Published:Updated:

அம்மா அப்பா கல்யாணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

இந்த விஜயதசமிக்கு வீடு சுத்தம் செய்யும் பொழுது ஒரு பெரும் புதையலாய் முப்பத்தியெட்டுப் புகைப்படங்கள் தம்பிக்குக் கிடைத்தன

ஒவ்வோர் அரண்மனைக்கும் ஓராயிரம் கதைகள் இருப்பது உண்டு. நாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த‌ ஒவ்வொரு வீடும் ஒரு அரண்மனையே..ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு சரித்திரம் உண்டென்றால் நம் அரண்மனைக்கும் அரசர்கள் இருந்தது உண்டு.. அரசிகளும் ஆண்டது உண்டு..இளவரசர்களும் இளவரசிகளும் பிறந்து வளர்ந்ததுண்டு..சிறு பெரும் சரித்திரங்கள் நமக்கென்று நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருந்த‌துண்டு..

இந்த விஜயதசமிக்கு வீடு சுத்தம் செய்யும் பொழுது ஒரு பெரும் புதையலாய் முப்பத்தியெட்டுப் புகைப்படங்கள் தம்பிக்குக் கிடைத்தன. ஒளி திருத்தி ஒளி பெருக்கி அனுப்பி இருந்தான்.. நாற்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன் அப்பா அம்மா கல்யாணத்தில் எடுத்த அந்தப் புகைப்படங்கள் ஒரு பெரும் கதைப்பெட்ட‌கத்தைக் கட்டவிழ்த்துக் கொட்டிச் சென்றது. தலைமுறைகள் கடந்து வந்த வழித்தடத்தை.. ஒரு காலத்தில் ஒன்றி ஓடிய சக்கரங்கள் காலத்தின் வேகத்தில் ஏதோ தனித்தனி அச்சுக்களில் இன்றும் மிகத்தள்ளிச் சுழல்வதை.. நான் கதைகளாய்க் கேட்டதை என் கண்களை ஈரமாக்கும் அந்தப் பழைய‌ நினைவுகளை உணர்வுகளை அந்தப் புகைப்படங்களுடன் அப்படியே மை விகடனுக்கு எழுதிப் பகிர்கிறேன்.. இந்தக் கட்டுரை எவ்வளவோ குடும்பங்களின் உறவுச்சங்கிலிகளை இன்னும் இறுகப் பிணைக்கலாம்..இழைந்து அறுந்த உறவுச்சங்கிலிகளை மெல்ல பிணைத்தும் வைக்கலாம்!

Representational Image
Representational Image

தன் பதினான்கு வயதில் தந்தையை இழந்த என் தந்தைக்கு என் பெரியப்பாவும் பெரியம்மாவும் தாயும் தந்தையுமாய் இருந்தார்க. தன் பதினேழு வயதில் தன் தாயையும் தன் தந்தையையும் இழந்த என் அம்மாவுக்கு, அவரின் அக்கா (என் பெரியம்மா) தந்தையும் தாயுமாய் நடத்தி வைத்த கல்யாணம்தான் எங்கள் அம்மா அப்பா கல்யாணம்.

எங்கள் அப்பா வழி பெரிய அத்தையின் கல்யாணம் ஆறுநாள் வீட்டிலேயே சாமை அரிசிச் சோறும் சோளப்பணியாரமும் கருப்பட்டி ஒப்புட்டும் நெல்லுச்சோறும் மொச்சைக் குழம்புமாய் நடந்தது.

பெரிய கோபக்காரி எங்கள் சின்ன அத்தையின் கல்யாணம் சின்ன கோயிலில் நடந்தது..எங்கள் தாத்தா இறந்த பிறகு வீட்டிற்கு ஒரு கூரை உடனே தேவைப்பட்டதால் என் பாட்டி எங்கள் பெரியம்மாவையே எங்கள் வீட்டின் கூரையாய்க் கொண்டு வந்தாள். அதனால் பெரியப்பா பெரியம்மா திருமணம் இரண்டு மூன்று மாட்டு வண்டிகளில் தட்டு முட்டுச் சாமான்களோடு போய் அவ்வளவு எளிமையாய் நடந்திருந்தது.

திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

அவ்வளவு வறுமையை வென்ற பிறகு என் அப்பாவின் திருமணம் பத்திரிகை அடித்துப் போதாமல் அவ்வளவு பேருக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைத்து பொள்ளாச்சியின் அப்போதைய பெரிய மண்டபம் S R M S மில்லில் நடந்தது. பொள்ளாச்சியின் அப்போதைய சமையல் ஜாம்பவான்கள் வெங்கிட்டு அய்யரும் கங்காதரன் அய்யரும் பாண்டியன் அண்ணனும் சேர்ந்து சமையல் செய்த கல்யாணம். அவ்வளவு புகழ் பெற்ற ஓவியர் பொள்ளாச்சி P T ராஜன் புகைப்படங்கள் எடுத்தது.

பின் நாள்களில் பாண்டியன் அண்ணனைப் பார்க்கும் பொழுது அவர் என்னிடம் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வார். ``ஆள் கூட்டம் தாங்காம எவ்வளவு தடவ கோதும ரவயத் தாளிச்சோம் தெரியுமா.. விருப்பாட்சி மலை வாழைப்பழம் அவ்வளவு காசு குடுத்து வாங்கி வெச்சுதுடே...பந்தி பரிமாறுன ஆளுகளுக்குக் கடைசியில வெறும் கோதும ரவயும் தொவையலுமே வெச்சுதுடே.. அதனால அடுத்த வாரமே பந்தி பரிமாறுன ஆளுகளுக்கும் முன்ன நின்ன ஆளுகளுக்கும் பந்தக்கெடா வெட்டி கறிவிருந்து அதே S R M S மில்லில் வெச்சுதுடே..வெங்கிட்டு அய்யரும் கங்காதரன் அய்யரும் கறிச்சோறு சமைக்க மாட்டாக.. நாந்தென்லெ ஒங்ஙொப்பன் கல்யாணத்து பந்தக்கெடா கறிவிருந்துக்கு கரண்டி புடிச்சது.." அவர் ஒவ்வொரு முறையும் பேசும்பொதும் அவ்வளவு சிலாகித்துப் பேசுவார்.

பாட்டியுடன் அம்மா அப்பா
பாட்டியுடன் அம்மா அப்பா

என் அப்பாவை அவ்வளவு தலை முடியுடன் என் கண்களின் கண்ணீர் மறைக்கப் பார்த்தேன். பதினெட்டு வயதில் அம்மாவின் கண்களில் அவ்வளவு ஒரு மிரட்சி தெரியும். எங்கள் பாட்டி ஒரு முழு வாழைத்தாரை சந்தையிலிருந்து தன் தோளில் தினமும் சுமந்து வந்து தெப்பக்குளத்து வீதியில் பெட்டிக்கடை நடத்தியவள். தனது பிள்ளைகளைப் போராடிக் கரை சேர்த்து எங்களுக்கு என்றும் கலங்கரை விளக்கானவள்.

இடது கோடியில் எங்கள் பெரியப்பா. எங்கள் பெரியப்பா வெள்ளை வேட்டி கட்டி வெள்ளைச் சட்டை போடத் தொடங்கியதுதான் எங்கள் வறுமை வில‌கியதன் முதல் அடையாளம். பதினான்கு வயதில் அப்பாவை இழந்த அப்பாவுக்கு அப்பாவாய் வளர்த்துத் தொழில் சொல்லிக்கொடுத்து வாழ்வினை அமைத்துக் கொடுத்த கடவுள் எங்கள் பெரியப்பா.

அம்மா அப்பா கல்யாணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan

என் அப்பா இறக்கும் முன் எனக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் பெரியப்பாவைப் பற்றி எழுதியவை அவ்வளவு உணர்வு பூர்வமானவை. பொருளையும் சொத்துகளையும் மட்டுமே கணக்கிட்டுக் கோடிட்டுக் கொண்ட எங்கள் தலைமுறைக்கு அந்த வறுமையும் வறுமையை வென்றெடுக்கத் தேவைப்பட்ட உழைப்பையும் அந்தக் கடிதம் என்றும் சொல்லும்.

அப்பாவுக்குத் தெரியாது அதுதான் அவர் எனக்கு எழுதும் கடைசிக்கடிதம் என்று. தெரிந்திருக்குமேயானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுதியிருப்பார். என் அப்பாவின் அருகில் நிற்பவள் பெரியக்கா. எங்கள் வீட்டு தேவதை அவள்.

ராமதாஸ்  அண்ணன்..
ராமதாஸ் அண்ணன்..

அப்பாவுக்கு கல்யாண‌ப்பரிசு கொடுக்கும் ராமதாஸ் அண்ணன். அவர் சின்ன பையனாய் இருந்த போது தள்ளு வண்டியில் விற்கும் பட்டாணி சுண்டல் வாங்கி என் பெரியப்பா அடிக்கடி கொடுத்ததுண்டு. பிறகு வாழ்வில் அவர் அவ்வளவு உயர்ந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் பெரியப்பா இறக்கும் வரை தீபாவளிக்கு வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் எடுத்துக் கொடுக்காமல் இருந்ததே இல்லை.

எங்கள் பெரிய அத்தை எங்கள் பெரிய மாமா. எப்பொழுது எங்கள் வீட்டுக்கு வந்தாலும் ஜோதி பேக்கரியின் பூ கேக் வாங்காமல் வரமாட்டார். அதனாலேயே அவர் எங்களுக்கு கேக் மாமா. அப்பாவுக்கு மோதிரம் போட்ட பூரிப்பில் அத்தையும் தங்க ரிஸ்ட் வாட்ச்சுடன் மாமாவும் புகைப்படத்தில் நிற்கின்றனர். அந்த மோதிரம் எங்கள் வீட்டுத் தரைக்கு அந்தக் காலத்தில் Red Oxide Cement போட அப்பா விற்றதும் ஒரு கதை. அதற்குப் பிறகு அப்பா தன் வாழ்நாள் முழுதும் மோதிரம் போடவேயில்லை.

பெரிய அத்தை பெரிய மாமா
பெரிய அத்தை பெரிய மாமா

எவ்வளவோ சூழ்நிலைகள் எவ்வளவோ காரணங்கள் அப்படியே படிப்படியாய் எங்களுக்கும் எங்கள் பெரிய அத்தைக்கும் போக்குவரத்து நின்றே போனது. அப்பா இறந்த பொழுது அவள் வந்து அழுத அழுகையில் அவள் சுமந்து சேமித்திருந்த அவ்வளவு ஈரத்தையும் எங்கள் முன் வீட்டு முற்றத்தில் அல்லவா கொட்டிச் சென்றாள் ?

எங்கள் சின்ன அத்தை. தன்னால் மோதிரம் போட முடியவில்லை..ஒரு அண்டாவே வாங்கி வைக்க முடிந்தது என்று அப்படி அழுது நின்றவளை சமாதானப்படுத்தி எடுத்த புகைப்படம். அவ்வளவு கோபக்காரி அவ்வளவு ரோசக்காரி. நெஞ்ச‌மெல்லாம் பாசம் கொண்டவள். அவ்வளவு வீடுகள் வாங்கி பின் சிறிய அக்காவைப் பெண் கேட்டு வந்தாள். அவள் வந்து பெண் கேட்டு தன் வசதியைப் பறை சாற்றி எல்லோரையும் உலுக்கி நின்றது அவ்வளவு கம்பீரம்.

