Published:Updated:

``கலைஞருடைய பேச்சைப் போன்று ராமதாஸுடைய பேச்சு இருக்காது. ஆனால்..." - தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
News
தொல்.திருமாவளவன்

வடமாவட்டங்களில் இன்று அம்பேத்கர் சிலைகள் பரவலாக இருப்பதற்கு முதன்மை காரணம் ராமதாஸ்.

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திரு.தொல். திருமாவளவனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரபாகரனின் இறப்புக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு சார்பாக இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்தீர்கள் . அப்போது அவர்களின் விருந்தோம்பலை நீங்கள் ஏற்றிக்கொண்டீர்கள் என்ற விமர்சனம் எழுந்தது. அந்த பயணத்தைப் பற்றி முழுமையாக கூறுங்கள்?

2009-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த எங்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று முடிவுயெடுத்து கலைஞரை நான் சந்தித்தேன். போரின் அப்போதைய நிலையை பற்றியும் பிரபாகரனை பற்றியும் விளக்கிவிட்டு, இப்போதைய சூழலில் தேர்தலில் நிற்பது எனக்கு மிகவும் நெருடலாக இருக்கிறது, உளவியல் ரீதியாக தற்போது நான் மிகவும் பலவீனமாக உள்ளேன். அதனால் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை, ஆனால் எங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று கண்ணீர்மல்க கலைஞரிடம் விளக்கிவிட்டு வெளியேறினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னை மீண்டும் அழைத்த அவர் “ தேர்தலுக்கு முன் இங்கே குரல் கொடுக்கும் நீங்கள், தேர்தல் முடிந்துவிட்டால் எங்கே சென்று பேசுவீர்கள். அதனால் நீங்கள் நிச்சயம் தேர்தலில் போட்டியிட வேண்டும். பின் பாராளுமன்றத்திற்கு சென்று இந்த பிரச்சனையை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இவ்வாறாகத்தான் அத்தேர்தலில் வென்று M.P ஆனேன். பின்னர் இலங்கை செல்லும் கமிட்டியில் என் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வந்தது. முதலில் அதிலிருந்து வெளியேறவே எண்ணினேன். ஆனால் இத்தனை நாள் நான் போராடிய மக்களை சந்தித்து உரையாடக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் என்று என் கட்சி தோழர்கள் வற்புறுத்தவே அந்த கமிட்டியோடு இலங்கைக்கு பயணப்பட்டேன். நான் புலிகளின் பிரதிநிதி என்று அனைவரிடம் கூறிவிட்டு தான் விமானத்தில் ஏறினேன்.

இங்கு விருந்தோம்பல் என்ற சொல்லை பயன்படுத்துவது அருவருக்கத்தக்க செயல். எங்களுக்கு இலங்கையில் வழிகாட்டியாக இருந்தவர் அங்கு தமிழ் மக்களின் தலைவர்களுள் ஒருவரான ஆறுமுக தொண்டைமான். பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டு பலவித மக்களைச் சந்தித்தோம். ஒவ்வொரு இடத்திலும் எங்களை வரவேற்று உபசரித்தனர். ஆனால் ஒரு இடத்திலும் நாங்கள் தேநீரைக் கூட அருந்தவில்லை. இலங்கையின் வெளியுறவுதுறை அமைச்சர் அவருடைய தோட்டத்தில் விளைந்த டீ தூளை அளித்து எங்களை உபசரித்தார். அதை ஓர் சபை நாகரிகத்திற்காகவே வாங்கிக்கொண்டு பின்னர் அங்கேயே வைத்துவிட்டு தான் திரும்பினோம்.

இறுதியாகத்தான் ராஜபக்சேவை சந்திப்பதாக திட்டம் இருந்தது. அங்கேயும் அவருடனான சந்திப்பை புறக்கணிக்கவே எண்ணினேன். பின்னர் கமிட்டியின் மற்ற உறுப்பினர்களுடைய வற்புறுத்தலால் என் மனதை மாற்றிக்கொண்டேன். ராஜபக்சேவை சந்திக்க அவர் மாளிகைக்கு சென்றோம். ஒரு நாட்டின் பிரதிநிதியாக நான் அனுப்பப்பட்டதால் எனக்குள் இருந்த வலி, வேதனை அனைத்தையும் வெளிப்படுத்தாமல் உட்கார்ந்திருந்தேன்.

ராஜபக்சே பேசத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே என் பெயரைச் சொல்லி குறிப்பிட்ட அவர், நான் அவர்களுடைய நியாயத்தை கேட்காமலே இலங்கை அரசை விமர்சிப்பதாகவும், ஒரு பக்கத்தை மட்டும் அறிந்து செயல்படுவதாகவும் கூறினார். அவருக்கு என்னை தெரியாது என்றே முதல் நினைத்திருந்தேன். மேலும் நான் ராஜபக்சேயை ஏற்கனவே ஒரு முறை கொழும்புவில் சந்தித்து பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதையும் எங்களுக்குள் நடந்த உரையாடல் பற்றியும் நினைவு கூர்ந்தார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அந்த சந்திப்பு முடிந்து அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ராஜபக்சேவிற்கு அருகே டி.ஆர்.பாலு நின்றிருந்தார் அவருக்கு அடுத்ததாக நான் நின்றிருந்தேன். திடீரென்று என் கைகளை பிடித்த ராஜபக்சே “ பிரபகாரனுக்கு மிக நெருக்கமானவர் அல்லவா நீங்கள்? இறுதி போரில் அவரோடு உடன் நின்றிருந்தால் நீங்களும் மேலோகம் சென்றிருப்பீர்கள் ” என்று நகைச்சுவையாக கூற, அங்கிருந்த அனைவருமே அதற்கு சிரித்தனர். இதுதான் அங்கு நடந்தது.

மருத்துவர் ராமதாஸுடன் பல ஆண்டுகளாக பயணித்தவர் நீங்கள். உங்களுடைய பார்வையில் அவருடைய ப்ளஸ் மைனஸ் என்ன ?

ஆவேசமாக பேசும் வைகோ போன்றோ, அலங்கரித்து பேசும் கலைஞருடைய பேச்சை போன்றோ ராமதாஸுடைய பேச்சு இருக்காது. ஆனால் உணர்ச்சிகளை எழுப்பிவிடக்கூடிய அருமையான பேச்சாளர் அவர். அவரால் ஒரு மிகப்பெரிய மக்கள் திரளை தூண்ட முடியும். மேலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடைய அரசியல்வாதி அவர். அடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கக்கூடியதை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தக்கூடியவர்.

மிக சாதுர்யமாக இரண்டு திராவிட கட்சிகளையும் தன் கைக்குள் போட்டு விளையாடியக்கூடிய அளவுக்கு அரசியல் தெரிந்தவர். அவர் நினைத்திருந்தால் அனைத்து சமுதாயத்திற்குமான தலைவரான தேசிய அளவில் உயர்ந்திருக்க முடியும். அந்தளவுக்கு ஆற்றலை கொண்டவர். இந்தியாவில் தலித் அல்லாத எந்த ஒரு கட்சி தலைவரும் தன் கட்சிக்கொடியில் நீலத்தை சேர்த்தது கிடையாது. இதை முதன்முதலில் செய்தவர் ராமதாஸ். இதே போல தன் கொள்கை ஆசான்களாக பெரியார், மார்க்ஸ் மற்றும் அம்பேத்கரை வெளிப்படையாக அறிவித்தவரும் அவரே. தன் கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு தலித் இருக்கவேண்டும் என்று முதலில் செயல்படுத்தியவர்.

வடமாவட்டங்களில் இன்று அம்பேத்கர் சிலைகள் பரவலாக இருக்கக்கூடியதற்கு முதன்மை காரணம் ராமதாஸ். ஆனால் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ்-ன் சங்பரிவார் கும்பலுடைய சநாதன அரசியல் கும்பலின் சதி வலைக்குள் சிக்கி எங்களுக்கு தலித்துகள் அல்லாத பிற சாதி வாக்குகள் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அந்த இடத்தில் தான் அவர் சறுக்கிவிட்டார் என்று நான் நினைக்கிறன்.

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!