
``நெல்உமியும் குறுமணலும் வெம்மை குளிர்ச்சி கலந்து தரும்.’’
உடைந்த மண்பாண்டமதை சரிபாதி இரண்டாக்கி
வாய்ப்பகுதி தரை கவிழ்த்து
அரைவட்டமதை மேலமர்த்தி
சிவன் சிரசின் பிறைவடிவில் தவப்படுக்கையதை அம்மா செய்வாள்.

நெல்உமியும் குறுமணலும்
வெம்மை குளிர்ச்சி கலந்து தரும்
மென்படுக்கையதனில் கருவிட்டு வம்சத்தவம் துவக்கும் கோழி.
கள்ளப்பூனை மூஞ்சூறு
களவாட அருகில் வர
காளி போல் வெகுண்டெழுந்து
காத தூரம் விரட்டி விடும்.
செல்லச்சேவல் நெருங்கி வர
மெல்ல மறுத்துத் திருப்பிவிடும்.
நள்ளிரவில் பார்த்தாலும்
வட்டவிழி முழித்திருக்கும்
எறும்புகூட ஏறிடாமல்
இமைக்காமல் காவல் காக்கும்.

மூன்றுவார கடுந்தவத்தில் மாமுனிகள் தோற்றுவிடும்
தவச்சூட்டின் வெம்மையிலே
கருத்திரண்டு உருவமாகும்.
பசி தாகம் மலம் அடக்கி
பல நாட்கள் தூங்கிடாத
தாய்க்கோழி சோர்வு கண்டு
பரிதவிக்கும் என் தாயின் மனதும்.

சிலிர்க்கும் முதுகிறகு பற்றி
பூப்பந்தெனத் தூக்கிவந்து
வெளிமுற்றம் இறக்கிவிட்டு
வெயில் முகத்ததனைக் காட்டி
கேழ்வரகும் கம்பும் கொடுத்து
கிண்ணத்தில் தண்ணீர் வைத்து
பசியடங்கித் தாகம் தீர்ந்து
பல நாளின் கழிவைத் தள்ளி
அடைக்கோழி திரும்பும் வரை
முந்தானைச்சேலை அடைமேல் போர்த்தி
தாய்க்கோழியாய் நிற்பாள் அம்மா..!
-நாராயணபுரம் கணேசவீரன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/