சின்ன அத்தை
சின்ன அத்தை

சரி..அம்மாவை எப்படிச்சொல்வேன்? அப்பா எனும் ஆலமரத்தின் ஆணிவேரல்லவா அவள்..அவளை நான் அளந்து எழுதுவது ஆகாயத்தை அளப்பதைப்போல்…அது இயலாது..

காலங்கள் சுழச்சுழல தன் குடும்பம் தன் மக்கள் என்று நிலை கொண்டு போவதனால் விலகிப்போன உறவுகளின் தூரங்கள்.. ஆழ‌மாய்த் தேடிப் பார்த்தால் எவ்வளவு ஊற்றுக்கள் அவ்வளவு ஈரமாய் இன்னும் ஊறிக்கிடக்கிறது உள்ளுக்குள்.. உறவுகளில் விரிசல்கள் நிச்சயம் வந்தே தீரும். ஆனால் விரிசல்களை இட்டு நிரப்பவும் உறவுகளே வேண்டும்.

என் பாட்டி ஒரு கதையை அடிக்கடி சொல்வாள். முன்னொரு காலத்தில் எங்கள் குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவர் இருந்தார்களாம். அவ்வளவு ஒற்றுமையாய் வாழ்ந்தார்களாம். அவர்களுக்கு ஒரு சுரைக்கொடி ஒன்றே சொத்தாய் இருந்ததாம். அண்ணண் தம்பிக்குத் திருமணம் நடந்தது. அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தன. அந்தச் சுரைக்கொடி அவ்வளவு காய்த்துக் கொடி படர்ந்து இருந்ததாம். ஒரு நாள் குடும்பத்தில் நடந்த ஏதோ சண்டையில் அண்ணனோ தம்பியோ யாரோ ஒருவன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போகும் போது சுரைக்கொடியில் இருந்த‌ ஒரு சுரைக்காயையும் அறுத்துக் கொண்டு அதில் சரி பாதியை எடுத்துக்கொண்டு போய் விட்டானாம். அதிலிருந்து அந்தச் சுரைக்கொடி காய்ப்பதை நிறுத்தி வாடி மாண்டதாம்.

அம்மா அப்பா கல்யாணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan

அறுத்துக்கொண்டு போனவன் அண்ணனா அல்லது தம்பியா என்று நாங்கள் அவளிடம் விளையாடி வம்பு செய்வதுண்டு. உண்மையோ பொய்யோ என் பாட்டி இருந்த வரை குலத்திற்கு ஆகாது என்று சொல்லி எங்கள் வீட்டில் சுரைக்காய் சமைத்ததே கிடையாது. தொண்ணூற்றியெட்டு வயது வாழ்ந்த அவள் சுரைக்காய் சாப்பிட்டதே கிடையாது. ஆனால், என் அப்பா அதே கதையை இப்படி மாற்றிச் சொல்வார்..வீட்டை விட்டுக் கிளம்பிய அவன் சுரைக்கொடியில் காய்த்திருந்த ஒரு சுரைக்காயைப் பறித்து இரண்டு சமபங்காகப் பிரித்தான்..பிரித்து விட்டுக் சுரைக்குடுவையுள் இருந்த விதைகளை ஒன்று விடாமல் எடுத்து பத்திரமாய் ஈரமான‌ நிழலில் பரப்பி ஒரு பாதியை விட்டு மறு பாதியை மட்டும் எடுத்துச்சென்றானாம்..அந்த விதைகளில் இருந்து ஆயிரமாயிரம் சுரைகொடிகள் படர்ந்து காலம் காலமாய் அவ்வளவு காய்கள் காய்த்துக்கொண்டே இருக்கிறதாம்..

அப்படி ஒரு ஈரமான நிழலைத் தேடிய நெகிழ்வே இந்தப் பதிவு..

-ரமேஷ் கோபாலகிருஷ்ணன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல