Published:Updated:

"ரஹ்மான்தான் இன்ஸ்பிரேஷன்!" - `விதை Art Space' உருவான கதை பகிரும் போட்டோகிராபர் அருண் டைட்டன்

சக்தி தமிழ்ச்செல்வன்

கலைத்துறையில இருக்கிறவங்களுக்கு இன்னைக்கு மகிப்பெரிய சவாலா இருக்கிறதே, வாழ்க்கைக்கும் கலைக்கும் இருக்கிற இடைவெளியைக் குறைக்கிறதுதான்.

A.R.Rahman with Arun Titan
A.R.Rahman with Arun Titan

"கலை மனிதர்களை மாற்றும். அந்த மனிதர்கள் இந்த உலகத்தை மாற்றுவார்கள்" - ஜான் பட்லர்.

ஆதிகாலம் தொட்டே கலையும் கலை குறித்தான செயல்பாடுகளுடனே மனிதன் பயணித்து வந்திருக்கிறான். மனித குலம் சந்தித்த மாபெரும் மாற்றங்களுக்குக் கலையும் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறது. பல கலைஞர்கள் தங்கள் கலையை ஒரு செயல்பாடாகவே மாற்றி பல புதியவர்களுக்கு வழித்தடம் வகுத்திருக்கிறார்கள். 'விதை - Art Space' அப்படியான ஒரு முன்னெடுப்பு. புகைப்படக்கலைஞர் அருண் டைட்டன் தன் குழுவினரோடு சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

Arun Titan's team with A.R.Rahman
Arun Titan's team with A.R.Rahman

அருண் டைட்டன் சமகாலத்தின் மிக முக்கியமான புகைப்படக் கலைஞர். இந்தியா முழுக்க அலைந்து பரந்துபட்ட இத்தேசத்தின் பல்வேறு முகங்களைத் தனது காமிராவில் பதிவுசெய்தவர். அவர் தொடங்கியுள்ள இந்த அமைப்பில் புகைப்படக்கலைஞர், ஓவியர், சிற்பக் கலைஞர், பறையிசைக் கலைஞர் எனப் பலதரப்பட்ட கலைஞர்கள் தம் படைப்புருவாக்கம் குறித்து உரையாடும் நிகழ்வை அடிக்கடி ஏற்படுத்தி வருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றைய தினம் அருண் டைட்டனின் ஸ்டூடியோவைத் திறந்து வைத்து , 'விதை Art Space' அமைப்பு குறித்துப் பேசியுள்ளார். அது குறித்தும், 'விதை Art Space' அமைப்பு குறித்தும் அருண் டைட்டனிடம் பேசினோம்.

"கலைத்துறையில இருக்கிறவங்களுக்கு இன்னைக்கு மகிப்பெரிய சவாலா இருக்கிறதே, வாழ்க்கைக்கும் கலைக்கும் இருக்கிற இடைவெளியைக் குறைக்கிறதுதான். கலை வாழ்வியலோட இணைஞ்சு மக்களுக்கானதா இருக்கணும். அதைப் புரிஞ்சுகிறது ஒரு உள்ளுணர்வு. அதை நமக்கு முன்னாடி இருந்த மாஸ்டர்ஸ் நிறைய பேர்கிட்ட இருந்து நாம கத்துக்கிட்டு இருந்திருக்கோம். இருக்கிறோம். அந்தச் சூழல் இன்னும் அதிகமாகணும். அதற்கான ஒரு சின்ன முன்னெடுப்புதான் விதை.

A.R.Rahman with Arun Titan
A.R.Rahman with Arun Titan

உதாரணத்துக்கு இன்னைக்கு ஒரு போட்டோகிராபர்க்கு டெக்னிகலா கத்துக்க நிறைய ஆன்லைன் பிளாட்ஃபார்ம் இருக்கு. ஆனா, அதன் மூலமா திறனைதான் வளர்த்துக்க முடியுமே தவிர, நல்ல கலை படைப்பை உருவாக்க முடியாது. அதற்கு ஒரு டிராவல் தேவைப்படுது. அனுபவம் தேவைப்படுது. உரையாடல் அவசியமாகிறது. கலையினுடைய வேலை என்பது மனிதர்கள்கிட்ட இருக்கிற மனிதத்தை உணர வைக்கிறதுதான். கலை, சக மனிதனை நேசிக்கக் கத்துக்கொடுக்கும். அதற்கு அந்த கலை மக்கள் சார்ந்த ஒண்ணா இருக்கணும். அதை உருவாக்கணும்கிறது இன்னைக்குத் தேவையும்கூட!" என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை குறித்தும், ரஹ்மானுடனான அவரது பயணம் குறித்தும் கேட்டோம். "ரஹ்மான் சார் எனக்கு சின்ன வயசுல இருந்தே மிகப் பெரிய இன்ஸ்பிரேசன். பின்னாள்களில் நாம எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் எவ்வளவு பணிவா நடத்துக்கணும் அவரைப் பாக்குறப்போ தோணும். படங்களுக்கு மியூசிக் பண்றதைத் தாண்டி இசைப் பள்ளி மாதிரியும் சில விஷயங்கள் பண்ணக் கூடியவர். அவர்ட்ட என்னோட ஸ்டூடியோ ப்ளஸ் 'விதை - Art Space' பத்தி முன்னாடியே சொல்லியிருக்கேன். நேத்து ஸ்டூடியோவை ஓப்பன் செய்ய வந்தவர். ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க தொடர்ச்சியா பண்ணுங்கனு சொன்னார். ரொமப் சப்போர்ட்டிவான ஆள் அவர்.

A.R.Rahman inaugurating விதை art space
A.R.Rahman inaugurating விதை art space

விதை Art Space -ல ஓவியர் சந்துரு சார், பறையிசைக் கலைஞர் தினேஷ் சக்கரவர்த்தி மாஸ்டர், புகைப்படக் கலைஞர்கள் கார்த்திகேயன், பொன் பிரபாகரன், பழனிக்குமார் எல்லோரும் தங்கள் படைப்பு வெளி சார்ந்து பேசிருக்காங்க. கலை சார்ந்து கலை எந்தப் புள்ளில மக்களோடு இணையுது, கலை நம்மளை என்ன பண்ணும். அவங்களோட ஆர்ட் வொர்க் மூலமா அவங்க என்ன கத்துக்கிட்டாங்கணு நிறைய பேசினாங்க. இந்தப் பயணம் இன்னும் தொடரும். கலை குறித்தான உரையாடல்களுக்கு விதை நல்ல களமாக இருக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

கலை எப்போதும் சமரசமற்ற, ஆழமான அவதானிப்புகளையும் கொண்டே நிகழ்கிறது. கலை மனித மனங்களில் ஒன்றிப்போகும் தருணம் நிகழுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்தி உருவாக்க இயலாது. அந்த நிகழ்வுக்கு இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியமாகிறது.