, தங்கள் வாழ்வில் நிகழ்ந்தவற்றையும் சில கற்பனையோடு எழுத, அது அவர்களுக்கு வேறுவிதமான உலகத்திற்கு கொண்டு செல்கிறது. எழுத்தின் மீது கொள்ளும் காதலின்பால் முழுநேர எழுத்தாளர்களாக மாறிவிடுகிறார்கள். இது மேலும் அவர்களை நிறைய எழுத தூண்டும். அதற்காகப் பலவற்றை கற்க வேண்டிய சூழல் ஏற்பட, அதையே வாழ்க்கையின் தேடலாகக் கொண்டு பயணிக்கத் தொடங்கிய எழுத்தாளர்களே அதிகம். கதை, கவிதை, கட்டுரை என எழுதுவதற்கு நிறைய முறைகள் உண்டு. எப்படி இருந்தாலும் எழுத்துக்குதான் மதிப்பு உண்டு.

நாம் சொல்ல வருவதை கதையாகச் சொன்னாலும், கவிதையாகச் சொன்னாலும், கட்டுரையாகச் சொன்னாலும் பொருள் என்னவோ ஒன்றுதான். பிறருக்கு தான் கூற நினைக்கும் தகவலை பொருள்மாறாது கூறவேண்டுமே தவிர முறை மாறாமல் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாவரும் எழுத தகுதியானவர்கள் என்பதை உணர வேண்டும். முகநூலில் பதிவிடும் இரண்டு வரி கருத்தோ, செய்தியோ கூட ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. நமக்கு தெரிந்த ஒன்றை முகநூலில் பதிவிடுகிறோம், அதைச் செய்தியாகப் பார்ப்பார்கள்.

அதனுடன் நம்முடைய எழுத்துத் திறனையும் கவனிப்பார்கள். சினிமா பார்த்துவிட்டு விமர்சனங்களை எழுதி பதிவிடுவோம், அதுகூட ஒரு வகையான எழுதும் திறன்தான். இப்படி நாம் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகளும் நம் எழுத்துத் திறனைக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் அதற்கு வரும் எதிர்கருத்துகள் என அனைவரிடமும் எழுதும் திறன் தற்போது மேம்பட்டுள்ளது.

Representational image
Representational image

எத்தனையோ பேர், சுயமாக எழுதும் கதைகளை, கட்டுரைகளை இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்களின் அறிவுக்கு எட்டியவற்றை எழுதுகிறார்கள், சிலர் தங்கள் அறிவுக்கு எட்டாத, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றையும் கூட எழுதுவார்கள். இங்கு எழுதுவதற்கு விதிகள் ஏதும் கிடையாது. அலங்காரச் சொற்கள் இல்லாமல் கூட எழுத இயலும் என்பதையும் அனைவரும் உணர வேண்டும். பரீட்சையில் தெரியாத வினாவுக்கு எழுதும் பதில் கூட ஒரு வகையான எழுதும் திறன் தான். இப்படி எழுதும் எழுத்துகளும், அதில் சொல்ல வரும் கருத்துகளும் தெளிவாக, பிழையில்லாமல் இருக்க வேண்டுமானால் நிச்சம் எழுதப் பழக வேண்டும். எழுதுங்கள், நிறைய எழுதுங்கள், என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள். எழுதுவது உங்களை மாற்றும், எழுத்து உங்கள் சமூகத்தை மாற்றும்.

- ப.சு.ராகவேந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு